ஆகஸ்ட் 15 : நற்செய்தி வாசகம்
வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56.
அந்நாள்களில்
மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,
“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”
மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
நம்பினார்; விரைந்தார்; வாழ்த்தினார்”
புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு
I திருவெளிப்பாடு 11: 19a, 12: 1-6, 10 ab
II 1 கொரிந்தியர் 15: 20-26
III லூக்கா 1: 39-56
“நம்பினார்; விரைந்தார்; வாழ்த்தினார்”
நிகழ்வு
நகரில் இருந்த பிரபல ஆங்கிலவழிப் பள்ளிக்கூடம் அது. அதில் ஐந்தாம் வகுப்பிற்கு அறிவியல் பாடம் கற்றுத்தந்த ஆசிரியை புனிதா, அன்று காந்தத்தையும் (Magnet), அதன் இயல்புகளையும் பற்றிப் பாடம் எடுத்தார். காந்தத்தைப் பற்றிப் பாடம் எடுத்து முடித்ததும், அவர் மாணவர்களிடம், இன்று நடத்தப்பட்ட பாடத்திலிருந்து நாளை தேர்வு இருக்கும். அதனால் தகுந்த தயாரிப்போடு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றார்.
மறுநாள் வகுப்புக்கு வந்ததும் ஆசிரியை புனிதா மாணவர்களிடம், “எல்லாரும் தேர்வுக்குத் தயாராகிவிட்டீர்களா?” என்றதும், மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “ஆமாம்” என்றார்கள். பின்னர் அவர் மாணவர்களிடம், “இது M என்ற எழுத்தில் தொடங்கும் ஆறெழுத்து வார்த்தை. இதற்குக் கவர்ந்திருக்கும் தன்மை உண்டு. அது என்ன?” என்றார்.
உடனே மாணவர்கள் அனைவரும் ஆசிரியை கேட்ட கேள்விக்கான பதிலை வேகவேகாக எழுதி ஆசிரியையிடம் கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் வாங்கிப் பார்த்த ஆசிரியை புனிதா வியந்து நின்றார். ஏனெனில், அவர் கேட்ட கேள்விக்கு ஒரு மாணவர்கூடத் தவறாமல் ‘Mother’ என்று எழுதி வைத்திருந்தார்கள். ‘எல்லாரும் ‘Magnet’ என்று பதில் எழுதுவார்கள்’ என்று அவர் நினைத்திருந்தபொழுது, அவர் நினைத்ததற்கு மாறாக, அதே நேரத்தில், Magnet என்ற வார்த்தையைப் போன்று M –இல் தொடங்குகின்ற, ஆறு எழுத்துக்களைக் கொண்ட, அதுவும் எல்லாரையும் தன் பக்கம் கவர்த்திழுக்கும் தன்மை கொண்ட Mother என்ற வார்த்தையை எழுதியிருந்ததுதான் அவரை மிகவும் வியப்படைய வைத்தது.
ஆம், காந்தத்தைப் போன்று தாய்க்கும் கவர்த்திழுக்கும் ஆற்றல் உண்டு! அந்த அடிப்படையில், மக்களைத் தன் பக்கமும், தன் மகன் இயேசுவின் பக்கமும் கவர்ந்திழுக்கும் புனித கன்னிமரியா ஆற்றல் மிக்க காந்தம் என்று உறுதியாகச் சொல்லலாம். இன்று திருஅவையானது மக்களைத் தன் பக்கமும், தன் திருமகன் பக்கமும் கவர்ந்திழுக்கும் காந்தமான புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. இப்பெருவிழாவின் பின்னணி என்ன.. இப்பெருவிழா நமக்கு என்னென்ன செய்தியை உணர்த்துகின்றது என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
ஆண்டவர் சொன்னது நிறைவேறும் என நம்பிய மரியா
“மரியா தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்ட வேளையில், அவர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” என்று 1950 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 1 ஆம் நாள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் புனித கன்னி மரியாவின் விண்ணேற்பை நம்பிக்கைப் பிரகடனமாக அறிவித்தார். அன்றிலிருந்து இன்று வரை புனித கன்னிமரியாவின் விண்ணேற்புப் பெருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில், பெண்மணி ஒருவர் கதிரவனை ஆடையாக அணிந்து, நிலாவைத் தன் காலடியில் கொண்டு, பன்னிரு விண்மீன்களைத் தன் தலையில் மணிமுடியாய்ச் சூடியிருப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். மட்டுமல்லாமல், கருவுற்றிருக்கும் இவர், எல்லா நாடுகளையும் இருப்புப்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பதையும், இந்த ஆண் மகன் பெரிய அரக்கப் பாம்பை வென்றெடுப்பதையும் குறித்து வாசிக்கின்றோம். இக்காட்சி தொடக்க நூலில் இடம்பெறும், “உனக்கும் பெண்ணும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3: 15) என்ற வார்த்தைகளுக்கு வலுசேர்ப்பதை இருக்கின்றது.
