ஞான உணர்த்துதல்

அர்ச்.வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் அருட்தந்தை ஜோஸப் பெஸ்கி எழுதிய புத்தக பதிவு
கொஞ்சம் நீண்ட பதிவு ஆனால் மிகவும் முக்கியமான பதிவு தயவு செய்து அனைவரும் தியானித்து படியுங்கள்
தேவ சந்நிதானத்தில் ஆத்துமம் தீர்வையிடப்படுகிற விதம்.
பிறப்புக்குப் பின் சாவு, சாவுக்குப் பின் தீர்வை என்று சர்வேசுரனாலே நிரூபிக்கப்பட்டிருக்கின்றதே. ஆகவே, மனுஷனுடைய ஆத்துமம் உடலை விட்டுப் பிரிந்த அந்த கணத்திலேயே தீர்வை கேட்க நிறுத்தப்படும். சேசுநாதர் நீதி செலுத்த சிங்காசனத்திலே எழுந்தருளியிருக்க, இரண்டு பக்கத்திலேயும் பாவ புண்ணிய அறிக்கைகளைச் சொல்ல, சம்மனசுக்களும், பசாசுக்களும் வந்து நிற்க, அப்போது பாவியுடைய ஆத்துமம் எப்படியிருக்குமென்றால், கூர்மையுள்ள கத்திகளை நிறுத்தியிருக்கிற சக்கரத்தில் நடுவில், ஒரு முயற்குட்டி எப்படி பயப்பட்டிருக்குமோ அப்படி பாவியின் ஆத்துமம் நடுங்கி நிற்கும்.
பாவத்துக்கு உதவி செய்த பசாசு அந்த வேளையிலே அவனுக்கு எதிரியாய் வந்து ஆண்டவரைப் பார்த்துச் சொல்லும் : தேவரீர் எங்களை ஆகாதென்று தள்ளி, எங்களுக்குப் பதிலாக மனுஷரைப் படைத்து, எங்களுடைய ஆசனங்களையும், முடிகளையும் அவர்களுக்குக் கொடுக்கத் திருவுளமானீர். எங்களை இருட்டிலே தள்ளி, அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்தீர். எங்களுக்கு உணவு பானமும், உடுப்புமாக நெருப்பைக் கொடுத்து, அவர்களுக்கு அறுசுவை பதார்த்தங்களையும், தெளிந்த ஊற்றுத் தண்ணீரையும், நல்ல ஆடை, ஆபரணங்களையும் கட்டளையிட்டீர்.
எங்களை அவலட்சண மிருகக் கோலமாக்கி, அவர்களை இலட்சண முள்ளவர்களாகச் செய்தீர். அவர்களைச் செல்லப் பிள்ளைகளாக வளர்த்து, எங்களை நீசப் பசாசுக்களாகப் புறக்கணித்துப் போட்டீர். இத்தனை நன்மைகளெல்லாம் அவர்களுக்குச் செய்ததற்கு, அவர்கள் என்ன உமக்குப் பிரதி உபசாரம் செய்தார்கள்? சிலர் உம்மைச் சுவாமி என்று எண்ணாமல், எங்களையும், உம்மையும் சமமாகத்தானே கும்பிட்டார்கள்? உம்முடைய சத்திய வேதத்தை விட்டு எங்கள் பொய் மார்க்கங்களைத் தலைமேற் கொண்டார்கள். உம்முடைய தேவாமிர்தங்களையும், வெகுமானங்களையும் புறக்கணித்து, எங்கள் எச்சில்களுக்காக நாய்களைப் போல எங்கள் பின்னாலே சுற்றிக் கொண்டு திரிந்தார்கள்.
இப்படிப்பட்டவர்களுடைய ஆத்துமத்தை எங்கள் கையினின்று மீட்டுக் கொண்டீர். நாங்கள் அவர்களுக்கு ஒரு நன்மையும் செய்யாதிருக்க, வலிய வந்து எங்களுக்கு அடிமை வேலை செய்தார்கள். இவர்களைத் தீர்வையிட்டு எங்கள் கையிலே ஒப்புவியும் என்று இரும்பு அக்கினிச் சங்கிலிகளைக் கையிலே பிடித்துக் கொண்டு தயாராய் வந்து நிற்கும்.
பாவியானவன் இதைக் கண்டு பயப்பட்டு, யார் தனக்கு உதவுவாரென்று தன்னுடைய காவலான சம்மனசைப் பார்த்தால், அவர் உக்கிரமமான முகத்தோடு அந்தப் பாவியைப் பார்த்து, நீ பிறந்த நாள் துவக்கி உன் அண்டையிலே காவலாக இருந்து, பாவ வழியை விலக்கி மோட்ச வழியைக் காட்டி, பற்பல விக்கினங்களைத் தள்ளி, மீட்படைய நல்ல புத்தி உணர்வுகளைத் தோற்றுவித்த போது, நீ அந்த நல்ல நினைவுகளைத் தட்டிப் பசாசுகளைப் போல் நடந்தாய். இப்போது அவர்களிடமே கையளிக்கப் படுவாய் என்பார்.
தன் பெயர் கொண்ட மோட்சவாசியும், பிதாப்பிதாக்களும் மற்ற அர்ச்சிஷ்டவர்களும் உதவுவார்களோ என்று பார்த்தால் அவர்களுடைய தர்ம நடக்கையைப் பின் செல்லாதபடியினால், தங்களாலே ஒரு உதவியும் இல்லையென்று அருவருத்துத் தள்ளுவார்கள்.
பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற தேவமாதா உதவ மாட்டார்களோ என்று பார்த்தால், அந்தத் தயையுள்ள ஆண்டவள் இந்தப் பூலோகத்திலே செய்த சகாயங்களுக்கு வஞ்சகம் செய்ததையும், அவர்களுடைய திருக்குமாரன் வார்த்தையைப் புறக்கணித்ததையும் பற்றி, அவர்கள் முகம் கோபக் குறிகளுடன் விளங்குவதைக் கண்டு, பாவியானவன் நடுநடுங்கி நிற்பான். அவனுக்கு மேலான உதவிகள் ளெல்லாம் இல்லாமல் போகிறதும் தவிர, இவ்வுலகத்திலே அவனுக்கு உதவியாயிருந்த பொருட்களும் விரோதமாகி, தங்களுக்கு அவன் செய்த அநியாயங்களின் பேரில் முறைப்பாடிடும்.
சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் தங்கள் வெளிச்சத்தில் நின்று பாவம் செய்ததினாலே, அவன் கண் இருண்டு, இருளாய்ப் போக வேண்டும் என்று கேட்கும். பூமியானது, அவன் தன் மீதிருந்து பாவம் செய்ததினாலே வாய்திறந்து அவனை விழுங்க வேண்டும் என்றிருக்கும். பஞ்ச பூதங்கள் தங்களைக் கொண்டு உண்டு உடுத்திச் சுகித்து, மோக இச்சைகளிலே உழன்று திரிந்ததினாலே, அதற்கேற்ற ஆக்கினை இட வேண்டுமென்று சொல்லும். தான் குடியிருந்த வீடு, தன் பெட்டி பேழை உடமை உற்பத்தி இவையெல்லாம் அவன் பாவத்துக்கு உதவியாய் வைத்திருந்தபடியினாலே அவனுக்கு விரோதமாகச் சாட்சிகளாய் நிற்கும்.
தங்களிலே நகமும் சதையுமாய் அந்நியோந்நிய நேசமுமாயிருந்த கணவன் மனைவி, ஒருவர் ஒருவரை விரோதித்துச் சாட்சி சொல்லுவார்கள். தகப்பன் பேரிலே பிள்ளையும், பிள்ளை பேரிலே தகப்பனும் ஒருவர் பேரிலே ஒருவர் முறைப் பாடிட்டுச் சாட்சி சொல்கிறவர்களும், ஆக்கினை கேட்கிறவர்களும் அல்லாமல் பாவிகளுக்கு ஒரு வராகிலும் சகாயம் ஆறுதல் சொல்லுகிறவர்கள் இல்லை.
இப்படிப் பட்ட நடுத்தீர்வையிலே உட்படப் போகிற பாவி, எப்படிப் பயமில்லாமல் திரிகிறாய்? எப்படிப்பட்ட மகாத்துமாக்கள் ஆனாலும், இந்த நடுத்தீர்வையினுடைய கடின கொடுமைகளை நினைக்கும்போது நடுநடுங்கி நிற்பார்கள்.
மகாத்துமாவாகிய அர்ச். எரோணிமுஸ் என்கிறவர் நடுத்தீர்வையைத் தியானிக்கிறபோது, நடுத்தீர்வைக்கு வாருங்கள் என்று எக்காளச் சத்தம் போல் கேட்கிறதாக எண்ணிப் பயப்பட்டுப் பெரிய கல்லை எடுத்து இரத்தம் வடியும் வரைக்கும் தன் மார்பிலே அடித்துக் கொண்டிருப்பார். பாவீ! நீ அந்த நடுத்தீர்வைக்குப் போகப் பிரயாணப்பட்டிருக்கையில் ஏன் சற்றும் பயமில்லாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறாய்? உன்னால் நிந்திக்கப்பட்டவர் தானே உன்னை நடுத்தீர்ப்பார் என்று அறியாயோ? உன்னுடைய குற்றத்தை அவருக்கு ஒன்றும் ஒளிக்கக் கூடாதென்றும், உன் இருதயத்தில் உள்ளதெல்லாம் அவருக்கு வெட்ட வெளிச்சமாயிருக்கும் என்றும் அறியாயோ?
நீ நினைத்த நினைவுகளும், பேசின வார்த்தைகளும், நடந்த நடக்கைகளும் ஒன்றும் விடாமல் எண்ணி எழுதி வைத்திருக்கிறார். ஒரு வீண் நினைவு, வீண் வார்த்தை, வீணாய்ப் போக்கின நேரம் ஒன்றும் விடாமல் கணக்குக் கேட்பாரே. எப்படி பயப்படாமல் இருக்கிறாய்? எண்ணிக்கைக்குள் அடங்காத பாவமெல்லாம் செய்திருக்கிறாயே. என்ன பதில் சொல்லப் போகிறாய்?
பூலோகத்திலே பதில் சொல்லத் திறமையுள்ளவனாயிருந்தாலும், சர்வேசுரனுடைய சமூகத்திலே திறமை காட்டக் கூடுமோ? பூலோகத்திலே எத்தனை சுமுத்திரையாய் நடந்தவன் எல்லாம் சர்வேசுரன் சமூகத்திலே குற்றவாளியாய் நடுநடுங்கி நிற்கிறதை அறியாயோ?
ஆமென்.
அனைத்து பாரம்பரிய புத்தகங்கள், ஜெபங்கள் படிக்க, தியானிக்க நமது வெப்சைட்டை பயன் படுத்துங்கள்

Comments are closed.