மே 19 : நற்செய்தி வாசகம்
நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11b-19
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.
இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
கொடுத்தலே பேறுடைமை”
பாஸ்கா காலம் ஏழாம் வாரம் புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 20: 28-38
II யோவான் 17: 11b-19
“கொடுத்தலே பேறுடைமை”
கடவுளுக்குக் காணிக்கை கொடுக்க முயன்ற சிறுவன்:
ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் கிறிஸ்தவக் குடும்பம் ஒன்று ஞாயிறு திருப்பலிக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பி வந்தது. வீட்டிற்கு வந்த பிறகு காலை உணவை முடித்துக்கொண்டு, அவரவர் தங்கள் அறைக்குச் சென்றனர். சிறிதுநேரம் கழித்து, அந்தக் குடும்பத்தில் இருந்த தாய் தன்னுடைய ஆறு வயது மகன் என்ன செய்துகொண்டிருக்கின்றான் என்று பார்ப்பதற்காக அவனுடைய அறைக்கு வந்தார். அவனோ முழந்தாள்படியிட்டு தன்னிடமிருந்த நாணயங்களை மேலே தூக்கிப் போடுவதும், அவை கீழே விழுவதும், மீண்டுமாக அவன் அவற்றை மேலே தூக்கிப்போடுவதும், அவை கீழே விழுவதுமாகக் கண்டார்.
உடனே அவர் தன் மகனிடம் சென்று, “அன்பு மகனே! இப்பொழுது நீ என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?” என்று கேட்க, அவன் தன் மழலைப் பேச்சு மாறாமல், “அம்மா! இன்று எங்கள் மறைக்கல்வி ஆசிரியர், ‘கடவுளுக்கு நாம் நம்மிடம் இருப்பதைக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும்’ என்றார். அவர் அவ்வாறு சொன்னபொழுது, என்னிடத்தில் ஒன்றுமில்லை. அதனால்தான் வீட்டிற்கு வந்து, என்னிமுள்ள நாணயங்களை எங்கும் நிறைந்திருக்கும் கடவுளிடம் கொடுக்கின்றேன்; ஆனால், ஏனோ கடவுள் நான் கொடுக்கும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்ள மறுக்கின்றார்” என்றான். தன் மகன் இவ்வாறு சொன்னதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த தாய், கடவுளுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் அவனை எண்ணிப் பெருமையடைந்தார்.
(கடவுளுக்குக்) கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த இச்சிறுவன் உண்மையில் நமது பாராட்டிற்குரியவராக இருக்கின்றான். இன்றைய முதல்வாசகத்தில் பவுல், “பெற்றுக்கொள்வதை விடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
திருத்தூதர் பவுலின் அழைப்பின் பெயரில் அவரிடம் வந்த எபேசு நகர் மூப்பர்களிடம் அவர் பேசும் வார்த்தைகள்தான், “பெற்றுக்கொள்வதை விடக் கொடுத்தலே பேறுடைமை” என்ற வார்த்தைகளாகும்.
ஆண்டவர் இயேசு சொன்னதாகப் பவுல் சொல்லும் இவ்வார்த்தைகள் நான்கு நற்செய்தி நூல்களிலும் எங்கும் காணக்கிடைக்கவில்லை; ஆனால்,. யோவான் நற்செய்தியில் வரும், “இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகம் கொள்ளாது” (யோவா 21: 25) என்ற வார்த்தைகளாய் அடிப்படையாகக் கொண்டு, இயேசு இவ்வார்த்தைகளைக் கூறியிருக்கலாம் என நாம் நம்பலாம். மேலும் நற்செய்தியைத் தவிர்த்து, இயேசு சொன்னதாய் இடம்பெறும் ஒரே இறைவார்த்தைப் பகுதி இதுதான் இந்த இறைவார்த்தை நாம் பெறுபவர்களாக அல்லாமல், கொடுப்பவர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. நாம் பெறுபவர்களாக? அல்லது கொடுப்பவர்களாக? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 6: 38)
எதைக் கொடுக்கின்றமோ, அதுவே நம்முடையது – ஈசபெல் ஆலன்டே.
கொடுப்பது நமது கையைக் கடிக்கவேண்டும்.
இறைவாக்கு:
‘கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு’ (சீஞா 35:
என்கிறது சீராக்கின் ஞானநூல். எனவே, நாம் முகமலர்ச்சியோடு கொடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.