ஆகஸ்ட் 4 : நற்செய்தி வாசகம்

அம்மா, உமது நம்பிக்கை பெரிது.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28
அக்காலத்தில்
இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.
சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.
ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.
இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“உமது நம்பிக்கை பெரிது”
பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் புதன்கிழமை
I எண்ணிக்கை 13: 1-2, 25-33, 14: 1, 26-30, 34-35
II மத்தேயு 15: 21-28
“உமது நம்பிக்கை பெரிது”
ஆண்டவரை நம்பியிருந்த சிறுவன்:
பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாத மன்னன் ஒருவன், ஒரு துறவியிடம் சென்று, “எனக்குப் பின் இந்த நாட்டை ஆள்வதற்கு எனக்கொரு மகன் வேண்டும், அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டபொழுது, “நீ இந்த நாட்டிலுள்ள ஒரு சிறுவனைப் பலியிடவேண்டும்; அப்படிப் பலியிட்டால், உனக்கொரு மகன் பிறப்பான்” என்றார். இதன் பிறகு மன்னன், நாட்டு மக்களிடம், “யாருக்காவது தன் மகனைப் பலியிட விருப்பம் இருந்தால், அவர் என்னிடத்தில் தன் மகனைக் கொடுக்கட்டும்; நான் அவருக்குத் தக்க சன்மானம் கொடுப்பேன்” என்று அறிவிப்புக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு தந்தை, பணத்திற்கு ஆசைப்பட்டு, எதுக்குமே உதவாத தன் மகன் ஒருவனை மன்னரிடம் பலி கொடுக்கக் கொடுத்தார். மன்னரும் அச்சிறுவனைப் பெற்றுக்கொண்டு, தக்க சன்மானம் அவருக்குக் கொடுத்தார்.
இதற்குப்பின் சிறுவனைப் பலியிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. சிறுவனைப் பலியிடுவதற்கு முன் மன்னர் அவரிடம், “உன்னுடைய கடைசி ஆசை என்ன, அதை நான் நிறைவேற்றி வைக்கின்றேன்” என்றார். “எனக்கு ஒரு சாக்கு நிறைய மணல் வேண்டும்” என்று சிறுவன் சொன்னதும், சிறிது நேரத்தில் அங்கே சாக்கு மூட்டை நிறைய மணல் வந்தது. அதைக் கொண்டு சிறுவன் நான்கு மணல் வீடுகள் கட்டி, அவற்றில் மூன்றை உடைத்துப் தள்ளினான். நான்காவது மணல் வீட்டை எதுவும் செய்யாமல், அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது மன்னர் அவனிடம், “உன்னுடைய இச்செயலின் வழியாக நீ உணர்த்துவது என்ன?” என்று கேட்க, சிறுவன் அவரிடம், “முதல் மணல்வீடு என் பெற்றோர். அவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு, என்னைப் பலியிடக் கொடுத்துவிட்டார்கள். இரண்டு மணல் வீடு என் உறவினர். என் பெற்றோர் என்னைப் பலியிடக் கொடுக்கும்பொழுது எதுவுமே கேள்வி கேட்கவில்லை! மூன்றாவது மணல்வீடு இந்நாட்டு மன்னராகிய நீங்கள்! நாட்டுக் குடிமக்களில் ஒருவரை நீங்கள் பலியிடத் துணிந்தது அதிர்ச்சியளிக்கின்றது. நான்காவது உள்ள மணல்வீடு, கடவுள். எல்லாரும் என்னைக் கைவிட்டாலும், கடவுள் என்னைக் கைவிடமாட்டார். அதனால்தான் நான்காவது மணல்வீட்டை நான் உடைக்காமல் வைத்திருக்கின்றேன்” என்றான். சிறுவன் சொன்ன வார்த்தைகள் மன்னரைச் சிந்திக்க வைத்தன. ‘இச்சிறுவனை பலியிட்டுவிட்டு, குழந்தையைப் பெற்றெடுப்பதற்குப் பதில், கடவுளையே நம்பியிருக்கும் இவனையே என் வாரிசையாக வைத்துக் கொண்டால் என்ன?’ என்று யோசித்த மன்னர், அந்தச் சிறுவனையே தன் வாரிசாகத் தேர்ந்தெடுத்தார்.
ஆம், இக்கதையில் வரும் சிறுவன் ஆண்டவர் தன்னைக் கைவிட மாட்டார் என்று நம்பிக்கையோடு இருந்தான். அந்த நம்பிக்கை, அவன் அந்நாட்டின் மன்னராக உயர்த்தியது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருந்தால், நாம் விரும்பியது நடக்கும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கானான் நாட்டை உளவுபார்க்க மோசேயால் அனுப்பி வைக்கப்பட்ட பன்னிருவர், மோசேயிடம் திரும்பி வந்து, கானான் நாட்டில் உள்ளவர்கள் வலிமையானவர்கள், அதனால் நாம் அந்நாட்டில் நுழைய முடியாது என்கிறார்கள். இதில் யோசுவாவும் காலாப் மட்டுமே விதிவிலக்கு. இந்த இருவரைத் தவிர்த்து, உளவாளிகளாக அனுப்பப்பட்ட பத்துப் பேரும், ஆண்டவரில், அவரது வாக்குறுதியில் நம்பிக்கை வைக்காமல் கானான் நாட்டிற்குள் நுழைய முடியாது என்கிறார்கள். இவ்வாறு அவநம்பிக்கையை வெளிப்படுத்தியவர்கள் கானான் நாட்டில் நுழைய முடியாமலே போய்விடுகின்றார்கள்.
இதற்கு முற்றிலும் மாறாக, நற்செய்தியில் வரும் கானானியப் பெண்மணி, இயேசுவால் தன் மகளிடமிருந்து பேயை ஓட்டமுடியும் என்று நம்பிக்கையோடு சென்று, தான் விரும்பியதைப் பெறுகின்றார். ஆம், இயேசுவில் நம்பிக்கைகொண்ட கானானியப் பெண்மணி தன் மகளிடமிருந்து பேய் நீங்கப் பெறுகின்றார். பத்து உளவாளிகளோ நம்பிக்கையில்லாமல், கானான் நாட்டிற்குள் நுழைய முடியாமல் போகிறார்கள். நாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டவர்களா, நம்பிக்கை அற்றவர்களாக சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் (மாற் 9: 23)
 நம்பிக்கையினாலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது (எபி 11: 6)
 நமது உயர்வும் தாழ்வும் ஆண்டவரில் நாம் கொள்ளும் நம்பிக்கையைப் பொறுத்தது!
ஆன்றோர் வாக்கு:
‘ஆண்டவரை நம்புவோர்க்கு இழப்பு என்பதே இல்லை (சீஞா 32: 24) என்கிறது சீராக்கின் ஞான நூல், ஆகையால், நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.