பல்சமய உரையாடல் திருப்பீட அவை – புதிய உறுப்பினர்கள்

நாம் கொண்டிருக்கும் மத நம்பிக்கை, மறைப்பணிக்கு உந்துசக்தியாக அமைவது மட்டுமே அதன் முக்கியப்பொருள் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 9, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

“மத நம்பிக்கை மறைப்பரப்புபணி பண்பைக் கொண்டிருக்கவேண்டும். இல்லையெனில் அது நம்பிக்கையல்ல. நம்மிடமிருந்து வெளியேறி, அடுத்தவரை நோக்கி நம்மை கொண்டு செல்வதே நம்பிக்கை. மற்றவர்களுக்கு ஒரு பரிசாக தரப்படுவது, நம்பிக்கை. திறந்த உள்ளத்தினராக, நம் நம்பிக்கையை வாழ்வதற்கு நாம் இறையருளை வேண்டுவோம்” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக பதிவு செய்துள்ளார்.

பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் புதிய உறுப்பினர்கள்

மேலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களையும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் பிரிவின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கில் செர்னி அவர்களையும், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் புதிய உறுப்பினர்களாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 8, இப்புதனன்று நியமித்தார்.

கத்தோலிக்கத் திருஅவை, ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களைக்குறித்து தெளிவான புரிதலையும், மதிப்பையும் வளர்ப்பதற்கு உதவியாக, உரையாடல்களை மேற்கொள்ளவும், ஏனைய மதங்களைக் குறித்த உண்மைகளைக் கற்றுக்கொள்ளவும் இத்திருப்பீட அவை செயலாற்றி வருகிறது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வெளியிட்ட Nostra aetate என்ற ஏட்டில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அவையின் தலைவராக, கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், 2019ம் ஆண்டு மே 25ம் தேதி நியமிக்கப்பட்டார்.

மேலும், இந்த அவையின் புதிய உறுப்பினர்களாக, பாங்கி பேராயர் கர்தினால் Dieudonné Nzapalainga, ஜகார்த்தா பேராயர், கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo, இலக்ஸம்பர்க் பேராயர் கர்தினால் Jean-Claude Höllerich ஆகியோரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிதாக நியமித்துள்ளார்.

இந்த அவையின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள பல ஆயர்களில், இந்தியாவின் வசாயி ஆயரான பேராயர் பீலிக்ஸ் அந்தனி மச்சாடோ அவர்களும், அலகாபாத் ஆயர், இரபி மஞ்சலி அவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Comments are closed.