ஜுன் 28 : நற்செய்தி வாசகம்

சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் அல்ல.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 37-42
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
“உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
மறையுரைச் சிந்தனை
பொதுக்காலத்தின் பதிமூன்றாம் ஞாயிறு
சீடத்துவ வாழ்வு
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனது எண்ணமெல்லாம் எந்தவித முயற்சியும் செய்யாமல் சந்தோசமாக வாழவேண்டும் என்பதுதான். வேறு விதமாகச் சொல்லவேண்டுமானால் நோகாமல் நொங்கு சாப்பிடவேண்டும் என்பதுதான் அவனுடைய நோக்கமாக இருந்தது. அதற்கான வழியை யார் சொல்லித் தருவார் என்று அங்குமிங்கும் அலைந்து திரிந்தான்.
ஒருநாள் அவனிடம், பக்கத்து ஊரில் ஒரு முனிவர் இருக்கிறார், அவர் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கான வழியைச் சொல்லித் தருகிறார் என்று யாரோ ஒருவர் சொல்ல, உடனே அவன் அந்த முனிவரைக் காண பக்கத்து ஊருக்கு விரைந்து சென்றான். முனிவரைக் கண்டதும் சாஸ்டாங்கமாக அவர் முன் தரையில் விழுந்து பணிந்தான். பின்னர் அவரிடத்தில், “சுவாமி, துன்பமே இல்லாத இன்பமான வாழ்வு ழ ஒரு வழியைச் சொல்லுங்கள்?” என்றான். அதற்கு அவர் சிறிதுநேரம் யோசித்துவிட்டு, “சரி, உனக்கு நான் துன்பமே இல்லாத இன்பமான வாழ்வு வாழ்வதற்கான வழியைச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக நீ போய் உடைபடாமல் மரமாகவோ, செடியாகவோ வளர்கின்ற ஒரு விதையைக் கொண்டுவா” என்றார். அதற்கு அவன், “ஓ! இவ்வளவுதானே, உடனே கொண்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவ்விடத்திலிருந்து நகர்ந்துசென்றான்.
நீண்டநாட்கள் தேடியும் அவனால், உடைபடாமல், சிதையாமல் மரமாகவோ, செடியாகவோ வளர்கின்ற ஒரு விதையை கொண்டுவர முடியவில்லை. இறுதியில் அவன் முனிவரிடம் சென்று தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டான். அப்போது அவர் அவனிடத்தில், “அன்பு மகனே!, துன்பமில்லாமல் இன்பமான வாழ்வுவாழ நீ நினைக்கின்றாய், ஆனால் உண்மை என்னவென்றால் துன்பமில்லாமல் எவராலும் இன்பமான வாழக்கை வாழ முடியாது, ஏனென்றால் இன்பத்தின் நுழைவாயிலே துன்பம்தான்” என்றார். தொடர்ந்து அவர் அவனிடத்தில் சொன்னார், “உன்னிடத்தில் நான் உடைபடாமல், சிதையாமல் மரமாகவோ, செடியாகவோ வளர்கின்ற ஒரு விதையைக் கொண்டுவரச் சொன்னேன். ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு விதையை உன்னால் கொண்டுவர இயலாது. விதை என்றால் அது தன்னையேச் சிதைக்கவேண்டும், மனிதர் என்றால் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் இன்பமாக வாழ்க்கை வாழமுடியும்” என்றார். இதைக் கேட்ட அந்த இளைஞன் அறிவொளி பெற்று தன்னுடைய இல்லம் சென்றான்.
துன்பமில்லாமல் இன்பமில்லை, சிலுவை இல்லாமல் சீடத்துவ வாழவில்லை, ஏன் சிம்மாசனமும்கூட இல்லை என்பதை இந்தக் கதையானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதிமூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தையானது சிலுவைகளை சுமப்பதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னைப் பின்பற்றி வருவோர் எப்படி இருக்கவேண்டும் என்பதை நினைவூட்டுகின்றார். முதலாவதாக இயேசுவின் சீடர்கள் யாவரும் சிலுவையைச் சுமப்பதற்கு தயாராக இருக்கவேண்டும். சிலுவை என்று சொல்கிறபோது அது நாம் நமது பணிவாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், இன்னும் பிறவாகும். இப்படி யார் ஒருவர் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள முன்வருகிறாரோ அவர்தான் தன்னுடைய சீடராக இருக்கமுடியும் என்பது இயேசுவின் தெளிவான போதனையாக இருக்கின்றது.
