சிறார், மனிதக் குடும்பத்தின் வருங்காலம் -திருத்தந்தை

“சிறார், மனிதக் குடும்பத்தின் வருங்காலம். எனவே, அவர்களின் வளர்ச்சி, உடல்நலம்,  அமைதியான வாழ்வு ஆகியவற்றை ஊக்கப்படுத்தப் பணியாற்றவேண்டும் என, நம் அனைவரிடமும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

ஜூன் 12, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, சிறார் தொழில்முறை ஒழிப்பு உலக நாளை முன்னிட்டு, சிறார் தொழில்முறை ஒழிப்பு உலக நாள் (#NoChildLabourDay) என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் இவ்வாறு தன் எண்ணத்தைப் பதிவுசெய்துள்ளார்.

சிறார் தொழில்முறை ஒழிப்பு

“இப்போதே செயல்படு: சிறார் தொழில்முறை ஒழிப்பு!” என்ற தலைப்பில், சிறார் தொழில்முறை ஒழிப்பு உலக நாள் இச்சனிக்கிழமையன்று முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டது.

இந்நாளையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம், உலக அளவில் சிறார் தொழில்முறையை ஒழிப்பது குறித்த ஒப்பந்தம் எண் 182 நடைமுறைக்குவந்தபின்னர், இந்த உலக நாள், இச்சனிக்கிழமையன்று முதன்முறையாக கடைப்பிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளது.

மேலும், இந்நாளை முன்னிட்டு, உலக தொழில் நிறுவனமும், ஐ.நா.வின் யுனிசெப் குழந்தை நல அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு முழுவதும் சிறார் தொழில்முறையை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், 2022ம் ஆண்டில் தென்னாப்ரிக்கா நடத்தவிருக்கும், சிறார் தொழில்முறை குறித்த பன்னாட்டு  மாநாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து உலக அளவில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை 9 கோடியே 40 இலட்சமாகக் குறைந்துள்ளது என்று ஐ.நா. நிறுவனங்கள் கூறியுள்ளன.

புனித கன்னி மரியாவின் தூய்மை மிகு இதயம்

மேலும், ஜூன் 12, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட புனித கன்னி மரியாவின் தூய்மைமிகு இதயம் பெருவிழா குறித்து, மற்றுமொரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, மரியாவின் இதயம், மிகச்சிறந்த சுடர்விடும் முத்து போன்றது, அது, இறைவேண்டலில், இயேசுவின் பேருண்மைகளைத் தியானித்ததன் வழியாக, கடவுளின் விருப்பத்தை பொறுமையோடு ஏற்றதால் உருவாக்கப்பட்ட மென்மையான இதயம் என்று கூறியுள்ளார்.

Comments are closed.