வாசக மறையுரை (அக்டோபர் 09)

பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் சனிக்கிழமை

I யோவேல் 3: 12-21
II லூக்கா 11: 27-28

“யார் இன்னும் மிகுதியாகப் பேறுபெற்றோர்?”

மாணவர்கள் ஆசிரியரின் சொற்படி நடந்தால்…?

கென்யாவில் ஓர் ஆசிரியர் இருந்தார். ஒருநாள் அவர் தன் வகுப்பில் இருந்த இருபது மாணவர்களிடம், “அன்பு மாணவச் செல்வங்களே! நீங்கள் மட்டும் என் சொற்படி நடந்து, நான் உங்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகளை முறையாகச் செய்துவந்தால், நான் உங்களை இந்தப் பள்ளியில் தலைசிறந்த மாணவர்களாக உருவாக்கிவிடுவேன்” என்றார்.

ஆசிரியர் சொன்னதற்கு மாணவர்களும் சரி என்றார்கள். நாள்கள் நகர்ந்தன. சில நாள்கள் கழித்து, ஒருசிலர் மாணவர்கள் ஆசிரியரிடம், “நீங்கள் கொடுக்கும் பயிற்சிகள் மிகக் கடுமையாக இருக்கின்றன” என்று சொல்லி விலகிக்கொண்டனர். இன்னும் சில நாள்கள் கழித்து, வேறு சில மாணவர்கள் ஆசிரியரிடம் வந்து, “எங்களுக்கு வேறொரு முக்கியமான வேலை இருக்கின்றது” என்று சொல்லிப் பயிற்சியிலிருந்து விலகிக் கொண்டனர். இதற்குப் பிறகும் சில மாணவர்கள் ஆசிரியரிடம் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “மற்ற வகுப்பில் உள்ள மாணவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாங்கள் மட்டும் கடினமாக உழைப்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் நாங்களும் நீங்கள் கொடுக்கின்ற பயிற்சியிலிருந்து விலகிக்கொள்கின்றோம்” என்றார்கள்.

இப்படி ஒருவர் பின் ஒருவராக ஆசிரியர் கொடுத்த பயிற்சியிலிருந்து விலகிக் கொள்ள, இரண்டே இரண்டு மாணவர்கள் மட்டும்தான் இறுதிவரைக்கும் ஆசிரியர் சொற்படி நடந்து, அவர் கொடுத்த பயிற்சிகளை முறையாகச் செய்து வந்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் அந்தக் கல்வியாண்டின் இறுதியில், பள்ளியில் தலைசிறந்த மாணவர்களாக உயர்ந்து நின்றார்கள்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற இரண்டு மாணவர்களும் ஆசிரியர் சொற்படி நடந்ததால், பள்ளியில் தலைசிறந்த மாணவர்களாக உயர்ந்தார்கள். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் வார்ர்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் மிகுதியாகப் பேறுபெற்றோர் என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இயேசு, தன்னுடைய காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று சொன்னது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கவில்லை. மாறாக, அவர் சொன்னதையே செய்தார்; செய்ததையே சொன்னார். இவ்வாறு அவர் சொல்லிலும் செயலியும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் (லூக் 24:19). இதனாலேயே இயேசுவால் வல்லமையோடு கடவுளின் வார்த்தையை அறிவிக்க முடிந்தது; துணிவுடன் இறையாட்சிப் பணியைச் செய்ய முடிந்தது. இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் ஒரு பெண்மணி, “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்கிறார். அப்பொழுதுதான் இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் மிகுதியாகப் பேறுபெற்றோர்” என்கிறார்.

இயேசு இவ்வார்த்தைகளை எத்தகைய சூழ்நிலையில் உதிர்த்தார் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தூய ஆவியரால் பேய்களை ஓட்டி வந்த இயேசுவைப் பரிசேயர்கள், பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று விமர்சித்தார்கள். இது பற்றி நாம் நேற்றைய நற்செய்தியில் வாசித்துத் தியானித்திருப்போம். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்கள் யூதர்கள் என்பதால், இனத்தின் அடிப்படையில் இயேசுவுக்கு உறவினர்களாக இருந்திருக்கலாம்; ஆனால், அவர்கள் தூய ஆவியாரின் வல்லமையோடு செயல்பட்ட இயேசுவையே விமர்சித்ததால் அவர்கள் யாரோ போல் ஆகின்றார்கள். ஆனால், மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடித்து வாழ்ந்தனாலும் இன்னும் மிகுதியாகப் பேறுபெற்றவர் ஆகின்றார்.

இதன்மூலம் ஒருவர் எந்த இனத்தில் பிறந்தாலும் அவர் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடித்து வந்தால், இன்னும் மிகுதியாகப் பேறுபெற்றவர்கள் ஆகமுடியும் என்பது உறுதி.

சிந்தனைக்கு:

 ஒருவரின் பிறப்பு அல்ல, அவருடைய வாழ்க்கையே அவருக்குக் கடவுளின் ஆசியைப் பெற்றுத் தரும்.

 நீதியையும் நேர்மையையும் அவர்கள் கடைப்பிடித்தால் வாழ்வது உறுதி (எசே 33:16).

 நற்பேறு பெற்றவர் ஆண்டவரின் திருச்சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பார் (திபா 1:2).

இறைவாக்கு:

‘என்மேல் அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்’ (விப 20:6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.