கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும் (ஜூன் 14)

கடவுள் கொடுத்த மிகப்பெரிய கொடை, நற்கருணை
நிகழ்வு
இங்கிலாந்தை ஆண்டுவந்த எட்டாம் ஹென்றி என்ற மன்னனிடம் பொதுச் செயலராகப் பணியாற்றி வந்தவர் தாமஸ் மூர் (1478-1535). பிற்காலத்தில் இவர் மன்னனுடைய தவற்றைச் சுட்டிக் காட்டியதற்காகக் கொல்லப்பட்டார்.
ஒருநாள் இவர் கோயிலில், நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு வேண்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த படைவீரர் ஒருவர் இவரிடம், “மன்னர் உங்களை ஒரு முக்கியமான செயலைக் குறித்து விவாதிக்க, விரைவாக வருமாறு அழைக்கின்றார், வாருங்கள்” என்றார். அதற்குத் தாமஸ் மூர் அவரிடம், “இப்பொழுது நான் மன்னருக்கெல்லாம் மன்னராம், இயேசுவோடு ஒரு முக்கியமான செயலைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றேன். அவரோடு அதைப் பேசி முடித்துவிட்டு மன்னனைப் பார்க்க வருகின்றேன் என்று சொல்” என்றார். இதைக் கேட்டு அந்தப் படைவீரர் அதிர்ந்துபோனார்.
ஆம், புனித தாமஸ் மூர் நற்கருணை என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய கொடை என்பதை உணர்ந்திருந்தார். அதனால் அவர் மன்னன் எட்டாம் ஹென்றி அழைத்தபொழுதும் அவருக்கு முக்கியத்துவம் தராமல், நற்கருணை ஆண்டவருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரோடு தன்னுடைய பொன்னான நேரத்தைச் செலவிட்டார்.
இன்று நாம், கிறிஸ்துவின் தூய்மைமிகு திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். நாம் கொண்டாடுகின்ற இப்பெருவிழா இன்றைய இறைவார்த்தையின் வழியாக நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நற்கருணை: மானிடருக்குக் கடவுள் கொடுத்த மிகப்பெரிய கொடை
அருள்பணியாளர்களின் பாதுகாவலான புனித ஜான் மரிய வியான்னி நற்கருணையைக் குறித்துப் பேசும்பொழுது, “கடவுள், மானிடருக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை நற்கருணை. ஏனெனில், நற்கருணையை விடப் பெரிய கொடை ஒன்று இருந்திருந்தால், அதை அவர் மானிடருக்குக் கொடுத்திருப்பார்” என்பார். எவ்வளவு ஆழமான, அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை.
கடவுள் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய கொடையாகிய நற்கருணை விருந்தை இன்று நாம் கொண்டாடுவது வேண்டுமானால் எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், பல நாடுகளில் நற்கருணை விருந்தைக் கொண்டாடுவதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் இருந்தன. சீனா போன்று கம்யூனிச நாடுகளில் நற்கருணை விருந்தை, ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் கிறிஸ்தவர்கள் கொண்டினார்கள். அயர்லாந்தில் ‘Mass Rock’ என்றோர் இடம், நகருக்கு வெளியே ஓராமாக இருக்கின்றது. இந்த இடத்தில்தான் அயர்லாந்தைச் சார்ந்தவர்கள் அன்றைய காலக்கட்டத்தில் ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் நற்கருணை விருந்தைக் கொண்டாடி இருக்கின்றார்கள். இப்படிப் பல்வேறு நாடுகள், நற்கருணை விருந்தானது வெளிப்படையாக இல்லாமல், மறைவாகத்தான் நடைபெற்றது.
இன்று நாம் நற்கருணை விருந்தை வெளிப்படையாகக் கொண்டாடுகின்றோம் எனில், அதற்கு நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நற்கருணை என்றாலே கிரேக்கத்தில் நன்றி என்றுதானே பொருள். ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த நற்கருணையை வெளிப்படையாகக் கொண்டாடுவதற்கு அருள்பாலித்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொள்ளவேண்டும்
அடுத்ததாக, இன்று நாம் கொண்டாடுகின்ற, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் இர இரத்தப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி, நாம் உட்கொள்கின்ற நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொள்ளவேண்டும் என்பதாகும்.
