அக்டோபர் 23 : நற்செய்தி வாசகம்

மனம் மாறாவிட்டால், நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9.
அக்காலத்தில்
சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.
தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————-
தீர்ப்பிடாதே, மனம்மாறு!
பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் சனிக்கிழமை
I உரோமையர் 8: 1-11
II லூக்கா 13: 1-9
தீர்ப்பிடாதே, மனம்மாறு!
உன்னுடைய பிரதிபலிப்புதான் இந்த உலகம்:
மலையடிவாரமாய் இருந்தது அந்தத் துறவுமடம். அங்கிருந்த துறவிக்கு ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் துறவி, சந்திரன் என்ற சீடனை அழைத்து, “நீ பக்கத்து ஊருக்குப் போ. அங்கே யாராவது ஒரு நல்லவர் இருந்தால் அவரைக் கையோடு அழைத்துக் கொண்டு வா” என்றார். துறவி தனக்குப் பணித்தவாறு சந்திரன் என்ற அந்தச் சீடன் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அவன் அங்கிருந்து சென்றபிறகு துறவி, பூபாலன் என்ற சீடனை அழைத்து, “நீயும் பக்கத்து ஊருக்கு போ. அங்கே யாராவது ஒரு கெட்டவர் இருந்தால், அவரைக் கையோடு அழைத்துக் கொண்டு வா” என்றார். பூபாலன் என்ற அந்தச் சீடரும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றான்.
மாலை வேளையில், பக்கத்து ஊருக்குப் போன இரண்டு சீடர்களும் துறவுமடத்திற்கு வந்து துறவியைச் சந்தித்தார்கள். முதலில் துறவி சந்திரனிடம், “பக்கத்து ஊரில் நல்லவர் யாருமே இல்லையா?” என்று கேட்டதற்கு, அவன் அவரிடம், “ஆமாம் சுவாமி! பக்கத்து ஊரில் நான் பார்த்த எல்லாருமே ஏதாவது ஒரு தவறு செய்துகொண்டே இருந்தார்கள். அதனால்தான் அந்த ஊரில் யாருமே நல்லவர் இல்லை என்று திரும்பி வந்துவிட்டேன்” என்றான்.
இதற்குப் பிறகு துறவி, பூபாலன் என்ற சீடனிடம், “பக்கத்து ஊரில் கெட்டவர் யாருமே இல்லையா?” என்றார். “நான் பார்த்தவரைக்கும் கெட்டவர் என்று யாருமே இல்லை சுவாமி. எல்லாரும் எதாவது ஓர் உதவியை மற்றவருக்குச் செய்துகொண்டிருந்தார்கள். அதனால்தான் அவ்வூரில் கெட்டவர் என்று யாருமே இல்லை என்று திரும்பி வந்துவிட்டேன்” என்று புன்னகை மாறாமல் மறுமொழி பகர்ந்தான் பூபாலன் என்ற அந்தச் சீடன்.
இருவர் சொன்ன பதிலையும் கேட்டு, ஏனைய சீடர்கள், “அது எப்படி ஒரே ஊரில் எல்லாருக்கும் கெட்டவர்களாகவும், எல்லாரும் நல்லவராகவும் இருக்க முடியும்?” என்றார்கள். அதற்குத் துறவி அவர்களிடம், “சந்திரனுக்குப் பக்கத்து ஊரில் இருந்த எல்லாரும் கெட்டவர்களாகத் தெரியக் காரணம், அவனுக்குத் தான் மட்டுமே நல்லவன்; மற்ற எல்லாரையும் கெட்டவர்கள் என்ற எண்ணம் இருப்பதாலேயே ஆகும். பூபாலனைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தில் உள்ள எல்லாரும் நல்லவர்கள். அதனாலேயே அவன் பார்த்த எல்லாருமே அவனுக்கு நல்லவர்களாகத் தெரிந்திருக்கின்றார்கள்” என்றார்.
ஆம், ஒருசிலர் இந்த நிகழ்வில் வருகின்ற சந்திரன் என்ற சீடனைப் போன்று தான் மட்டும் நல்லவன், மற்றவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி மற்றவர்களைப் பாவிகள் என்று தீர்ப்பிடும் யாவரும் மனம்மாற வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது இன்றைய இறைவார்த்தை. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“பாவிக்குத் தான் அழிவு வரும்; குற்றமற்றவருக்கோ அல்லது நேர்மையாளருக்கோ அழிவு வராது” (யோபு 4:7) – இது எல்லாவற்றையும் இழந்து நின்ற யோபுவிடம் அவரது நண்பன் எலிப்பாசு சொல்லக்கூடிய வார்த்தைகள். “இரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா, இவர் பெற்றோர் செய்த பாவமா?” (யோவா 9:2) – இது பிறவிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டு இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்கின்ற கேள்வி.
இவையெல்லாம் ஒருவருடைய அழிவிற்கும், அவர் செய்யும் பாவத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்ற எண்ணத்தின் அடிப்படையில் பேசப்பட்ட வார்த்தைகள். இன்றைய நற்செய்தியில் இதைப் போன்றுதான் சிலர், “பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொண்டான்” என்று இயேசுவிடம் சொல்கின்றார்கள். இதற்கு இயேசு அவரிகளிடம், சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேர் இறந்ததைக் குறித்துப் பேசிவிட்டு, “மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்கிறார்.
இயேசுவைப் பொறுத்தவரையில் அடுத்தவரைத் தீர்ப்பிடுவது குற்றம். அதற்கு மாறாக அவர் மனம்மாறுவது நல்லது. இன்றைய முதல் வாசகத்தில் பவுல், இயேசு கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது என்கிறார். நாம் தண்டனைத் தீர்ப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், இயேசுவோடு ஒன்றித்திருக்க வேண்டும். நாம் இயேசுவோடு ஒன்றித்திருக்கின்றோம் என்றால், அடுத்தவரைத் தீர்ப்பிடக் கூடாது. ஏனெனில், தீர்ப்பிடும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உள்ளது.
இறைவாக்கு:
 உங்களுள் பாவம் இல்லாதவர் முதில் இப்பெண் மேல் கல் எறியட்டும் (யோவா 8:7).
 இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும் (யாக் 2:13)
 நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா? (உரோ 2:3)

Comments are closed.