இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்று தூய வியாகுல அன்னையின் விழாவினைக் கொண்டாடும் வேளையில், மானிடர் நமது அனைவரின் பாவங்களுக்காக திருமகன் பட்டத் துன்பங்களைக் கண்டு துயருற்ற நம் அன்னையிடம் மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
சிமியோனின் இறைவார்த்தையை கேட்ட போதும், எகிப்திற்கு தப்பியோடிய போதும் குழந்தை இயேசுவை குறித்து நம் அன்னையவள் எவ்வளவு கலக்கமுற்றிருப்பார் என எண்ணிப் பார்ப்போம்.
தனது குழந்தைகளைக் குறித்து கலக்கமுறும் அனைத்து தாய்மார்களுக்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
குழந்தை இயேசு காணாமல் போனபோதும், சிலுவையை இயேசு சுமந்து வந்த வேளையில் அவரை எதிரே சந்தித்த போதும் நம் அன்னையவளின் மனம் எவ்வளவு துன்பத்தில் துவண்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்ப்போம்.
தனது பிள்ளைகளினால் துன்பங்களில் துவழும் எண்ணற்ற அன்னையர்களுக்காக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இயேசுவை சிலுவையில் அறைந்த போதும், இறந்த இயேசுவை மடியில் கிடத்திய போதும் நம் அன்னையவள் துக்கத்தில் எவ்வளவு கண்ணீரை சொரிந்திருப்பாள் என எண்ணிப்பார்ப்போம்.
நோயிலும், மரணத்தருவாயிலும் இருக்கும் குழந்தைகளின் துன்பம் கண்டு துயருறும் தாய்மார்களுக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த போது எந்த அளவிற்கு நமது அன்னையின் மனம் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் என எண்ணிப் பார்ப்போம்.
குழந்தைகளை இழந்த அனைத்து அன்னையர்களின் மனமும் ஆறுதல் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.