நற்செய்தி வாசக மறையுரை (ஆகஸ்ட் 11)

பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மத்தேயு 18: 1-5, 10, 12-14
அடக்கி ஆள்பவர் அல்ல, அன்புப் பணிசெய்வோரே பெரியவர்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் ஆறுகளுக்கிடையே, ‘தங்களுக்குள் யார் பெரியவர்?’ என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. முதலில் நைல் ஆறு, “உலகில் நான்தான் மிக நீளமான ஆறு. அதனால் நான்தான் பெரியவன்” என்றது. இதைத் தொடர்ந்து அமேசான் ஆறு, “நான்தான் உலகில் அகலமான ஆறு. அதனால் நான்தான் பெரியவன்” என்றது. அடுத்து தனுபே (Danube) ஆறு, “நான் நீளத்தில் இரண்டாவதாக இருக்கலாம்; ஆனால், நான்தான் சுறுசுறுப்பாகப் பாய்ந்தோடக்கூடிய ஆறு. என்னில்தான் அதிகமான மக்கள் பயணிக்கின்றார்கள். அதனால் நான் பெரியவன்” என்றது.
இதற்குப் பின்பும் ஒருசில ஆறுகள் எழுந்து, தங்களுடைய தரப்பு நியாயங்களைச் சொல்லி, தாங்கள்தான் பெரியவர்கள் என்று சாதித்தன. எல்லாவற்றையும் மேலே இருந்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கடவுள், “ஓர் ஆறு நீளமாக இருக்கின்றது என்பதற்காகவோ அல்லது அகலமாக இருக்கின்றது என்பதற்காகவோ அல்லது சுறுசுறுப்பாக ஓடுகின்றது என்பதற்காகவோ அந்த ஆறு பெரிய ஆறாகிவிடாது. எந்த ஆறு யாரும் அறியாமல், பெயர்கூட இல்லாமல், மலையிலிருந்து இறங்கி வந்து, வறண்ட பகுதிகளை வளமையக்கி, மக்களின் தாகத்தையும் தணிக்கின்றதோ அந்த ஆறுதான் பெரிய ஆறு” என்றார்.
இதற்குப் பிறகு ஆறுகள் தங்களுக்குள் யார் பெரிய ஆறு என்ற வாக்குவாதத்தில் ஈடுபடவிலை.
ஆம், ஒருவர் பணபலம் கொண்டிருக்கின்றார் என்பதாலோ அல்லது ஒருவர் அதிகாரத்தில் இருக்கின்றார் என்பதாலோ அவர் பெரியவர் கிடையாது. எவர் ஒருவர் யாருக்கும் தெரியாமல், மிகுந்த தாழ்ச்சியோடு எல்லாருக்கும் சேவை செய்கின்றாரோ அவரே பெரியவர். அப்படிப்பட்ட செய்தியைத்தான் மேலே உள்ள நிகழ்வும் அல்லது கதையும் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
சீடர்கள் இயேசுவிடம், “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” எனக் கேள்வி கேட்டல்
நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் அவரிடம், “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். சீடர்கள் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டு, அதற்கான தெளிவினைப் பெற முயன்றது நல்லதாக நமக்குத் தோன்றினாலும், அவர்களின் நோக்கம் தவறாகவே இருக்கின்றது. காரணம், இதற்கு முந்தைய பகுதியில் (மத் 17: 1-9) இயேசு தன்னோடு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு மலைக்குச் சென்று, அங்கு தோற்றமாற்றம் அடைந்திருப்பார். இதனால்தான் சீடர்கள் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார்கள்.
சிறுபிள்ளையைப் போல் தம்மைத் தாழ்த்துவோர் விண்ணரசில் பெரியவர்
தன்னுடைய சீடர்கள் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு இரண்டுவிதமான பதில்களைச் சொல்கின்றார். முதலாவதாக, ஒருவர் விண்ணரசில் நுழைவதற்கு அவர் சிறுபிள்ளையைப் போல் தம்மைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும். விண்ணரசில் எல்லாராலும் நுழைந்துவிட முடியாது; கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோரால் மட்டுமே முடியும். அப்படிக் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்கின்ற ஒருவர் தாழ்ச்சியோடு வாழ்ந்தார் எனில், அவரால் விண்ணரசில் மிக எளிதாக நுழைந்துவிட முடியும்; விண்ணரசில் மிகப்பெரியவராகவும் முடியும்.
அடுத்ததாக, இயேசு தன்னுடைய சீடர்களிடம், “இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார்” என்கின்றார். சிறுபிள்ளை இயேசுவின் காலத்திலும் சரி, இன்றைய காலத்திலும் சரி இரண்டாம் தரக் குடிமக்களாகவே கருதப்படுகின்றார்கள். இயேசு அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்த இரண்டு நிகழ்வுகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நீங்கலாக ஆண்களின் தொகை ஐயாயிரம், நான்காயிரம் என்றே வரும். இதிலிருந்தே இயேசுவின் காலத்தில் சிறு பிள்ளைகள், குழந்தைகள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்பது புரிந்துவிடும். இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளுக்கு எதிராகத்தான் அதிகமான வன்முறைகள் நடந்துகொண்டிக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் சிறு பிள்ளைகள், குழந்தைகள் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுகின்றார்கள் என்பது புரிந்துவிடும்.
இத்தகைய பின்னணியில் மிகவும் வலுக்குறைந்தவர்களாக, குரலற்றவர்களாக இருக்கும் சிறுபிள்ளைகளை ஏற்றுக்கொள்கின்ற எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார். அப்படிப்பட்டவர் விண்ணரசில் நுழைந்து பெரியவராக இருப்பார் என்கின்றார் இயேசு.
ஆகையால், நாம் சிறுபிள்ளைகளைப் போன்று இறைவனை மட்டுமே நம்பி வாழ்ந்து, தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் விண்ணரசில் பெரியவர்கள் ஆவோம்.
சிந்தனை
‘இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை, அதனால் தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் நம்மிடமிருந்து, நான்தான் பெரியவன் என்ற ஆணவத்தை அகற்றிவிட்டுத் தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.