குலத்தின் மிக உயரிய பரிந்துரையாளர் இயேசு
கடந்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி துவக்கப்பட்ட திருத்தந்தையின் ‘இறைவேண்டல் குறித்த புதன் மறைக்கல்வியுரை, 38 தொடர்களுக்குப்பின் ஜூன் 16ம் தேதி, இப்புதனுடன் நிறைவுக்கு வந்தது. ‘ஒவ்வோர் இறைவேண்டலின் ஆன்மாவாகவும், எடுத்துக்காட்டாகவும் இயேசு இருக்கிறார் என, தன் 36வது தொடரில் ஏற்கனவே சிந்தனைகளைப் பகிர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும் இயேசுவின் இறைவேண்டல் குறித்து எடுத்துரைத்து, வத்திக்கானின் புனித தாமாசோ வளாகத்தில், இத்தொடரை நிறைவு செய்தார். முதலில் மாற்கு நற்செய்தியிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு தொடர்ந்தது.
இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், “நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்”, (என்றார்). […] பின், சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். 36“அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார். (மாற் 14, 32-36)
அன்பு சகோதரரே, சகோதரிகளே, இயேசுவின் இறைவேண்டல் குறித்து மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்து, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித்தொடரை இன்று நிறைவுசெய்வோம். மீட்புதரும் தன் மரணத்தையும் உயிர்ப்பையும் நெருங்கிவந்த வேளையில், இறைத்தந்தையோடு இயேசு மேற்கொண்டிருந்த உரையாடல், மேலும் நெருக்கம் நிறைந்ததாகியது. இறுதி இரவு உணவின் ‘அருள்பணித்துவ இறைவேண்டலில்’ இயேசு தன் சீடர்களுக்காகவும், அவர்களின் வார்த்தை வழியாக நம்பிக்கை கொள்வோருக்காகவும் தந்தையை நோக்கி வேண்டுகிறார். தோட்டத்தின் அந்த துயர் நிறைந்தவேளையில், தன் துயர்களை இறைவனிடம் கையளித்து, இறைத்தந்தையின் விருப்பத்தை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறார். சிலுவையில் துன்பங்களின் இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையிலும், இயேசு தொடர்ந்து செபித்துக்கொண்டிருந்தார். இவ்வுலகின் ஏழைகள், மற்றும், கைவிடப்பட்டோரின் சார்பாக, தன்னை அடையாளம் கண்டு, திருப்பாடல்களின் பாரம்பரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். சிலுவையிலறையப்பட்ட இயேசு, இத்தகைய வேளைகளில், உலகின் பாவங்களை தன் தோள்களின்மேல் சுமக்கிறார். இறைவனிடமிருந்து பாவிகளைப் பிரிக்கும் இடைவெளி தரும் துயரை, நமக்காக அனுபவிக்கும் இயேசு, மனித குலத்தின் மிக உயரிய பரிந்துரையாளராகிறார். தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைத்தந்தையுடன் அன்புடன்கூடிய முடிவற்ற கலந்துரையாடலில் நம்மையும் இணைக்கும் நமதாண்டவர் இயேசு, நமக்காக தொடர்ந்து இறைவேண்டல் செய்துகொண்டிருக்கிறார் என்பதை மனதில் கொண்டவர்களாக, நம் வாழ்வின் இறைவேண்டல்களைத் தொடர்வோம்.
இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர், இளையோர், நோயுற்றோர், மற்றும் புதுமணத் தம்பதியர் என அனைவரையும் நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாக உரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
Comments are closed.