துயருறும் அன்னை மரியா திருத்தல வளாகத்தில் திருப்பலி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இந்நாளில், திருத்தந்தை, Šaštín நகரின் ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டார். இப்புதன் காலை 7.30 மணிக்கு, பிராத்திஸ்லாவா நகரின் திருப்பீடத் தூதரகத்தில் இந்நாள்களில் தனக்கு உதவிசெய்த அனைவருக்கும் நன்றி கூறியத் திருத்தந்தை, அத்திருப்பீடத் தூதரகத்திற்கு, திருத்தந்தையின் தலைமைப்பணியின், மொசைக் கலைவண்ணத்தால் அழகுற அமைக்கப்பட்ட, இலச்சினை ஒன்றை பரிசாக வழங்கினார். பின்னர், திருத்தந்தை, அங்கிருந்து 71 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Šaštín தேசிய திருத்தலத்திற்குக் காரில் சென்றார். அத்திருத்தலத்தில், சுலோவாக்கியா நாட்டை, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் செபம் ஒன்றை ஆயர்களோடு சேர்ந்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில், திருத்தந்தை, இறைவா, அன்னை மரியாவைப் பின்பற்றி, கிறிஸ்துவின் பாடுகளை தியானிப்பதற்கு, உமது திருஅவையை நீர் அழைக்கிறீர். அவரது பரிந்துரையால், நாங்கள், உமது ஒரே திருமகனின் சாயலை, இன்னும் அதிகமாக தாங்கி, அவரது அருளின் நிறைவைப் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரியும் அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென் என்று, அச்செபத்தை நிறைவுசெய்தார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயருறும் அன்னை மரியா திருநாள் திருப்பலியை நிறைவேற்ற, அத்திருத்தல வளாகத்திற்குச் சென்றார். அந்த வளாகத்தில் அமர்ந்திருந்த விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் வந்த திருத்தந்தை, திருப்பலியை இலத்தீனில் ஆரம்பித்தார். அத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரை ஒன்றும் ஆற்றினார்.

 

அன்னை மரியாவை, தங்கள் விசுவாசத்திற்கு முன்மாதிரிகையாய் எடுத்துக்கொள்ளுமாறு, சுலோவாக்கியா மக்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை. அத்திருப்பலியில், விசுவாசிகள் மன்றாட்டு, சுலோவாக்கியம், ஆங்கிலம், ஜெர்மானியம், ஹங்கேரியம், ரோமானி ஆகிய மொழிகளில் செபிக்கப்பட்டது. இத்திருப்பலியின் இறுதியில் சுலோவாக்கிய அரசு, தலத்திருஅவை மற்றும், இப்பயண ஏற்பாடுகளைக் கவனித்த அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார், திருத்தந்தை. சுலோவாக்கியா ஆயர் பேரவைத் தலைவரும், பிராத்திஸ்லாவா உயர்மறைமாவட்ட பேராயருமான, பேராயர் Stanislav Zvolenský அவர்களும், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். அத்தேசிய திருத்தலத்திற்கு, தங்கத்திலான ரோசா மலர்ச்செடி ஒன்றைப் பரிசாக அளித்தார். இத்திருப்பலிக்குப்பின். அங்கிருந்து 86 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பிராத்திஸ்லாவா பன்னாட்டு விமான நிலையத்திற்குக் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.