இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 103:3-ல்,
“அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.” என வாசிக்கின்றோம்.
இறைவன் நமது பாவங்களை எல்லாம் மன்னித்து நமது நோய்களில் இருந்து நம்மைக் குணமாக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.” என கூறப்பட்டுள்ளது.
தூய கன்னி மரியாவின் மாசற்ற இதய விழாவைக் கொண்டாடும் நாம், இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு தனது உள்ளத்தைத் தயார்படுத்திய மரியாவைப் போல நாமும் நமது உள்ளத்தை இறை சித்தத்திற்கு தயார்படுத்த இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
மரியாவின் மாசற்ற இதயத்தில் எந்த அளவுக்கு இரக்கமும், அன்பும் நிறைந்திருந்தது போல நமது இதயத்திலும் இரக்கமும், அன்பும் நிறைந்திருக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தேவையான அளவுக்கு பொது மக்களுக்குக் கிடைத்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நோய்த்தொற்றின் தீவிரத்தால் மரணித்த அனைவருக்காகவும் பிராத்திப்போம். அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.