இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“என் அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்; நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?” மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது;” என வாசித்தோம்.

ஆண்டவரின் அடியார்களுக்கு எதிராக இகழ்வோருக்கு கிடைக்கும் தண்டனையை நாம் முதல் வாசகத்தில் கண்ணுற்றோம்.

ஆண்டவருக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளை இகழ்வது நமக்கு ஆண்டவரிடமிருந்து தண்டனையை வருவிக்கும் என்ற உண்மையை உணர இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 51:3,4-ல்
“என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்” என கூறப்பட்டுள்ளது.

இதுநாள்வரை நாம் தெரிந்தோ, தெரியாமலோ ஆண்டவருக்கு எதிராக செய்த அனைத்து பாவங்களுக்காகவும் மனம் வருந்தி மன்னிப்பினை வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார்.”

நமது துன்ப வேளைகளில் நாம் கொள்ளும் அச்சமானது நாம் ஆண்டவர் மீது கொண்ட விசுவாசத்தை அசைத்துப் பார்க்கிறது. அலகை வருவிக்கும் அச்சத்தை அகற்றி ஆண்டவர் மேல் தளரா விசுவாசம் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

அரசு அறிவித்த விதிமுறைகளை பொதுமக்கள் ஒழுங்காகக் கடைபிடித்து தொற்று நோயின் மூன்றாவது அலையின் தீவிரத்தை நன்கு குறைக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.