ஆசிய கத்தோலிக்க ஊடகத்தினருக்கு வழிகாட்டியாக

சமூகத் தொடர்புத் துறையில் ஒரு புதிய பாதையை வகுத்தவராக, வழிகாட்டியாக விளங்கிய அருள்பணி Raymond Ambroise அவர்கள், தன் வாழ்வின் அனைத்து சக்திகளையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்தவர் என்று ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான Yvon Ambroise அவர்களின் இளைய சகோதரரும், ஆசிய ஆயர் பேரவை கூட்டமைப்பிலும், வெரித்தாஸ் வானொலியிலும் முக்கியப் பொறுப்புக்களை வகித்தவருமான அருள்பணி Raymond Ambroise அவர்கள், ஜூலை 7, கடந்த செவ்வாயன்று, தன் 75வது வயதில் இறையடி சேர்ந்தார்.

இவரது மரணத்தையொட்டி, தன் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ள கர்தினால் போ அவர்கள், அருள்பணி Ambroise அவர்கள், வறியோர் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உருவாக்கியிருந்த சமூகப்பணி மையத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு முடிய வெரித்தாஸ் வானொலியின் ஆலோசகராகப் பணியாற்றிய அருள்பணி Ambroise அவர்கள், 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு முடிய, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவை வழிநடத்தினார்.

2019ம் ஆண்டு, அருள்பணி Ambroise அவர்கள், தன் பணியிலிருந்து ஒய்வுபெற்றுச் செல்கையில், கிராமங்களில், மனநலம் குன்றியிருப்போர், மற்றும் மாற்றுத்திறன் கொண்டோர் ஆகியோருக்கு உதவுவதே தன் குறிக்கோள் என்று குறிப்பிட்டார்.

75 வயதான அருள்பணி Raymond Ambroise அவர்கள், செக்கந்தராபாத் நகரில், மாற்றுத்திறனுடையோருக்கென இயங்கிவரும் ஓர் இல்லத்தில், ஜூலை 7, இச்செவ்வாயன்று, மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார் என்று UCA செய்தி கூறுகிறது

Comments are closed.