ஆகஸ்ட் 3 : நற்செய்தி வாசகம்
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-36.
அக்காலத்தில்
இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.
இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்.
பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார்.
அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர்.
அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள். இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
எண்ணிக்கை 12: 1-13
பொதுக்காலம் பதினெட்டாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
எண்ணிக்கை 12: 1-13
ஆண்டவரின் அடியாரை இகழ்வோர்க்குக் கிடைக்கும் தண்டனை
நிகழ்வு
ஹங்கேரி நாட்டைச் சார்ந்தவர் கர்தினால் மின்சென்றி. இவர் இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயத்தில், யூதர்கட்கு எதிராக நடந்த இனப்படுகொலையைக் கடுமையாக எதிர்த்தார். இதனால் அராங்கம் இவரைக் கைது செய்து, சிறையில் ஆயுள் கைதியாக வைத்துக் கடுமையாகச் சித்ரவதை செய்தது.
யூதர்கட்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சுட்டிக்காட்டியதைத் தவிர வேறு எந்தவொரு குற்றமும் செய்யாத இவரை, யார் யாரெல்லாம் மிகக் கேவலமாக நடத்தினார்களோ, அவர்களெல்லாம் மிகக் கொடிய சாவினைச் சந்தித்தார்கள். குறிப்பாக காவல்துறை அதிகாரியான கர்னல் ஓஸ்கோ, ஆஸ்திரிய எல்லையைக் கடக்க முயன்றபோது எதிரி நாட்டவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான்; கர்னல் பீடர்மான் என்பவனோ இரகசியக் காவல் தலைமையகத்தில் மர்மமான முறையில் செத்துக் கிடந்தான். ஏனைய பதிமூன்று காவல்துறை அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தோடு சோவியத் யூனியனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
கர்தினால் மின்சென்றியை நேரடியாகத் தாக்கிய ஹங்கேரி நாட்டு அமைச்சர்களில் மூவரில் இருவர் தூக்கிலிடப்பட்டார்கள்; ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். நிதியமைச்சரான ரீஸ் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டான்; சில ஆண்டுகள் கழித்து அங்கேயே கொல்லப்பட்டு கிடந்தான்; அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்கள். கர்தினாலுக்கு எதிராகக் குழுப்பங்களை ஏற்படுத்திய டொனாத் என்பவன் அடிமையானான். சிறையில் கர்தினாலைக் காவல்காத்த சிப்கர் என்பவன் சிறைக்கம்பிகளை எண்ணத் தொடங்கினான். கர்தினாலுக்கு எதிராகப் பொய்யான செய்திகளை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஹங்கேரியப் பத்திரிகையில் எழுதிவந்த பெண்ணொருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.
இவற்றையெல்லாம் பார்த்த மக்கள், ‘’ஆண்டவருடைய அடியாரை அநியாயமாகச் சிறையில் அடைத்துச் சித்ரவதை செய்தார்கள். அதனால்தான் இவர்கட்கு இவ்வாறெல்லாம் நேர்ந்தது’ என்று பேசத் தொடங்கினார்கள்.
உண்மைதான். யார் யாரெல்லாம் ஆண்டவரின் அடியார்கட்கு எதிராகச் செயல்படுகின்றார்களோ, அவர்களை இகழ்கின்றார்களோ அவர்கள் அனைவரும் ஆண்டவரின் தண்டனையையும் சாபத்தையும் தங்கள் மேல் வருவித்துக் கொள்கின்றார்கள். இன்றைய முதல் வாசகத்திலும் ஆண்டவரின் அடியார்க்கு எதிராகப் பேசிய ஒருவர்க்கு என்ன நேர்ந்தது என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்
மோசேக்கு எதிராகப் பேசிய மிரியமும் ஆரோனும்
மோசே தன்னுடைய மனைவி சிப்போரா இறந்த பிறகு, எத்தியோப்பிய பெண்ணை மணந்தார். இதைத் தொடர்ந்து மிரியமும் ஆரோனும், ’கடவுள் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? எங்கள் வழியாகப் பேசவில்லையா?’ என்று மோசேக்கு எதிராகப் பேசத் தொடங்கினர்.
இங்கு நாம் ஒரு முக்கியமான விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். மோசேக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் கடவுள் மிரியத்தையும் ஆரோனையும் தேர்ந்தெடுத்தார் (மீக் 6:4). இதில் மிரியத்தை ஆண்டவர் மோசேயைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்தினார் (விப 2: 1-10) ஆரோனையோ பார்வோனிடம் தன் குரலாகவும் மோசேயின் குரலாகவும் பேசுவதற்குப் பயன்படுத்தினார் (விப 4: 10-17). ஆனால், இந்த இருவரும் தாங்கள் இருவரும் ஆண்டவர்க்கு மிக நெருக்கமானவர்கள் என்பதுபோல் மோசேக்கு எதிராகப் பேசுகின்றார்கள். உண்மையில் மோசேதான் கடவுட்கு மிக நெருக்கமாக இருந்தார்; அவர்தான் அவரோடு முகமுகமாய்ப் பேசினார் (விப 19: 16-19, 24: 17-18, 34: 5-11). அப்படியிருக்கையில் மிரியமும் ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேசியதால், கடவுளின் சினம் அவர்கள் மேல் விழுகின்றது.
மிரியத்தைத் தொழுநோயால் தண்டித்த ஆண்டவர்
மிரியமும் ஆரோனும் தன் ஊழியன் மோசேக்கு எதிராகப் பேசியதை அறிந்த ஆண்டவர் அவர்கள் இருவரையும் கூடார வாயிலுக்கு அருகே அழைத்து, அவர்களிடம், மோசே எப்படிப்பட்டவர்… அவர் தனக்கு எவ்வளவு நெருக்கமானவர்… அவரைப் பற்றி அவ்வாறு பேசுவது முறையாகுமா? என்று கேட்டு அவர்கள்மீது சினம் கொள்கின்றார். பின்னர் அவர் அங்கிருந்து செல்ல மிரியத்தைப் பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடிக்கின்றது.
இங்கு ஒரு கேள்வி எழலாம். மிரியமும் ஆரோனும் சேர்ந்து தானே மோசேக்கு எதிராகப் பேசினார்கள். அப்படியிருக்கையில் மிரியத்தை மட்டும் ஏன் தொழுநோய் பீடித்தது என்பதுதான் அக்கேள்வி. உண்மையில் மோசேக்கு எதிராகப் பேசியது மிரியம் மட்டும்தான். இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற முதல் வசனத்தில் மிரியத்தின் பெயர்தான் முதலில் வருகின்றது. மேலும் அவர்தான் குடும்பத்தில் மூத்தவர். அப்படியிருக்கையில் அவர்தான் மோசேக்கு எதிராகப் பேசியிருக்கவேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் அவர்க்கு அப்படியொரு தண்டனை கிடைக்கின்றது. இதற்குப் பின்பு தொழுநோயால் பீடிக்கப்பட்ட மிரியத்தை குணப்படுத்த வேண்டுமென்று ஆரோன் மோசேயிடம் பரிந்துபேசியபோது, மோசே மிரியத்திற்காக ஆண்டவரிடம் பரிந்து பேசி, அவரைக் குணம்பெறச் செய்கின்றார். இவ்வாறு மிரியம் தனக்கெதிராகப் பேசியபோதும் மோசே அவரை மன்னித்து, அவர்க்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தருபவராக இருக்கின்றார்.
சிந்தனை
‘உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்’ (தொநூ 12: 3) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவரின் ஊழியரை இகழாமல், அவர்களைப் பற்றித் தேவையில்லாமல் பேசாமல், அவர்கட்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.