அக்டோபர் 12 : நற்செய்தி வாசகம்

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41
அக்காலத்தில்
இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: “பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
“படைத்தவரை மறந்து, படைக்கப்பட்டவற்றை வழிபடுபவர்கள்”
பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I உரோமையர் 1: 16-25
II லூக்கா 11: 37-41
“படைத்தவரை மறந்து, படைக்கப்பட்டவற்றை வழிபடுபவர்கள்”
இப்படியும் ஒரு கிறிஸ்தவரா?
“நான் செய்து வரும் தான தர்மங்களைப் பார்த்துவிட்டு, எல்லாரும் என்னை, ‘இப்படியொரு கிறிஸ்தவரா?’ என்று போற்றிப் புகழ்கின்றார்கள” எனப் பணக்காரர் ஒருவர் தன்னைப் பற்றிப் தன் நண்பர்களிடம் மிகவும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் பேசி முடித்ததும், அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர், “உன்னுடைய உண்மையான முகம் அவர்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்கு மட்டும் உன்னுடைய உண்மையான முகம் தெரிந்தது எனில், அவர்கள், ‘இப்படியொரு கிறிஸ்தவரா?’ என்று உன்னைப் போற்றிப் புகழ்வதற்குப் பதில், ‘இப்படியொரும் ஒரு கிறிஸ்தவரா?’ என்று உன்னைக் காறித் துப்புவார்கள் என்றார். இதற்குப் பிறகு அந்தப் பணக்காரர் தன்னைப் பற்றித் தப்பட்டம் அடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஏனெனில், அவர் போதைப் பொருள்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுப் பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தார்.
ஆம், பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற பணக்காரரைப் போன்று, வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகவும், உண்மையில் தீமையின் மொத்த வடிவாகவும் இருப்பதைக் காண முடிகின்றது. இந்நிலையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை ஒருவரின் வெளியடையாளங்கள் அல்ல, மாறாக, யாவற்றையும் படைத்த ஆண்டவர்மீது கொள்ளும் நம்பிக்கையே அவர் மீடப்டையக் காரணமாக இருக்கின்றது என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
உணவு உட்கொள்ளும்போது கைகளைக் கழுவுவது நல்லது, ஏனெனில், அது நமது உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது. அதேநேரத்தில் கைகளைக் கழுவுவதை ஒரு சடங்காகச் செய்தால், அது எந்தவிதத்திலும் நன்மை பயக்காது.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் இப்படித்தான் கைகளைக் கழுவதற்கு, அதுவும், ‘மூதாதையர் மரபுப்படி கைகளைக் கழுவதற்கு’ப் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதனால்தான் இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயர், அவர் உணவருந்துவதற்கு முன் கைகளைக் கழுவாததைக் கண்டு வியப்படைக்கின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், “நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன” என்கிறார். கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக வைத்திருந்தவர்கள், தங்கள் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்கலாம். அவர்கள் அவ்வாறு செய்யாததாலேயே இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.
உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “சிலர் படைத்தவற்றை வழிபட்டு, படைத்தவரை மறந்தார்கள்” என்கிறார். தொடர்ந்து, படைத்தவற்றில் கொள்ளும் நம்பிக்கை அல்ல, படைத்தவர் அல்லது நற்செய்தியில் கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் மீட்படைய முடியும் என்கிறார். எனவே, நாம் வெளியடையாளங்களில் அல்ல, ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அவர் அளிக்கும் மீட்பினைப் பெறுவோம்.
இறைவாக்கு:
 கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம் (பிலி 3: 😎.
 இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார் (உரோ 3:30)
 இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் (கலா 2:16).
சிந்தனைக்கு:
‘நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராக இருக்கமுடியாது’ (எபி 11:6) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.