வாசக மறையுரை (அக்டோபர் 16)

பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் சனிக்கிழமை
I உரோமையர் 4: 13, 16-18
II லூக்கா 12: 8-12
ஏற்றுக்கொள்ளுதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும்
இயேசுவை ஏற்றுக்கொண்டோர் அழிவிலிருந்து காப்பாற்றப்படல்:
இந்தோனேசியாவில் உள்ளது மெயுலாபோ (Meulaboh) என்ற ஊர். இங்கே நானுறுக்கும் குறைவான கிறிஸ்தவர்கள் உள்ளனர். எண்ணிக்கையில் சிறுபான்மையினரான இவர்கள், அங்கே எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் குறிப்பிட்ட ஒரு சமயத்தவரால், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடக்கூடாது; ஒருவேளை நீங்கள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட விரும்பினால், ஊருக்குள் அல்ல, ஊருக்கு வெளியே உள்ள மலைமேல் கொண்டாடுங்கள் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இது நடந்தது 2004 ஆம் ஆண்டு,
மெயுலாபோ என்ற அந்த இடத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் அவர்கள் ஊருக்குள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட முடியாவிட்டால் என்ன, மலைமேல் அதைக் கொண்டாடுவோம் என்று, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட அவர்கள் ஊருக்கு வெளியே இருந்த மலைக்குக் சென்றனர். டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடிவிட்டு, டிசம்பர் 26 ஆம் நாள் அன்றும் அவர்கள் மலை மேலேயே இருந்துவிட்டனர். அன்றைக்குத்தான் ஆழிப்பேரலை என்ற சுனாமி ஏற்பட்டு, மெயுலாபோ ஊருக்குள் இருந்த எல்லாரும் இறந்துபோனார்கள்.
ஆம், மெயுலாபோவில் இருந்த அந்த நானூறு கிறிஸ்தவர்களும் அச்சுறுத்தலுக்கு அஞ்சிக் கிறிஸ்துவை மறுதலிக்காமல், அவரைத் துணிவோடு ஏற்றுக்கொண்டு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை மலையில் கொண்டாடியதால், ஆண்டவரால் மிக அற்புதமாகக் காப்பாற்றப்பட்டார்கள். இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு, “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கிறிஸ்தவம் பிறந்து ஈராயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கே ‘கிறிஸ்தவர்’ என்ற ஒரே காரணத்திற்காக எத்தனையோ கிறிஸ்தவர்கள் பலவிதமான துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகும்போது, கிறிஸ்தவம் பிறந்த தொடக்கக் காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்கள் எந்தளவுக்கு துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கத் திகைப்பாக இருக்கின்றது.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காகப் பலர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்; சிலர் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டார்கள். இப்படித் தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இவையெல்லாம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நடக்கும் என்பதால்தான் இயேசு இன்றைய நற்செய்தியில், “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்” என்கிறார்.
இயேசு ஏற்றுக்கொள்வது வெறும் பெயருக்காகக் கிறிஸ்தவர்களாக வாழ்வது கிடையாது. மாறாக, அவரது விழுமியங்களின் படி வாழ்வது; எத்தகைய துன்பங்கள் வந்தாலும், அவரில் உறுதியாக நிலைத்திருப்பது. நாம் நமது வாழ்வில், துன்பங்களுக்கு நடுவிலும் கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொண்டு, அவருக்குச் சான்று பகர்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவோடு இருங்கள் (யோவா 16:33).
 இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24:13).
 துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை (2கொரி 4:9)
இறைவாக்கு:
‘உங்கள் நம்பிக்கை மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்’ (1 பேது 1:7) என்பார் புனித பேதுரு. எனவே, துன்பங்களுக்கு நடுவிலும் இயேசுவில் உறுதியாய் நிலைத்திருந்து, அவருக்குச் சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.