அன்றைய காலத்தில், யூதர்களிடம் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் குறிப்பிட்டு விட்டு, “மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்” என்று சொன்னபொழுது, யூதர்கள் பலர் அதை மேம்போக்காகப் புரிந்துகொண்டு, நம்ப மறுத்தார்கள். இயேசு சொன்னதை யூதர்கள் நம்ப மறுத்ததற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. அது என்னவெனில், ‘எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்… எல்லா உடலின் உயிரும் குருதியே; அதை உண்பவர் அழிவார்’ (லேவி 17: 10-14; இச 12: 16; திப 15: 29) என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் இயேசு சொன்னதை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் மறுத்தார்கள்.
இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்மிக உணவு, பானம் என்று சொல்லி, அவற்றை உண்போர் என்றுமே வாழ்வார் என்று சொன்னார். ஆகையால், நாம் இயேசுவின் திருவுடலையும் திருஇரத்ததையும் நமக்கு வாழ்வளிக்கும் ஆன்மிக உணவாகவும் பானமாகவும் நம்பி உண்டோமெனில் நிலைவாழ்வை அடைவோம் என்பது உறுதி..
நற்கருணையை குறித்துக் காட்டும் விழுமியங்களை வாழ்வாக்கவேண்டும்
இன்று நாம் கொண்டாடுகின்ற கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திருஇரத்தப் பெருவிழாவனது உணர்த்துகின்ற மூன்றாவது செய்தி, நாம் நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொள்வதோடு மட்டுமல்லாமல், அது குறித்துக் காட்டுகின்ற விழுமியங்களுக்கு ஏற்ப வாழவேண்டும் என்பதாகும்.
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருவிருந்துக் கிண்ணத்தில் பருகுதல், கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா, அப்பத்தைப் பிட்டு உண்ணுதல் கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா என்று சொல்லிவிட்டு, அவர் ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாயிருக்கின்றோம் என்பார். புனித பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை வேறுவிதமாகச் சொல்லவேண்டும் என்றால், நாம் பலராக இருந்தாலும், கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்வதால் ஒரே உடலாயிருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்; ஆனால், நடைமுறை வாழ்வில் நாம் ஒரே உடலாய் இல்லை என்பதே வேதனை கலந்த உண்மையாக இருக்கின்றது.
‘கிறிஸ்தவர்கள்’ என்று ஒரே உடலாக இருக்கவேண்டிய நாம், இனத்தின் பெயரிலும் குலத்தின் பெயரிலும் மொழியின் பெயரிலும் பிரிந்து கிடக்கின்றோம். ஒருமுறை இராபர்ட் பெஞ்ச்லே என்ற அறிஞர், “உலகில் உள்ள மக்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். மக்களை இரண்டாகப் பிறப்பவர் ஒருவிதம், அப்படிப் பிரிக்காதவர் இன்னொரு விதம் என்று பிரிக்காலம் எனக் குறிப்பிட்டார். ஆம், இன்றைக்குப் பலர் மக்களை இணைப்பவர்களாக அல்லாமல், பிரிப்பவர்களாகவும், ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் நற்கருணை குறித்துக் காட்டும் ஒற்றுமை, தியாகம், அன்பு போன்ற பண்புகளைத் தங்களுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டுவது மிகவும் நல்லது.
ஆகவே, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நற்கருனையைக் கொடையாகத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். மேலும் அந்த நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொண்டு, அது குறித்துக் காட்டும் ஒற்றுமை, ஒன்றிப்பு, தியாகம், அன்பு போன்ற பண்புகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘நாம் விண்ணகத்திற்கு செல்ல மிக எளியதும் பாதுகாப்பதுமான வழி, நற்கருணையே!’ என்பார் புனித பத்தாம் பயஸ். ஆகையால், நாம் நம்மை விண்ணகத்திற்கு இட்டுச் செல்லும் நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொண்டு, நற்கருணை உணர்த்தும் விழுமியங்களை நமது வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.