இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில்,
“எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.
இறைவன் அவரது பிள்ளைகளாகிய நமக்குத் தேவையானதை தகுந்த நேரத்தில் தருவார் என்பதை நாம் விசுவசிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
விளம்பரத்திற்காகவும், சுய பெருமைக்காகவும் செய்யும் அறச்செயல்களினால் இறைவனிடம் இருந்து நமக்கு கைம்மாறு கிடைக்காது என்பதை உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
எண்ணற்ற மக்களை இறைவன்பால் மனம் திருப்பிய இன்றைய புனிதர் ரெஜிஸை நமது திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மகத்தான சேவை புரிந்த நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவலர்கள், அனைத்து முன்கள பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் நமக்கு தந்தருளிய இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை நன்கு குறைந்து வருகிறது. நமது வேண்டுதல்களை செவிமடுத்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.