ஜுன் 20 : நற்செய்தி வாசகம்

இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மறையுரைச் சிந்தனை (ஜூன் 20) – மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழா
இளைஞன் ஒருவன் கொடிய குற்றம்செய்ததற்காக, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனை விசாரித்துப் பார்த்த நீதிபதி இறுதியில் அவனுக்கு மரணத்தண்டனை விதித்தார். அவன், தான் இந்த நிலைக்குக் காரணமாக இருந்த சமூகத்தை, உறவுகளை, நண்பர்களை, ஏன் தன்னுடைய தாயைக்கூட முற்றிலுமாக வெறுத்தான்.
தன்னுடைய மகனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அவனுடைய தாய் அவனைப் பார்ப்பதற்காக சிறைக்கூடம் நோக்கி ஓடோடி வந்தாள். அப்போது சிறைஅதிகாரி அவளைத் தடுத்துநிறுத்தி, “அம்மா! உம்முடைய மகன் இப்போது யாரையும், (உங்களையும் சேர்த்து) பார்க்க விரும்பவில்லை” என்றார். அதற்கு அந்தத் தாய் அவரிடம், “அது ஏன்?” என்று கேட்டதற்கு அவர், “உங்கள் அனைவரையும் அவன் முற்றிலுமாக வெறுக்கிறான். அவனுக்கு இப்போது யாரையுமே பிடிக்கவில்லை” என்றார்.
அதற்கு அந்தத் தாய், “அவன் என்னை வெறுத்தால் என்ன!, நான் அவனை முழுவதும் அன்பு செய்கிறேன்” என்றாள். மரணதண்டனைக் கைதியான அந்த இளைஞன்மீது தாயானவள் எந்தளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதை அந்த சிறைஅதிகாரி அப்போது உணர்ந்துகொண்டார்.
“தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு, இந்த உலகில் வேறு எதுவுமில்லை” என்ற குன்றக்குடி அடிகளாரின் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கிறது.
இன்று அன்னையாம் திருஅவை மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் இதயம் மாசற்றது, அது எப்போதும் அன்பினால் நிரம்பி வழிந்ததோடு மட்டுமல்லாமல், இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்றுவதிலே கண்ணும் கருத்துமாய் இருந்தது. எனவே, இப்பெருவிழாவில் மரியாளின் மாசற்ற இதயம் நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து மரியாளைப் போன்று, இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்ற நாம் முயல்வோம்.
மரியாளின் மாசற்ற இதயத்திற்கான பக்திமுயற்சிகள் கி.பி.பதினேழாம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டதற்கான வரலாறு இருக்கிறது. ஜான் யூட்ஸ் என்ற குருவானவர்தான் மரியாளின் மாசற்ற இதயத்திற்காக முதல்முறை திருப்பலி மற்றும் பூசைக்கருத்துகள் ஒப்புக்கொடுத்தவர். அவர்தான் இப்பக்தி முயற்சி உலகெங்கும் பரவ அடித்தளமிட்டவர். அதன்பின்னர் அன்னை மரியாள் பாத்திமா நகரில் லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ் என்ற மூன்று சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்தபோது இந்த பக்திமுயற்சி இன்னும் பரவத் தொடங்கியது.
1917 ஆம் ஆண்டு, ஜூன் 13 ஆம் தேதி புதன்கிழமை காட்சியில், மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை லூசியா கண்டாள். ஜெசிந்தா, பிரான்ஸிஸ் மற்றும் மக்களோடு ஜெபமாலை செபித்தபின் லூசியாவிடம் அன்னை மரியா, “நீ இன்னும் கொஞ்சகாலம் இங்கு இருக்கவேண்டும். என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி உன்னை பயன்படுத்த இயேசு விரும்புகிறார்; உலகில் என் மாசற்ற இதய பக்தியை ஏற்படுத்தி, இப்பக்தியைக் கைக்கொள்ளும் அனைவருக்கும் நான் மீட்பை வாக்களிக்கிறேன்; என் மாசற்ற இதயம் உன் அடைக்கலமாகவும், கடவுளிடம் உன்னை அழைத்து செல்லும் வழியாகவும் இருக்கும்’ என்று கூறினார்.
அப்போது பேரொளியின் பிரதிபலிப்பு அவர்கள் மேல் பாய்ந்தது. மாதாவின் வலது உள்ளங்கையில் முட்களால் குத்தித் துளைக்கப்படுவதாகத் தோன்றிய ஓர் இதயம் இருந்தது. மனுக்குலத்தின பாவங்களால் நிந்திக்கப்பட்டு, நம்மிடம் பரிகாரம் கேட்கிற மரியன்னையின் தூய இதயம் தான் அது.
