ஜூலை 14 : நற்செய்தி வாசகம்

தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24
அக்காலத்தில்
இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 11: 20-24
நீங்கள் இன்னும் மனம்மாறவில்லையா?
நிகழ்வு
பெர்சியாவை ஆண்டு வந்தவர் மாமன்னர் ஹருண்-அல்–ரஷித் (Harun–Al– Rashid). மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர், ஒருநாள் தன்னுடைய நாட்டில் இருந்த உயர்குடிமக்கள், அதிகாரிகள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் என யாவரையும் தன்னுடைய அரண்மனையில் நடைபெறவிருந்த விருந்துக்கு அழைத்தார். அவர்களும் இவருடைய அழைப்பினை ஏற்று, விருந்துக்கு வந்தார்கள். இதற்கு முன்பாக விருந்து நடைபெறும் இடத்திலிருந்த சுவர்களைக் கவின் மிகு கற்களால் அழகுபடுத்தி, வண்ண வண்ண மலர்களால் நிரப்பி வைத்தார்.
விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த எல்லாரும் விருந்துக்கு வந்ததும், மாமன்னர் ஹருண்-அல்-ரஷித் தன்னுடைய அரசபைக் கவிஞர் அபுல் அடயாவை (Abul Atayah) அழைத்து, தன்னைப் பற்றியும், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற விருந்தைப் பற்றியும் கவிதை ஒன்று பாடச் சொன்னார். அபுல் அடயாவும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், கவிதை பாடத் தொடங்கினார்: “உயர்ந்ததோர் அரண்மனையில் மாட்சிமையோடு வீற்றிக்கும் மாமன்னரே! நீர் வாழ்க! உம் குலம் வாழ்க! ஒவ்வொரு நாளும் உமக்கு மகிழ்ச்சியாகத் தொடங்கி, மனநிம்மதியோடு நிறைவு பெருக!”
கவிஞர் அபுல் அடயா இப்படி மாமன்னரை ஏற்றிப் போற்றுவதைக் கேட்டுவிட்டு, ‘ஆஹா..!. ஓஹோ…!’ என்று அவரை வியந்து பாராட்டினார்கள் விருந்துக்கு வந்தவர்கள். கவிஞர் இப்படியே பாடிக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று, “ஒவ்வொரு நாளும் ஆடம்பரமாகவும் பகட்டாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் மாமன்னரே! நீர் சாகும் தருவாயில் இருக்கும்பொழுது, உம்முடைய கடந்த கால வாழ்க்கையை ஒருவினாடி திரும்பிப் பார்த்தால் எல்லாமே புகைபோல மறைந்திருக்கும்” என்றார்.
கவிஞர் இப்படிப் பாடல் பாடியதும், அங்கிருந்த அமைச்சர், “கவிஞரே! உம்மை மாமன்னரைப் பற்றியும் விருந்தைப் பற்றியும் புகழ்ந்து பாடச் சொன்னால், மன்னரைப் பற்றி இப்படிப் பாடிக்கொண்டிருக்கின்றீரே…! உம்மை என்ன செய்கின்றேன் பார்” என்று சொல்லி, அவரை வெட்டிவீழ்த்த, தன்னிடமிருந்த வாளை ஓங்கினார். அவரைத் தடுத்து நிறுத்திய மாமன்னர், “கவிஞரை ஒன்றும் செய்யவேண்டாம். இத்தனை நாள்களும் அறியாமையில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த என்னுடைய அறிவுக்கண்ணை அவர் திறந்து வைத்திருக்கின்றார். அதனால் அவருக்கு தக்க சன்மானம்தான் தருவதுதான் முறை” என்றார்.
இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அபுல் அடயா என்ற அந்தக் கவிஞர், “மாமன்னரே! எனக்கு சன்மானம் எல்லாம் வேண்டாம். இப்பொழுதாவது நீர் உம்முடைய அறிவுக் கண்ணைத் திறந்தீரே! அதுவே போதும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதற்குப் பின்பு ஹருண்-அல்-ரஷித் பெர்சியா நாடு, குறிப்பாக பாக்தாத் நகரம் அறிவியல், ஆன்மிகம், கலை மற்றும் பண்பாடு போன்ற பல்வேறு தளங்களில் வளர்வதற்குப் பெரிதும் காரணமாக இருந்தார். (Little things about Great People – Gratian Vas)
ஆம். மிகவும் உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்து வந்த மாமன்னர் ஹருண்-அல்-ரஷித், அபுல் அடயா என்ற கவிஞருடைய வார்த்தைகளைக் கேட்டு, மனம்மாறி நல்வழியில் நடக்கத் தொடங்கினார். ஆனால், இயேசுவின் போதனையை மீண்டும் மீண்டும் கேட்டும் பார்த்தும் மனம்மாறாமல் ஒருசில நகரங்கள் இருந்தன. இந்நகரங்களுக்கு என்ன ஆகும் என்பதைக் குறித்து நற்செய்தியில் வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருந்த மறுத்த நகரங்கள்
இன்றைய நற்செய்தியில் இயேசு கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் ஆகிய மூன்று நகர்களையும் கடுமையாகச் சாடுகின்றார். இதில் கப்பர்நாகுமை மற்ற இரண்டு நகர்களை விட இன்னும் கடுமையாகச் சாடுகின்றார். காரணம் இந்த நகரில் இயேசு பல்வேறு வல்லசெயல்களைச் செய்திருந்தார் (மத் 4: 12-13, 8: 5-17, 9: 2-8, 18-33; மாற் 1: 23: 28). இப்படியிருந்தபொழுது இந்த நகரில் இருந்தவர்கள் மனம்திருந்தாமல் இருந்தார்கள். அதனால் இயேசு அந்த நகரைப் பார்த்து, “தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாக இருக்கும்” என்கின்றார். ஒருவேளை இயேசுவின் போதனையைச் சோதோம் நகரில் இருந்தவர்கள் (தொ நூ 18-19) கேட்டிருந்தால், அவர்கள் மனம்மாறியிருக்கக்கூடும்! ஆனால், இயேசுவின் போதனையைக் கேட்டபொழுதும் கப்பர்நாகும் இருந்தவர்கள் மனம்மாறாததால், அவர்களுக்குச் சோதோமில் இருந்தவர்களுக்குக் கிடைத்த தண்டனையை விட மிகுதியாகக் கிடைக்கும் என்கின்றார்.

Comments are closed.