மீண்டும், திருத்தந்தையின் மறைக்கல்வி உரைகள்

கோடை விடுமுறையையொட்டி, கடந்த ஒரு மாத காலமாக புதன் மறைக்கல்வி உரைகளை நிறுத்தி வைத்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 5, இப்புதனன்று, மீண்டும், தன் மறைக்கல்வி உரைகளை வழங்க ஆரம்பித்துள்ளார்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகம், மற்றும் புனித ஆறாம் பவுல் அரங்கம் ஆகியவற்றில் நிகழ்ந்துவந்த திருத்தந்தையின் மறைக்கல்வி உரைகள், கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால், பாப்பிறை இல்லத்தின் நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே மீண்டும் தொடங்கின.

திருத்தந்தை பிரான்சிஸ் – 318வது மறைக்கல்வி உரை

ஜூலை மாதங்களிலும், ஆண்டு தியானத்தின்போதும், திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளும் வேளைகளிலும் தவிர, ஏனைய புதன்கிழமைகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தவறாமல் தன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வந்துள்ளார் என்பதும், ஆகஸ்ட் 5ம் தேதி அவர் வழங்கிய மறைக்கல்வி உரை, அவர் தன் தலைமைப் பணிக்காலத்தில் வழங்கிய 318வது மறைக்கல்வி உரை என்பதும் குறிப்பிடத்தக்கன.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தலைமைப் பணியை நிறைவு செய்த வேளையில், நாம் திருப்பலிகளில் பயன்படுத்தும் நம்பிக்கை அறிக்கையை மையப்படுத்தி வழங்கிவந்த புதன் மறைக்கல்வி உரைகளை, தொடர்ந்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்துடன் சேர்த்து, இதுவரை 15 வெவ்வேறு தலைப்புக்களில் தன் புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வந்துள்ளார்.

அருளடையாளங்கள், தூய ஆவியாரின் கொடைகள், திருஅவை, குடும்பம், இரக்கம், கிறிஸ்தவ எதிர்நோக்கு, நற்கருணை, திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், பத்துக் கட்டளைகள், ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ செபம், திருத்தூதர் பணிகள் நூல், மற்றும் பேறுபெற்றோர் கூற்றுகள் ஆகிய தலைப்புக்களில் தன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வந்துள்ள திருத்தந்தை, இறுதியாக, கிறிஸ்தவ இறைவேண்டல் என்ற தலைப்பில் தன் உரைகளை வழங்கினார்.

தற்போது நிலவும் கொள்ளைநோயின் தாக்கத்தை மையப்படுத்தியும், நெருக்கடியான இக்காலத்தில், உலகைக் குணமாக்க கிறிஸ்தவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் குறித்தும் ஒரு புதிய தொடரை, ஆகஸ்ட் 5ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைக்கல்வி உரையில், துவக்கியுள்ளார்.

திருத்தந்தையின் விண்ணப்பங்கள்

ஒவ்வொரு முறையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணங்களை முடித்து திரும்பியதும், அப்பயணங்களில் தான் பெற்ற அனுபவத்தை, தன் மறைக்கல்வி உரையில் மக்களுடன் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக் கொண்டுள்ளார்.

அதேவண்ணம், உலகில் நிகழும் ஒரு சில இடர்களையொட்டியும், ஒரு சில உலக நாள்களை மையப்படுத்தியும், தன் மறைக்கல்வி உரைகளின் இறுதியில் விண்ணப்பங்களை விடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 12ம் தேதி, குழந்தைத் தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலகநாள் என்பதையடுத்து, ஜூன் 10ம் தேதி,  தன் மறைக்கல்வு உரையில் விண்ணப்பம் ஒன்றை விடுத்தார்.

புனித 6ம் பவுல் அரங்கம் அமைப்பு

திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் தலைமைப்பணிக் காலம் வரை, திருத்தந்தையர் வழங்கிவந்த புதன் மறைக்கல்வி உரைகள், புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்து வந்தன. இந்த சந்திப்புக்களுக்கென ஓர் அரங்கத்தை நிறுவும் பணிகள், 1963ம் ஆண்டு துவங்கி, 1971ம் ஆண்டு முடிவடைந்தன.

6,300 பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு, தற்போது, புனித 6ம் பவுல் அரங்கம் என்றழைக்கப்படும் இந்த அரங்கம், 1971ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

புனித 2ம் யோவான் பவுல் மறைக்கல்வி உரை

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் தலைமைப்பணிக் காலத்தில், மறைக்கல்வி உரையைக் கேட்க வருவோரின் எண்ணிக்கை கூடிவந்ததால், இந்த சந்திப்புக்கள், புனித பேதுரு வளாகத்திற்கு மாற்றப்பட்டன.

1981ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி, புனித பாத்திமா அன்னை திருநாளன்று, இந்த வளாகத்தில் தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்க வந்த திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் வாழ்வைப் பறிக்கும் முயற்சியாக, துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலும், புனித 6ம் பவுல் அரங்கத்திலும் தன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட் 19 கொள்ளைநோய் நெருக்கடியால், மார்ச் 11ம் தேதி முதல் தன் மறைக்கல்வி உரைகளை பாப்பிறை நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கி வருகிறார்.

Comments are closed.