பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (ஜூன் 28)

தன்னையே தருவதில் முழுமை பெறும் சீடத்துவம்
நிகழ்வு
ஒரு பங்குக் கோயிலில் நடைபெறவிருந்த அசன விருந்திற்கு, அந்தப் பங்குக் கோயிலில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள், அவ்வூரில் மிக அருகருகே இருந்த கோழிக்குப் பண்ணைக்கும் ஆட்டுப் பட்டிக்கும் சென்று, அதன் உரிமையாளரிடம், “பங்குக்கோயிலில் நடைபெறுகின்ற இருக்கின்ற அசன விருந்தில் நாங்கள் மட்டன் பிரியாணி வழங்கலாம் என்று இருக்கின்றோம்; கூடவே ஒரு முட்டையும் வழங்கலாம் என்று இருக்கின்றோம். விருந்திற்கு எப்படியும் ஆயிரம் பேராவது வருவார்கள். அதனால் நூற்று ஐம்பது கிலோ ஆட்டுக்கறியும், ஆயிரம் முட்டைகளும் நாங்கள் சொல்கின்ற நாளில் நீங்கள் எங்களுக்குத் தந்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
அவர்கள் பேசியதை அருகருகே இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு கோழியும் ஓர் ஆடும் இவ்வாறு பேசிக்கொண்டன. “பங்குக் கோயிலில் நடைபெறும் அசன விருந்துக்கு கோழிகளாகிய நாங்கள் எங்களுடைய பங்கிற்கு ஆயிரம் முட்டைகள் தருகின்றோம். ஆடுகளாகிய நீங்கள் உங்களுடைய பங்கிற்கு வெறும் நூற்று ஐம்பது கிலோ கறிதான் தருகின்றீர்கள் போல!” என்றது கோழி. அதற்கு ஆடு கோழியிடம், “நீங்கள் உங்களுடைய பங்கிற்கு ஆயிரம் முட்டைகள் வேண்டுமானால் தரலாம். ஆனால், அந்த ஆயிரம் முட்டைகளும் உங்களிடம் இருக்கின்ற ஒரு பகுதிதான். நாங்கள் அப்படிக் கிடையாது. நாங்கள் நூற்று ஐம்பது கிலோ கறி தருவதாக இருந்தாலும், எங்களையே தருகின்றோம். இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு” என்றது. இப்படிச் சொல்லிவிட்டு ஆடு கோழியிடம் இப்படிச் சொல்லி முடித்தது: “சீடத்துவ வாழ்வு கூட தன்னிடம் இருக்கின்ற ஏதோவொன்றைத் தருவதல்ல, தன்னையே தருவது.”
ஆம், உண்மையான சீடத்துவம் என்பது தன்னையே தருவது. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எது உண்மையான சீடத்துவம் என்ற கேள்விக்கு விடையாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன் இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருதல்
நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம், என்னைவிடத் தன் தாய், தந்தை, மகன், மகள் ஆகியோரிடம் மிகுதியாக அன்பு கொண்டிருப்பவர் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்கின்றார். இயேசு இவ்வாறு சொல்வதால், இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர், தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களை வெறுக்கவேண்டும் என்பதல்ல. மாறாக, அவர்களைவிட இயேசுவை அன்பு செய்யவேண்டும், அவருக்கு முதன்மையான இடம் தரவேண்டும். இத்தகைய வாழ்விற்கு இயேசுவே மிகச்சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆம், இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபிறகு, தன்னுடைய இரத்த உறவுகளை விட இறைவனுக்கும் இறையாட்சிக்குமே முதன்மையான இடம் கொடுத்தார். இதனை, இயேசு தன்னைத் தேடிவந்த தாயிடமும் சகோதரர் சகோதரிகளிடம் பேசக்கூடிய வார்த்தைகளைக் கொண்டு (மத் 12: 48-50) மிக எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஆகையால், இயேசுவின் சீடர் தன்னுடைய இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவதில் கருத்தாய் இருக்கவேண்டும்.
தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம்தரவேண்டும்
தன் இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவ வாழ்வின் முதல்நிலை என்றால், தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவவாழ்வின் இரண்டாம் நிலையாகும். இதுகுறித்து இயேசு தொடர்ந்து பேசுகின்றபொழுது, “…தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்” என்கின்றார். ஆம். இயேசுவின் சீடர் அவருக்காகத் தன் உயிரையும் இழக்கத் துணிகின்றபொழுது, அதை காத்துக் கொள்பவராக இருக்கின்றார். இயேசுவின் பொருட்டு எத்தனையோ புனிதர்கள், மறைச்சாட்சிகள் தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். அவர்கள் அன்று தங்களுடைய உயிரை இழந்தாலும், இன்று அவர்கள் இறைவனின் திருமுன் மகிழ்ந்திருக்கின்றார்கள். நாமும்கூட நம்முடைய உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழ்ந்தோமெனில் அதை மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
போரில் குண்டடிபட்டுக் கைகளையும் கால்களையும் இழந்திருந்த படைவீரர்கள் நடுவில், மருத்துவப் பணியும் ஆன்மிகப் பணியும் செய்துவந்த அருள்பணியாளர் ஒருவர், போரில் தன் இரு கைகளையும் இழந்ததுகூடத் தெரியமால் படுத்துக்கிடந்த படைவீரர் ஒருவரிடம் மிகவும் அமைந்த குரல், “போரில் உங்களுடைய இரண்டு கைகளையும் இழந்துவிட்டீர்கள்” என்றார். இதைக்கேட்டு சிறிதும் பதற்றமடையாத அந்தப் படைவீரர் அருள்பணியாளரிடம், “போரில் நான் கைகளை இழந்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். நாட்டிற்காக நான் என்னுடைய இரண்டு கைகளை தந்திருக்கின்றேன் என்று சொல்லுங்கள்” என்றார். ஆம், கிறிஸ்துவுக்காக நம் உயிரை இழக்கின்றபொழுது அதை மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பதே உண்மை.
சிலுவைகளைச் சுமக்கத் துணிதல்
தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர், தன்னுடைய இரத்த உறவைவிட, தன்னுடைய உயிரைவிட தனக்கு முதன்மையான இடம் தரவேண்டும் என்று சொல்லும் இயேசு, அவர் தன் பொருட்டு சிலுவையைச் சுமக்கத் தயாராக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் காலத்தில் சிலுவை என்பது இழிவானதாகவும் அவமானத்தின் சின்னமாகவும் கருதப்பட்டது (1 கொரி 1: 23). ஆகவே, தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர் சிலுவையைச் சுமக்கவேண்டும் என்று இயேசு சொல்கின்றபொழுது, அவர் அவமானங்களையும் துன்பங்களையும் விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு தன் இரத்த உறவைட, தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து, சிலுவையைச் சுமக்கத் தயாராக இருக்கும் தன் சீடர்களுக்கு உதவிகள் செய்யகூடியவர்களுக்கு இறைவன் தக்க கைம்மாறு அளிப்பார் என்று இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சீடர்கள் அவருடைய பதிலாளிகளாக இருக்கின்றார்கள். எனவே, அவருடைய சீடர்களுக்கு குளிர்ந்த நீரோ, உணவோ, தேவைப்படுகின்ற உதவிகளோ செய்யக்கூடியவர்கள் இயேசுவுக்கே செய்பவர்களாக மாறுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் தக்க கைம்மாறு தருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலிசாவிற்கு உதவிகள் செய்துவந்த சூனேமைச் சார்ந்த பெண்மணிக்கு இறைவன் குழந்தைப் பேற்றினைத் தருவதாக வாசிக்கின்றோம்.
ஆதலால், இயேசுவைப் பின்பற்றுகின்றவர்கள் தம் உறவுகளை விட, உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையாக இடம் தந்து பணி செய்யக்கூடியவர்களாக இருக்கட்டும். இப்படிப்பட்ட பணிகளைச் செய்கின்ற இயேசுவின் சீடர்களுக்கு இறைமக்கள் தக்க உதவிகளைச் செய்பவர்களாக இருக்கட்டும். இப்படி வாழ்ந்தால், எல்லாரும் இறைவனுடைய அருளைப் பெறுவது உறுதி.
சிந்தனை
‘இயேசுவின் சீடராக இருப்பதால் கிடைக்கின்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்ற ஒருவரால் மட்டுமே, மற்றவர்களை இயேசுவின் சீடராக முடியும்’ என்பார் Follow me: A Call to Die. A call to live என்ற நூலின் ஆசிரியரான டேவிட் பிளாட். ஆகையால், நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக இருந்து, மற்றவர்களை இயேசுவின் சீடர்களாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.