இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
செபமாலை மாதமான இம்மாதத்தின் 22-ம் நாளான இன்று, நாம் இறைசித்தத்தை அறியும் ஞானத்தையும், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் இறைவன் நமக்குத் தந்தருள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 119:77-ல்,
“நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
நோயினாலோ, வறுமையினாலோ துன்புறும் எண்ணற்ற மக்களின் மீது இறைவனின் இரக்கப் பார்வை கிடைக்கப் பெற வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
திருத்தந்தையான பின் தனது முதல் திருப்பலி மறையுரையில்,
“கிறிஸ்துவுக்காகக் கதவுகளை அகலத் திறந்து வையுங்கள்.” என கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுத்தவரும், இன்றைய புனிதருமான இரண்டாம் ஜான் பவுலை நம் வாழும் காலத்திலேயே நமக்குத் திருத்தந்தையாக திருச்சபைக்குத் தந்தருளின நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.