அன்னை மீண்டும் அவர்களிடம் “ஏதாவது சிறுசிறு ஒறுத்தல்கள் செய்யுபோது, ‘ஓ! இயேசுவே’ உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்புவதற்காகவும், மரியன்னையின் தூய இதயத்திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், இதைச் செய்கிறேன்” என்று சொல்லும்படிக் கூறினார்; ரஷ்யாவை என்மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அருட்திரு ஸ்தெபனோ கோபியிடம் அன்னை மரியாள் பேசும்போது, “தன் மாசற்ற இதயத்தின் ஒளி, திருத்தந்தை, குருக்களை ஆசீர்வதிப்பதையும், அடைக்கலமாகவும், பாதுகாப்பாகவும் தன் இதயம் எப்போதும் இருப்பதாகவும், தங்களையே அர்ப்பணிக்கவும்” கூறினார்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் அறிந்த திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் 1944 ஆம் மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். தொடக்கத்தில் இவ்விழா ஆகஸ்ட் 22 ஆம் தேதிதான் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு இவ்விழா இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவிற்கு அடுத்த நாள் கொண்டாடப் பணிக்கப்பட்டது.
மரியாளின் மாசற்ற இதயத்தைப் பற்றி திருவிவிலியம் சொல்லாமலில்லை. அதற்குத் தெளிவான விவிலியச் சான்றுகள் இருக்கின்றன. லூக்கா நற்செய்தி 2 ஆம் அதிகாரம் 19& 51(இன்றைய நற்செய்தி வாசகம்) ஆகிய வாசங்களில், “மரியாள் நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்தி, சிந்தித்துக் கொண்டிருந்தாள் என்று படிக்கின்றோம். அதேபோன்று லூக்கா நற்செய்தி 2 ஆம் 35 ஆம் வசனத்தில் எருசலேம் திருக்கோவிலில் சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் தாங்கி, “இக்குழந்தை இஸ்ரயேல் மக்களின் பலரது வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்…. உம்முடைய உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப்பாயும்” என்று மரியாளைப் பார்த்துக் குறிப்பிடுவார். இதன்மூலம் மரியாள் ஆண்டவர் இயேசுவைப் பற்றியே தன்னுடைய உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்று உறுதி செய்துகொள்ளலாம்.
மரியாள் எப்போதும் மீட்பின் திட்டத்தை தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்துப் பார்த்தவள். அதோடு மட்டுமல்லாமல், அந்த மீட்புத் திட்டம் நிறைவேற தன்னுடைய திருமகன் இயேசுவோடு துன்பங்களையும், வேதனைகளையும், அவமானங்களையும் சந்தித்தவள்; உள்ளத்தில் தூய அன்பை வைத்துக்கொண்டு, துன்புற்ற மானிட சமுதாயத்திற்கு இரங்கியவள்.
ஆகவே, இத்தகைய ஒரு தூய, இரக்கமிக்க அன்னையைக் கொடையாகப் பெற்றிருக்கும் நாம், அந்த அன்னை வாழ்ந்து காட்டிய நெறியின்படி வாழ்வதுதான், நான் அன்னைக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த கைமாறாக இருக்கும்.
ஒரு சாதாரண அன்னையே தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்கவேண்டும், வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை அடையவேண்டும் என்று கனவுகண்டு, அதற்காக தன்னுடைய உடல், பொருள் அத்தனையும் தியாகமாகத் தருவாள். (தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் வளர்ச்சியில் அவர்களுடைய தாயின் பங்கு எந்தளவுக்கு அளவிட முடியாததாக இருந்தது என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டும்). அப்படியிருக்கும் போது மரியாள் நமக்காக, நம்முடைய மீட்புக்காக எத்தகைய தியாகங்களை மேற்கொண்டிருப்பார் என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
எனவே, நாம் அன்னையின் அன்புப் பிள்ளைகளாக மாறவேண்டும் என்றால், மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவை அர்த்தமுள்ளதாக மாற்றவேண்டும் என்றால் அவரைப் போன்று இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்ற முன்வரவேண்டும். அதுதான் நாம் அன்னைச் செலுத்தும் காணிக்கையாக இருக்கும். இவ்வாறு நாம் இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்றும்போது இன்றைய முதல் வாசகத்தில் கேட்பது போன்று ‘நாம் மக்களினங்கள் நடுவில் புகழடைவோம்; ஆண்டவரின் ஆசி பெற்ற மக்களாக விளங்கிடுவோம்’.

Comments are closed.