வாசக மறையுரை (மே 18)

பாஸ்கா காலம் ஏழாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I திருத்தூதர் பணிகள் 20: 17-27
II யோவான் 17: 1-11a
“நன்மை பயப்பதை மக்களுக்கு அறிவி”
நற்செய்தி அறிவிப்பது அமெரிக்க அதிபராக இருப்பதை விடவும் உயர்ந்தது:
அமெரிக்காவின் இருபதாவது அதிபராகப் பதவி வகித்தவர் ஜேம்ஸ் கார்ஃபீல்டு (James Garfield). இவர் 1881 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 4 ஆம் நாள், அமெரிக்காவின் இருபதாவது அதிபராகப் பதவியேற்றார்.
இவர் பதவியேற்கும்பொழுது ஆற்றிய உரையைக் கேட்டு மெய்ம்மறந்து போன ஒருவர் இவரிடம் வந்து, “உங்களுடைய உரை மிகவும் அற்புதமாக இருந்தது. உங்களைப் பொறுத்தவரையில், இவ்வுலகில் மிக உயர்ந்த பொறுப்பு எது?” என்றார். ஜேம்ஸ் கார்ஃபீல்டிடம் இப்படியொரு கேள்வி கேட்டவர், ‘அமெரிக்க அதிபராக இருப்பதுதான் இவ்வுலகில் மிக உயர்ந்த பொறுப்பு’ என்று ஜேம்ஸ் கார்ஃபீல்டு சொல்வார் என்று எதிர்பார்த்துத்தான் கேள்வி கேட்டார்; ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஜேம்ஸ் கார்ஃபீல்டு, “என்னைப் பொறுத்தளவில் நற்செய்தியை அறிவிப்பதுதான் இவ்வுலகில் மிக உயர்ந்த பொறுப்பு என்று சொல்வேன். ஏனெனில், நான் அமெரிக்க அதிபராவதற்கு முன்பு ஒரு நற்செய்தியைப் பணியாளராக இருந்தேன். அதை விட்டுவிட்டு அமெரிக்க அதிபரானேன். இப்பொழுது என் நிலையிலிருந்து ஒரு படி சற்றுக் குறைந்திருப்பதாவே உணர்கிறேன்” என்றார்.
நற்செய்தி அறிவிப்பதுதான் மிக உயர்ந்த பொறுப்பு அல்லது பணி என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்டு சொன்ன வார்த்தைகள்தான் எத்துணைச் சிறப்பானவை! இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், நன்மை பயக்கும் அனைத்தையும் மக்களுக்கு அறிவித்ததாகக் குறிப்பிடுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பல்வேறு துன்பங்கள், சவால்கள், போராட்டங்கள் ஆகியவற்றுக்கு நடுவில் கடவுளின் வார்த்தையை அறிவித்து வந்த பவுல், இன்றைய முதல் வாசகத்தில், மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, அங்கிருந்த திருஅவையின் மூப்பர்களை வரவழைக்கின்றார். பின்னர் அவர் அவர்களிடம் பேசக்கூடிய வார்த்தைதான்: “நன்மை பயக்கும் ஒன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை” என்பதாகும். அப்படியெனில், புனித பவுல் மக்கள் நடுவில் பணிசெய்தபொழுது, நன்மை பயக்கும் எல்லாவற்றையும் அல்லது இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுமையாக அறிவித்தார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
புனித பவுல் நன்மை பயக்கும் எல்லாவறையும் – இறைவார்த்தையை அறிவித்தார் எனில், நாமும் மக்களுக்கு நன்மை பயப்பதை அறிவித்து, அவர்களைக் கடவுளிடம் அழைத்து வருவது தலையாய கடமையாக இருக்கின்றது. இன்றைக்குக் கடவுளின் வார்த்தையை அறிவிப்போர் வெகு சொற்பமாக இருக்கும்பொழுது, எல்லாருக்கும் கடவுளின் வார்த்தையை நாம் அறிவிக்க முன் வரவேண்டும்.
சிந்தனைக்கு
 அறிவித்ததைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும் (உரோ 10: 17)
 நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் மனவுறுதியுடன் பலன் தருகின்றவர்களைக் குறிக்கும் (லூக் 8: 15)
 நாம் கேட்ட இறைவார்த்தையை மற்றவர்களுக்கும் அறிவிக்கத் தயாரா?
இறைவாக்கு:
‘நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு’ (1 கொரி 9: 16) என்பார் புனித பவுல். எனவே, நன்மை பயக்கும் நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.