இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
செபமாலை மாதமான இம்மாதத்தின் பதினொன்றாம் நாளான இன்று,
நம்முடைய விசுவாசம் வெறும் அடையாளங்களையோ, அற்புதங்களையோ சாராமல் ஆண்டவரை மட்டுமே முழுமையாக சார்ந்திருக்க வேண்டுவோம். நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் அறிந்து நம்முடைய விசுவாசத்தை நமது வாழ்வின் மூலம் அறிக்கையிட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில், “பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.” என திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
நாம் நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதையும், நாம் அவரால் அழைக்கப்பட்டதன் அர்த்தத்தையும் முழுமையாக உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
திருஅவையின் 261-ஆம் திருத்தந்தையும், இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தைக் கூட்டியவரும், இன்றைய புனிதருமான புனித 23-ஆம் அருளப்பரை நமது திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
வரும் நாள்களில் திருவிழாக்கள் வர இருப்பதால் மக்கள் கூடும் இடங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.