#வாசக மறையுரை (ஜூன் 18)

பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
I 2 கொரிந்தியர் 11: 18, 21b-30
II மத்தேயு 6: 19-23
“விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேர்த்து வையுங்கள்”
பணத்தாசை இருப்பதை இழக்கச் செய்யும்:
சாலையோரமாக ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் சாலையை ஒட்டியிருந்த ஒரு பள்ளத்தில் நூறு உரூபாய்க் கட்டு கிடந்தது. உடனே அவர், யாராவது வருகின்றார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் வரவில்லை என்பது தெரிந்ததும், அந்த நூறு உரூபாய்க் கட்டை எடுத்து, மடியில் மறைத்து வைத்துக்கொண்டு, வீட்டிற்கு நடையைக் கட்டினார் அவர். வீட்டிற்குச் சென்றதும் உரூபாய்க் கட்டை எண்ணிப் பார்த்தார். அதில் தொண்ணூற்று ஒன்பது நூறு உரூபாய்கள் தான் இருந்தன.
‘கட்டு என்றால், நூறு நோட்டுகள் அல்லவா இருக்கும்… இதில் தொண்ணூற்று ஒன்பது நோட்டுகள்தான் இருக்கின்றனவே! ஒருவேளை ஒரு நூறு உரூபாய் நோட்டு பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டதோ… போய் அதையும் எடுத்துக்கொண்டு வருவோம்’ என்று முடிவு செய்துகொண்டு அவர் பணம் கிடந்த இடத்திற்கு விரைந்து சென்று, தேடு தேடு என்று தேடினார். பணம் அவருக்குக் கிடைக்கவில்லை. அந்நேரத்தில் பணத்தைத் தொலைத்தவர் அங்கு வந்தார். அவர், நீண்டநேரம் பள்ளத்தில் பணத்தைத் தேடிக் கொண்டிருந்தவரைப் பார்த்து, “நீங்கள்தானே என்னுடைய பணத்தை எடுத்து வைத்திருக்கின்றீர்கள். மரியாதையாக எடுத்த பணத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால், காவல் நிலையத்திற்குச் செல்லவேண்டி வரும்” என்றார். இதனால் பணத்தை எடுத்துவர், ‘உள்ளதும் போய்விட்டதே’ என்று நினைத்துக்கொண்டு மிகவும் வருத்தத்தோடு, அந்தப் பணத்தை உரியவரிடம் திருப்பிக் கொடுத்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பணத்தைப் பள்ளத்திலிருந்து எடுத்தவர் அதுவே போதும் என்று நினைத்திருந்தால், 9900 உரூபாய் அவரிடம் இருந்திருக்கும்; ஆனால், அவர் நூறு உரூபாய்க்கு ஆசைப்பட்டு, உள்ளதையும் இழந்தார். பலர் இந்த மனிதரைப் போன்று பணத்தாசை பிடித்து, இருப்பதையும் இழந்து நிற்கின்றார்கள். நற்செய்தியில் இயேசு, மண்ணுலகில் அல்ல, விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள் என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைக்குப் பலர், எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ, அவ்வளவு பணத்தைச் சேர்த்துக்கொண்டு, வாழ்க்கையை மிகழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறியில் கடுமையாக உழைக்கும் அவர்கள், தங்களுடைய வாழ்க்கையைச் சற்றுத் திரும்பிப் பார்க்கையில் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோயிருக்கும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களில் பலர் இப்படித்தான் இருந்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இயேசு சொன்ன, மண்ணுலகில் அல்ல, விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைய்யுங்கள என்ற வார்த்தைகள் சற்றுப் புதிதாகவே இருந்திருக்கும்.
மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைத்தால் அது அழிந்துவிடும். மாறாக, விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைத்தால் அதற்கு அழிவே இல்லை. மட்டுமல்லாமல், மண்ணுலக செல்வத்தால் வாழ்வு வந்துவிடாது (லூக் 12: 15); ஆனால், விண்ணுலக செல்வத்தால் நமக்கு வாழ்வு வரும். எனவே, நாம் நமது நற்செயல்களால் விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைப்போம்.
சிந்தனைக்கு:
 நீ சம்பாதித்த பணம் உன் ஆன்மாவை உனக்குத் திருப்பித் தந்துவிடாது – பாப் டைலன்.
 பணத்தை விடவும் நேரம் மிகவும் பொன்னானது. ஏனெனில், பணத்தைத் திரும்பப் பெறலாம். நேரத்தைத் திரும்பப் பெற முடியாது – ஜிம் ரோமன்
 நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள் (லூக் 16: 9)
இறைவாக்கு:
‘செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்’ (1 திமொ 6: 9) என்பார் புனித பவுல். எனவே, நாம் மண்ணுலக செல்வத்தை அல்ல, விண்ணுலக செல்வத்தைச் சேர்த்துவைத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.