வாசக மறையுரை (ஆகஸ்ட் 03)

பொதுக்காலம் பதினெட்டாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I எண்ணிக்கை 12: 1-13
II மத்தேயு 14: 23 -26
மோசேக்கு எதிராகப் பேசிய மிரியாமும் ஆரோனும்
பேச்சைத் துண்டித்த வால்டர்:
பதினேழாம் நூற்றாண்டில், பிரான்ஸ் நாட்டில் தோன்றிய மிகப்பெரிய அறிஞர் வால்டர். ஒருநாள் இவர் தனக்கு அறிமுகமான ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது வால்டருக்கு அறிமுகமானவர், மூன்றாம் நபரைப் பற்றிய பேச்சை எடுத்தார். அவர் மூன்றாம் நபரைப் பற்றிப் பேச்சை எடுத்ததும், வால்டர் அவரிடம், “அவர் மிகவும் திறமையானவர்; நல்லவர்; உயர்வான எண்ணங்களைக் கொண்டவர்” என்றார்.
இதைக் கேட்டதும், வாட்லருக்கு அறிமுகமானவர், “நீங்கள்தான் அவரைப் பற்றி இப்படியெல்லாம் உயர்வாகப் பேசுகிறீர்கள்! அவரோ உங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசிக்கொண்டிருக்கின்றார்” என்று முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு சொன்னார். “அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை அவர் என்னைப் பற்றித் தவறாகப் பேசுகின்றார் என்றால், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றோம் போல” என்று சொல்லி வால்டர், தன்னோடு பேசியவரோடு பேச்சைத் துண்டித்தார்.
ஆம், இன்றைக்கு அடுத்தவருக்கு எதிராக, தவறாகப் பேசக்கூடிய மனிதர்கள் பெருகிவிட்டார்கள். அதைத் தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்ந்துகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், மிரியாமும் ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேசுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அவர்கள் ஏன் மோசேக்கு எதிராகப் பேசவேண்டும், அவர்கள் அவ்வாறு பேசியதால் அவர்களுக்குக் கிடைத்த தண்டனை என்ன என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மோசே தன் மனைவி சிப்போரா (விப 2: 21) இறந்ததும், எத்தியோப்பியப் பெண்ணை மணந்தார். இதனால் அவரது சகோதரி மிரியாமும், அவரது சகோதர் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசுகின்றாகள். அவர்கள் இருவரும் மோசேக்கு எதிராகப் பேசியது மட்டுமல்லாமல், கடவுள் மோசே வழியாக மட்டுமா பேசினார் எங்கள் வழியாகவும் பேசினார் என்கிறார்கள். இதனால் கடவுளின் சினம் அவர்கள் இருவருக்கும் எதிராக எழுகின்றது. கடைசியில் மிரியாம் தொழுநோயால் பீடிக்கப்படுகின்றார்.
ஆண்டவராகிய கடவுள் சொல்வது போன்று, மோசேயைப் போன்று சாந்தமான ஒருவரையும், நம்பிக்கைக்குரிய ஒருவரையும் காண முடியாது. அப்படிப்பட்டவர் கடவுளை நேர்முகமாகக் காணும் பேறுபெற்றவர். இத்தகையதொரு பேறு வேறுயாருக்கும் கிடையாது. உண்மை இப்படியிருக்கையில், மிரியாமும் ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேசியது மட்டுமல்லாமல், தங்கள் வழியாகவும் கடவுள் பேசியுள்ளார் என்று சொன்னதால், கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக எழுகின்றது. ஆதலால், கடவுளின் ஊழியர்களுக்கு எதிராகப் பேசுவதையும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதையும் விட்டுவிட்டு, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது நல்லது.
சிந்தனைக்கு:
 உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார் (மத் 10: 40)
 ஆண்டவரின் அடியவர் புனிதர் (2 அர 4: 9).
 அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது (எரே 1: 19)
இறைவாக்கு:
‘நான் தேர்ந்துகொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள் (எசா 65: 22) என்பார் ஆண்டவர். எனவே, கடவுளால் தேர்ந்துகொண்டவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, நாமும் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.