வாசக மறையுரை (ஆகஸ்ட் 10)

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I இணைச்சட்டம் 31: 1-8
II மத்தேயு 18: 1-5, 10, 12-14
“வலிமை பெறு; துணிவு கொள்”
வான் சிலந்தின் துணிவு:
ஜெர்மனியைப் பல ஆண்டுகள் ஆண்டவர் மாமன்னர் ஃபிரடெரிக். கடவுள் நம்பிக்கை இல்லாத இவரது இராணுவத்தில் தளபதியாக இருந்தவர் வான் சிலந்த் (Von Zealand). இவருக்குக் கடவுள்மீது – இயேசுவின்மீது – மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒருநாள் அரண்மனையில் பெரியதொரு விருந்து நடந்துகொண்டிருந்தது. அவ்விருந்திற்கு முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். விருந்தின் நடுவில் விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மாமன்னர் ஃபிரடெரிக் எழுந்து, கிறிஸ்துவைப் பற்றி மிகவும் கேலியாகவும் இழிவாகவும் பேசினார். இதனால் விருந்தினர்கள் யாவரும் சத்தம்போட்டுச் சிரித்தனர்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வான் சிலந்த் பொறுமையாக எழுந்து பேசத் தொடங்கினார்: “மாமன்னரே! இயேசு கிறிஸ்துவின்மீது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் இருக்கலாம்; தவறில்லை. அதற்காக நீங்கள் அவரை இப்படி எல்லாருக்கும் முன்பாகக் கேலிசெய்வது ஏற்புடையது அல்ல. இதை நான் உங்களிடம் சொன்னதற்காக நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனக்கு அதைப் பற்றிய அச்சமில்லை. ஏனெனில், நான் என் உயிரைத் துச்சமென நினைத்து, முப்பதெட்டு முறை இராணுவத்தை தலைமை தாங்கி, நாட்டிற்கு வெற்றித் தேடித் தந்திருக்கின்றேன்! கிறிஸ்து எல்லாருக்கும் வாழ்வு தந்தவர். அப்படிப்பட்டவரை ஒருவர் கேலிசெய்வதை என்னால் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.”
வான் சிலந்த் இப்படிப் பேசியதைக் கேட்டு அதிர்ந்துபோன மாமன்னர் ஃபிரடெரிக், “நான் கிறிஸ்துவைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளும். மன்னித்துக் கொள்ளும். மன்னித்துக் கொள்ளும்” என்று சொல்லி அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.
கிறிஸ்துவைப் பற்றி மாமன்னர் ஃபிரடெரிக் தவறாகப் பேசியபொழுது, அதைத் தவறு என்று சுட்டிக்கட்டிய வான் சிலந்தின் துணிச்சல் நம்மை வியக்க வைக்கின்றது. இன்றைய முதல்வாசகத்தில் மோசே யோசுவாவிடம், “வலிமை பெறு; துணிவு கொள்” என்கிறார். இது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய நூற்று இருபது வயதான மோசே, தனக்கு வயதாகி விட்டது என்பதாலும், தன்னால் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குள் நுழைய முடியாது என்பதாலும், தனக்குப் பின் இஸ்ரயேல் மக்களை வழி நடத்துகின்ற பொறுப்பை யோசுவாவிடம் ஒப்படைக்கின்றார். அவ்வாறு ஒப்படைக்கும்போது மோசே யோசுவாவிடம் கூறுகின்ற வார்த்தைகள்தான், “வலிமை பெறு; துணிவு கொள். ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் செல்பவர்” என்பதாகும். யோசுவா மோசேயிடமிருந்து இப்படியோர் ஆசியைப் பெறக் காரணம், யோசுவா கானான் நாட்டை உளவு பார்க்கச் சென்றபோது ஆண்டவரில் நம்பிக்கை வைத்துச் சென்றதும், அவரில் நம்பிக்கையோடு இருந்ததும்தான்.
நற்செய்தியில் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் சிறியோரை இழிவாகக் கருதவேண்டாம். ஏனெனில், அவர்களின் வானதூதர்கள் தந்தையின் எப்பொழுதும் இருக்கிறார்கள் என்கிறார் இயேசு. ஆதலால், நாம் யோசுவைப் போன்று ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அவரது ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 ஆண்டவரில் நம்பிக்கைகொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்துநிற்கும் (திபா 32: 10)
 நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஓர் ஆளாக வெல்வாய் (நீத 6: 16).
 நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அவரது ஆசிகளைப் பெறுவோம்.
இறைவார்த்தை:
‘நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கு செய்யப்போவதில்லை’ (திப 18: 10) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.