வாசக மறையுரை (நவம்பர் 29)

திருவருகைக் காலத்தின் முதல் வாரம்
திங்கட்கிழமை
I எசாயா 2: 1-5
II மத்தேயு 8: 5-11
தாழ்ச்சியும் ஆசியும்
சாமுவேல் மோர்சின் தாழ்ச்சி:
ஒருமுறை செய்தியாளர் ஒருவர் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளரும் ஓவியருமான சாமுவேல் மோர்சிடம், “உங்களுக்கு எபோதாவது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அனுபவம் ஏற்பட்டிருக்கின்றதா?” என்றார். அதற்குச் சாமுவேல் மோர்ஸ், “ஒருமுறை அல்ல, பல முறை இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. அப்போதெல்லாம் நான் முழந்தாள் படியிட்டு, கடவுளிடம், ‘கடவுளே! எனக்கு நல்வழியைக் காட்டியருளும்’ என்று நம்பிக்கையோடு வேண்டுவேன். கடவுளும் எனக்கு நல்வழி காட்டுவார்” என்றார்.
சாமுவேல் மோர்ஸ் அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய அறிவியல் மேதை. அவருடைய கண்டுபிடிப்புகளுள் ஒன்றுதான் தந்தி. அறிவியலில் பல சாதனைகளை இவர் புரிந்திருந்தாலும், தன்னுடைய ஆற்றலால்தான் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது என்று இவர் நினைக்காமல், கடவுளுடைய அருளால்தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க முடிந்தது என்று நினைத்தது இவர் எத்துணை தாழ்ச்சியானவர் என்பதை நமக்குக் காட்டுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகம் நூற்றுவத் தலைவரின் தாழ்ச்சியை நமக்குக் காட்டுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
உரோமை இராணுவத்தில், நூறு படைவீரர்களுக்குத் தலைவராக இருந்தவர்தான் நூற்றுவத் தலைவர். இவருக்கென்று அதிகாரம் உண்டு. இப்படிப்பட்ட நூற்றுவத் தலைவருடைய மகன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுறுகின்றான். இதை அந்த நூற்றுத் தலைவர் இயேசுவிடம் சொல்கின்றபோது, இயேசு அவரிடம், “நான் வந்து, அவனை நலமாக்குவேன்” என்கிறார். அப்போது நூற்றுவத் தலைவர் அவரிடம், “நீர், என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க, நான் தகுதியற்றவன்….” என்கிறார்.
யூதர்கள் பிற இனத்தாரின் வீட்டிற்குள் நுழைந்தால் தீட்டு என்று கருதப்பட்டது (யோவா 18: 28). இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், நூற்றுவத் தலைவர் தன் தகுதியின்மையை உணர்கின்றார். அதனால்தான் அவர் இயேசுவிடம், நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன் என்கிறார். லூக்கா நற்செய்தியிலோ, நூற்றுவத் தலைவர் இயேசுவிடம் வராமல், யூதர்களின் மூப்பர்களை அவரிடம் அனுப்பி வைப்பார் (லூக் 7: 3-6). அந்தளவுக்கு அவர் தன் தகுதியின்மையை உணர்ந்திருப்பார். இப்படித் தாழ்ச்சியோடும் கூடவே, ஆழமான நம்பிக்கையோடும் இருந்த நூற்றுவத் தலைவரைப் பார்த்து, வியந்து, இயேசு அவருடைய மகனுக்கு நலமளிக்கின்றார்.
இயேசு பிற இனத்தாரான நூற்றுவத் தலைவருடைய மகனுக்கு நலமளித்தன் மூலம், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல, மெசியாவாம் இயேசு எல்லாருக்குமானவராகின்றார். எனவே, நாம் எல்லாருக்கும் வாழ்வளிக்கும் இயேசுவிற்கு முன்பாகத் தாழ்ச்சியோடும், அவர்மீது நம்பிக்கையோடும் வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 தாழ்ச்சி என்பது ஒரு செயல் நடக்கவேண்டும் என்பதற்காகக் கூழைக் கும்பிடு போடுவது அல்ல.
 நம்முடைய இயலாமையையும், கடவுளுக்கு முன் நமது ஒன்றுமின்னையையும் உணர்ந்து வாழ்வதே உண்மையான தாழ்ச்சி.

Comments are closed.