நம் தினசரி வாழ்வுக்குத் தேவைப்படும் உணவு, இயேசு

அப்பம் பலுகிய புதுமையைக் கண்ட மக்களுக்கு போதித்த இயேசு, அவர்களிடம், ‘நானே வாழ்வு தரும் உணவு’ என உரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி, ஞாயிறன்று, வத்திக்கான், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு, அந்நாளின் நற்செய்தி வாசகம் குறித்து நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலைவனப் பயணத்தின்போது, முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட மன்னாவை இயேசு எடுத்துரைத்து, தற்போது வாழ்வின் அப்பம் எனத் தன்னை வெளிப்படுத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.

நம் தினசரி வாழ்வுக்குத் தேவைப்படும் அப்பமாக, உணவாக இயேசு இங்கு தன்னைக் குறிப்பிடுகிறார் (யோவான் 6:48) என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தன்னை அப்பமாக குறிப்பிடுவது, பல்வேறு அப்பங்களுள் ஒன்று என்பதையல்ல, மாறாக, அவரே வாழ்வு தரும் உணவு, அவரே நம் ஆன்மாவிற்கு ஊக்கமான உணவூட்ட வல்லவர் என மேலும் எடுத்துரைத்தார்.

நம்மால் தனியாக வெளிவர முடியாத பாவச் சுமையிலிருந்து நம்மை மன்னித்து விடுவிக்கும் இயேசு, நாம் அன்புகூரவும், மன்னிக்கவும் அருளை வழங்கி, இதயத்தின் அமைதியையும் இவ்வுலக வாழ்வின் இறுதியில் முடிவற்ற வாழ்வையும் வழங்குகிறார் என்பதையும் தன் நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘நானே வாழ்வு தரும் உணவு’, என்று இயேசு பயன்படுத்திய உருவகத்தை நாம் சிறிது உற்றுநோக்கும்போது, உவமைகளில் பேசிவரும் இயேசு, இங்கு, தன் வாழ்வு மற்றும் பணி அனைத்தையும், இந்த பதத்தில் சுருக்கிக் காண்பிப்பதை காணலாம், என விளக்கினார் திருத்தந்தை.

மக்களுக்கு உணவை மட்டுமல்ல, தன்னையே பிட்டு, தன் வாழ்வையே, உடலையே, இதயத்தையே நமக்கு வழங்கி வாழ்வைத் தருகிறார் என்பதை சுட்டிக்காட்டி, திருநற்கருணை எனும் கொடை குறித்த பெருவியப்பை, ‘நானே வாழ்வுதரும் உணவு’ என்ற இயேசுவின் வார்த்தைகள் நம்மில் எழுப்புகின்றன, இந்த பெரும் வியப்பை நம் புதுப்பிப்போம், என கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் இவ்வார்த்தைகளைக் கேட்ட, அவர் காலத்து மக்கள், அது குறித்து வியப்படைந்து பாராட்டுவதற்கு மாறாக, இவர் குடும்பத்தைப் பற்றி நமக்குத் தெரியுமே, இவர் எவ்விதம் தான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு என்று சொல்லமுடியும், என்ற கேள்வியை எழுப்புகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நாமும் பலவேளைகளில், இறைவன் நம் வாழ்வில் தலையிடாமல் அவர் விண்ணகத்திலேயே இருந்துகொள்ளட்டும், நம் விடயங்களை நாமே சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணுகிறோம், ஆனால், இவ்வுலகின் உண்மை நிலைகளுக்குள் தன்னைப் புகுத்திட இயேசு மனுவுருவெடுத்தார் என்பதை எடுத்தியம்பினார்.

இறைவன் நம் வாழ்வின் ஒவ்வொரு கூறு குறித்தும் ஆர்வம் கொண்டுள்ளார், நம் உணர்வுகளையும், பணிகளையும், ஒவ்வொரு நாளின் நிகழ்வுகளையும் அவருடன் பகிர விரும்புகிறார், அவரை நம் வாழ்வின் அப்பமாக நோக்கவேண்டுமேயொழிய, பக்க உணவாக அவரை ஒதுக்கி வைக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஒவ்வொரு நாளும் ஒருமுறையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைத்து உணவருந்துதல், அவ்வுணவை ஆசீர்வதிக்க இயேசுவை அழைத்தல், என்பவை குறித்தும் எடுத்துரைத்து, தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.