வாசக மறையுரை (செப்டம்பர் 11)

பொதுக்காலம் இருபத்து மூன்றாம் வாரம் சனிக்கிழமை
I திமொத்தேயு 1: 15-17
II லூக்கா 6: 43-49
“பாவிகளுள் முதன்மையான பாவி நான்”
தன் தவற்றை உணர்ந்த காந்தி:
பதின்பருவத்தில் காந்தியடிகளுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால், பணத்திற்கு அவர் தன் தந்தையிடமிருந்து திருடுவது உண்டு. அப்படியும் பணத்தேவை இருந்ததால், ஒருநாள் அவர் தன் தந்தையின் தங்கக் காப்பினைத் திருடிவிட்டார்.
அவர் தன் தந்தையின் தங்கக் காப்பினைத் திருடியபிறகுதான் தவறு புரிந்தது. ஆகவே, அவர் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி, அதைத் தன் தந்தையிடம் கொடுத்தார். ‘நான் செய்த தவற்றுக்கு என் தந்தை என்னை அடித்துத் துவைக்கப்போகிறார்’ என்றுதான் மன்னிப்புக் கடிதத்தைத் தன் தந்தையிடம் கொடுக்கும்போது காந்தியடிகள் நினைத்தார்; ஆனால், காந்தியடிகள் நினைத்ததற்கும் மாறாக, அவர் தன் மகன் தந்த மன்னிப்புக் கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, அதைக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டார். பின்னர் அவர் காந்தியடிகளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வு காந்தியடிகளின் உள்ளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதால், அவர் புகைப்பிடிக்கும் பழத்தை அறவே விட்டுவிட்டார்.
ஆம், தன் தவற்றை உணர்ந்து காந்தியடிகள் தன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டபொழுது, அவரது தந்தை அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். முதல் வாசகத்தில் பவுல், பாவிகளுள் முதன்மையான பாவி நான் என ஏற்றுக்கொண்டதும், கடவுள் அவர்மீது இரங்குவவதையும், பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் பொறுப்பைக் கொடுப்பதையும் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களையும், அதன்மூலம் கிறிஸ்துவையும் துன்புறுத்தி வந்தார் பவுல். இத்தகையதொரு செயலைப் பவுல் தன் சமயத்தின்மீது கொண்ட பற்றினாலேயே செய்துவந்தார். இப்படிப்பட்ட நிலையில் இயேசு கிறிஸ்து அவரைத் தடுத்தாட்கொள்கின்றார். இதற்குப் பிறகு பவுல் தன்னைப் பாவிகளுள் முதன்மையான பாவி என்று உணர்கின்றார். எப்பொழுது பவுல் தன்னைப் பாவிகளுள் முதன்மையான பாவி என்று உணர்ந்தாரோ, அப்பொழுதே கடவுள் அவர்மீது இரங்கிப் பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கின்றார். இதனால் அவர் பலருக்கும் நற்செய்தி அறிவித்து, அவர்களைக் கடவுளிடம் கொண்டு வந்தார்.
நற்செய்தியில் இயேசு, ஒரு மரம் அதன் கனியாலேயே அறியப்படும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். பவுலைப் போன்று ஒருகாலத்தில் நாம் பாவிகளாக இருந்தாலும், பாவத்தை உணர்ந்து, ஆண்டவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததால், நம்மால் நல்ல கனிகளைக் கொடுக்க முடியும். அதன்மூலம் பாறையின்மீது வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாக முடியும். இதற்கு நாம் ஆண்டவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது இன்றியமையாதது. எனவே, நாம் ஆண்டவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் வழி நடப்போம்.
சிந்தனைக்கு:
 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே (திபா 51: 17).
 நீங்கள் மனம்மாற்றியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் (மத் 3: 😎
 இனி வாழ்பவன் நான் அல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலா 2: 20).
இறைவாக்கு:
‘என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்” (விப 20: 6) என்பார் ஆண்டவர். எனவே, நாம் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, நல்ல கனி தந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.