ஒருமுறை இயேசு தன்னைப் பின்பற்றி வர நினைத்தவரைப் பார்த்துக்கூறுவார், “நரிகளுக்குப் பதுங்குக்குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்குத் தலைசாய்க்கக் கூட இடமில்லை” என்று (லூக் 9: 58), இயேசு இப்படிச் சொன்னபிறகு அந்த மனிதர் இயேசுவைப் பின்தொடர்ந்தாரா? இல்லையா? என்று நமக்குத் தெரியாது. ஆனால் இயேசு தன்னைப் பின்பற்றி வருவோர் தன்னைப் போன்று துன்பங்களையும், சிலுவைகளையும் அனுபவிக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.
அடுத்ததாக இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதியாகச் சொல்வது: தன்னை (இறைவனை) மட்டுமே முழுமையாக அன்பு செய்யக்கூடியவராக இருக்கவேண்டும் என்பதாகும். இயேசு கூறுகின்றார், “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்புகொண்டுளோர் என்னுடையோர் எனக் கருதப்பட தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ, மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்” என்று. அப்படியானால் இயேசுவைப் பின்பற்றி நடக்கும் ஒருவர் இயேசுவுக்கும், அவர் காட்டும் விழுமியத்திற்கும் ஏற்ப வாழவேண்டும். இல்லையென்றால் அவர் இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.
ஆனால் இன்றைக்கு தம்மை இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இயேசுவை முழுமையாக அன்புசெய்யாமல், இந்த உலக செல்வங்களை, உறவுகளை அன்புசெய்து வாழ்வது நமக்கு வேதனை அளிப்பதாக இருக்கின்றது. “பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றை பற்றுக பற்று விடற்று” என்பான் அய்யன் திருவள்ளுவர். ஆம், ஒன்றுக்கும் உதவாத உலக செல்வங்களைத் துறந்துவிட்டு ஒப்பற்ற செல்வமாக இறைவனைப் பற்றிக்கொண்டு வாழவேண்டும் அதுதான் உண்மையான துறவு வாழ்வாக இருக்கும் என்பதுதான் திருவள்ளுவரின் கருத்து. ஆண்டவர் இயேசுவும் நமக்கு அதைத்தான் நமக்கு நினைவூட்டுகிறார்.
“ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்று சொல்கிற மனிதரிடம் இயேசு கூறுவார், “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படச் தகுதியுள்ளவர் அல்ல” என்று. ஆம், இயேசுவின் சீடர் இவ்வுலகிற்கு அல்ல, இறைவனுக்கே முன்னுரிமை தரவேண்டும்.
இயேசுவின் சீடராவதற்கான மூன்றாவது தகுதி: இயேசுவுக்காக உயிரைத் தர முன்வருதாகவும். இன்றைய நற்செய்தியில் இயேசு, “என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக்கொள்வர்” என்று கூறுவார். ஆம், இயேசு சொல்வதுபோல உயிரைத் தருவதைவிடவும் இயேசுவின்பால் இருக்கும் நமது அன்பை வெளிப்படுத்த வேறு உயர்ந்த வழில்லை. எத்தனையோ புனிதர்கள், மறைசாட்சிகள் இயேசுவுக்காக தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். அதன்வழியாக தாங்கள் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்பதை இந்த உலகிற்கு வெளிப்படுத்தினார்கள். ஆகவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவுக்காக நம்முடைய உயிரையும் கூட இழந்து, அதன்மூலம் நாம் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்று இந்த உலகிற்கு நிருபிக்கவேண்டும்.
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுவார், “பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு இன்னும் நீங்கள் எதிர்த்து நிற்கவில்லை” என்று (எபி 12:4) ஆகவே, நாம் இயேசுவுக்காக எதையும் இழக்கத் தயாராய் இருப்போம். அவரின் உண்மைச் சீடராவோம்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக, இயேசுவின் சீடர், இறையடியார்களை கவனித்துக்கொள்பவராகவும் இருக்கவேண்டும். அரசர்கள் இரண்டாம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் எலிசா இறைவாக்கினர் சூனேமுக்குச் சென்றபோது ஒரு பெண்மணியின் வீடுவழியாகக் கடந்து செல்கிறார். அப்போது அந்த பெண்மணி இறைவாக்கினர் எலிசாவை அழைத்து தன்னுடைய வீட்டில் உணவருந்தச் சொல்கிறார். மேலும் எப்போதெல்லாம் அவர் அந்தப் பெண்மணியின் வீட்டைக் கடந்து செல்கிறாரோ அப்போதெல்லாம் அவர் அவருக்கு உணவு கொடுக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், அவருடைய வீட்டின் மேல்மாடியில் தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்கிறார். இதைக் கண்டு மகிழ்ந்த இறைவாக்கினர் எலிசா, அவருக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தருகின்றார்.

Comments are closed.