மேலும் இக்காட்சி நமக்கு இரண்டு உண்மைகளை உணர்த்துகின்றன. ஒன்று, இயேசுவால் சாத்தானின் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்பதாகும். இரண்டு, விண்ணகத்தில் மரியா கதிரவனை ஆடையாக அணிந்தவராக இருக்கின்றாரே அத்தகைய பேற்றினை அவர் ஆண்டவர் சொன்னது நிறைவேறும் என்று நம்பி, அதன்படி வாழ்ந்ததால் அடைந்தார் என்பதாகும். மரியா ஆண்டவர் சொன்னதை நம்பி, நம்பிக்கையின் தாயாகி, உடலோடும் ஆன்மாவோடு விண்ணேற்றம் அடைந்தார். நாமும் மரியாவைப் போன்று ஆண்டவரின் வார்த்தைகளை நம்பி, அதன்படி வாழும்பொழுது, இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டது போன்று, நாம் அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவோம்.
அடுத்தவருக்கு விரைந்து சென்று உதவிய மரியா
மரியா ஆண்டவர் சொன்னது நிறைவேறும் என்று நம்பி, நம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் இருந்ததோடு அல்லாமல், அடுத்தவருக்கு உதவி செய்வதிலும் விரைந்து செயல்பட்டு, விரைந்து உதவி செய்வதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார்.
“உம் உறவினரான எலிசபெத்து தம் முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கின்றார்” (லூக் 1: 36) என்ற செய்தியை முதன்மை வானதூதர் கபிரியேல் மூலமாகக் கேள்விப்படும் மரியா, அப்படியே தன் வீட்டில் இருந்துவிடவில்லை. மேலும் ‘நாமே கருவுற்றிருக்கின்றோம்…! இதில் இன்னொருவருக்கு எங்கே நாம் உதவுவது…?’ என்று நினைத்தும் மரியா தன் வீட்டில் இருந்துவிடவில்லை. மாறாகக் கருவுற்றிருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கின்றார். அதுவும் ‘விரைந்து” உதவச் செல்கின்றார். இன்றைக்குப் பலர் இப்பொழுது ஓர் உதவி கேட்டால், அதை உடனே செய்யாமல், எப்பொழுதோ உதவி செய்வார்கள்; ஏன், செய்யாமலும்கூட கல் நெஞ்சத்தவராய் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் வாழும் இவ்வுலகில் மரியா ‘விரைந்து’ சென்று உதவுகின்றார். இதன்மூலம் அவர் ஆண்டவரில் கொண்ட நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுத்து (யாக் 2: 27), இறைவனின் அன்புக்குரியவரானார்.
ஆண்டவர் தனக்குச் செய்த நன்மைகளுக்காக அவரை வாழ்த்திய மரியா
மரியா ஆண்டவர் சொன்னவை நிறைவேறும் என்று நம்பியதற்கு மட்டுமல்லமல், தேவையில் இருந்தவருக்கு விரைந்து சென்று உதவியதற்கு மட்டுமல்லாமல், அடுத்தவரையும் கடவுளையும் வாழ்த்துவதற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.
எலிசபெத்து முதிர்ந்து வயதில் கருவுற்றிருக்கும் செய்தியைக் கேட்டதும், அவரது வீட்டிற்குச் விரைந்து செல்லும் மரியா அங்குச் சென்றதும் எலிசபெத்தை வாழ்த்துகின்றார். மரியாவிடம் விளங்கிய இந்த நற்பண்பு, நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் விளங்கும் நற்பண்புகளை, அவர்கள் செய்த நல்லதை இனங்கண்டு கொண்டு வாழ்த்தவேண்டும் என்ற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது. மரியா எலிசபெத்தை வாழ்த்தியதைத் தொடர்ந்து, “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்று எலிசபெத்து மரியாவை வாழ்த்துகின்றார். இதன்பிறகுதான் ஆண்டவர் தனக்கும், எளிய மக்களுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் செய்த நன்மைகளை நினைத்து மரியா அவரை வாழ்த்திப் போற்றுகின்றார். மரியாவின் இவ்வாழ்த்துப்பாடல் அன்னாவின் பாடலை (1 சாமு 1, 11; 2: 1-10) நிறையவே ஒத்திருந்தாலும், பலவிதங்களில் மரியாவின் பாடல் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
இவ்வாறு மரியா ஆண்டவர் சொன்னது நிறைவேறும் என்று நம்பி வாழ்ந்ததாலும், அடுத்தவருக்கு விரைந்து சென்று உதவியதாலும், ஆண்டவர் செய்த நன்மைகளுக்காக அவரை வாழ்த்தியதாலும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கடவுளின் திருவுளம் நிறைவேறத் தன்னையே கையளித்து வாழ்ந்ததாலும், கடவுள் மரியாவிற்கு மிக உயிரிய பேற்றினை அளிக்கின்றார். நாமும் மரியாவைப் போன்று ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, கடவுள் அளிக்கும் விண்ணகப் பேற்றினைப் பெறுவோம்.
சிந்தனை
‘இறைவார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் எத்துணை உறுதியாய் இருக்கவேண்டும் என்பதைப் புனித கன்னி மரியாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், நாம் புனித கன்னி மரியாவைப் போன்று இறைவார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் உறுதியாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.