ஜூன் 17 : நற்செய்தி வாசகம்

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-
“என்னைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்”
பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் வியாழக்கிழமை
I 2 கொரிந்தியர் 11: 1-11
II மத்தேயு 6: 7-15
“என்னைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்”
போக்குவரத்துக் காவலரின் விவேகமான வார்த்தைகள்:
ஓர் அரசு அதிகாரியை அவர் சொன்ன நேரத்தில் பார்க்கவேண்டும் என்பதற்காக இளைஞன் ஒருவன் தன்னுடைய மகிழுந்தில் வேக வேகமாக வந்தான். அப்படியிருந்தும் சற்றுக் கால தாமதமாகிவிட்டது. இதற்கு நடுவில் அவன் தன் வண்டியை நிறுத்துவதற்கு அரச அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக இடம் கிடைக்கவில்லை. இதனால் அவன், பக்கத்திலிருந்த ‘வாகனங்களை இங்கு நிறுத்தக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, “என் குற்றத்தை மன்னித்துக்கொள்ளுங்கள். அரச அலுவரைக் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்காவிட்டால் எனக்கு வேலையே கிடைக்காது” என்றொரு குறிப்பை எழுதி வைத்துவிட்டு, வேகமாக ஓடினான்.
இதைப் அப்பகுதியில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வந்த ஒருவர் பார்த்துவிட்டு, “இங்கு நான் இருபது ஆண்டுகளுக்கும் மேல் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வருகின்றேன். வாகனங்களை நிறுத்தக்கூடாத பகுதியில், நீ உன் வாகனத்தை நிறுத்துவதை நான் அனுமதித்தால், என்னை வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள். அதனால் என்னைச் சோதனைக்கு உட்படுத்தாமல், உன்னுடைய வாகனத்தை உடனே எடுத்துவிடு” என்றொரு குறிப்பை எழுதி வைத்தார். இதைச் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்துவிட்டு வேகவேகமாக ஓடிவந்த இளைஞன், வண்டியை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு, தாமதமாகவே அரச அலுவலரைப் பார்க்கச் சென்றான். அரச அலுவலர் நல்லவர் என்பதால், அவனை அவர் மன்னித்து, ஒரு பணியில் அமர்த்தினார்.
வேடிக்கையான நிகழ்வாக இருந்தாலும், இன்று பலர் ஆண்டவர் கற்றுக்கொடுத்த இறைவேண்டலை தங்களுடைய வசதிக்கேற்றாற்போல் பயன்படுத்துகின்றார்கள் என்ற உண்மையை பதிவுசெய்வதாக இருக்கின்றார். நற்செய்தியில் இயேசு, தன் சீடர்களுக்கு இறைவனிடம் எப்படி வேண்டவேண்டும் என்று கற்றுத்தருகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பலர் (இன்றும் கூட ஒருசிலர்) மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதுதான் இறைவேண்டல் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். “நீங்கள் அவர்களைப் போன்று இருக்கவேண்டாம்” என்று தன் சீடர்களிடம் சொல்லிவிட்டு, இயேசு, இறைவனுக்கு முதன்மையான இடமும், மனிதர்களுடைய தேவைகளுக்கு அடுத்த இடமும் இருப்பது மாதிரியான ஓர் இறைவேண்டலைக் கற்றுத் தருகின்றார்.
இயேசு சீடர்களுக்குக் ‘கடவுளைத் தந்தை’ என அழைக்கக் கற்றுத்தருகின்றார். இது இயேசுவின் சீடர்களுக்குப் புதிதாகவே இருந்திருக்கும். மட்டுமல்லாமல், கடவுளுடைய திருவுளம் இம்மண்ணுலகில் நிறைவேற வேண்டினால், நம்முடைய தேவைகள் நிறைவேறும் என்ற உண்மையையும் அவர்களுக்குக் கற்றுத்தருகின்றார். ஆகையால், பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியிருக்கின்ற இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டலை நம்பிக்கையோடு சொல்லி, அவரது ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 உண்மையான இறைவேண்டலானது இறைவனுடைய செவிகளுக்கு இனிமையைத் தந்து, அவரது உள்ளத்தை உருக்கும் – தாமஸ் வாட்சன்.
 கடவுளின் திருவுளத்தோடு நம்மையே இணைத்துக் கொள்வதுதான் உண்மையான இறைவேண்டல் – ஈ. ஸ்டான்லி ஜோன்ஸ்.
 இயேசு கற்றுத்தந்த இறைவேண்டலை அடிக்கடி சொல்லும் நாம், அதன் ஆழமான அர்த்தத்தை உணர்ந்துதான் சொல்கின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
’என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்’ (திபா 56: 😎 என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மை முழுமையாக அறியும் இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.