கிறிஸ்துவுக்குள் இளையோர் முழுமையாக நுழைய வேண்டும்

முன்னாள் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் நூறாவது பிறந்தநாள் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அந்நாளில், போலந்து இளையோருக்கு காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோரை அதிக அளவில் அன்புகூர்ந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், திருஅவைக்கும், போலந்திற்கும், இறைவன் வழங்கிய மிக உன்னதக் கொடை என தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1920ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி துவங்கி, 15 ஆண்டுகளுக்குமுன் முடிவடைந்த அவரின் வாழ்வு முழுவதுமே, இறைவன், உலகம், மனிதன் குறித்த மறையுண்மைகள், மற்றும், வாழ்வு பற்றிய பேரார்வத்தால் நிறைந்திருந்தது என உரைத்துள்ளார்.

இரக்கத்தின் உயரிய மனிதராக இருந்த அப்புனித திருத்தந்தை, Dives in misericordia என்ற திருமடலை வெளியிட்டதையும், Faustina அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தியதையும், இறை இரக்கத்தின் ஞாயிறை உருவாக்கியதையும், தான் வழங்கிய செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும், துயர்களுக்கும் தீர்வு காண்பதற்கு உதவும் நோக்கத்தைக் கொண்டதாக இப்புனித திருத்தந்தையின்  படிப்பினைகள் உள்ளன என்று, தன் காணொளிச் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட, மற்றும், குடும்பப் பிரச்சனைகள் ஒருநாளும் புனிதத்துவம், மற்றும், மகிழ்ச்சியின் பாதையில், தடைகளாக இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறு வயதிலேயே தன் தாயையும், சகோதரரையும், தந்தையையும் இழந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், ஒரு மாணவராக நாத்சி கொடுமைகளையும் அனுபவித்து, அதில் தன் பல நண்பர்களையும் இழந்து, ஓர் அருள்பணியாளராகவும், ஆயராகவும், மதநம்பிக்கையற்ற கம்யூனிச கொள்கைகளை எதிர்கொண்டது உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் அனுபவித்த அனைத்துத் துன்பங்களும், அவரின் விசுவாசத்தை மேலும் மேலும் பலப்படுத்தவே உதவியுள்ளன என, தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து நாட்டின் இளையோருக்கு என வழங்கப்பட்டுள்ள இந்த செய்தியில், அப்புனித திருத்தந்தை, தன் முதல் திருமடலாகிய Redemptor hominisல் குறிப்பிட்டதுபோல், ஒவ்வோர் இளையோரும் கிறிஸ்துவுக்குள் முழுமையாக நுழையவேண்டும் என விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டை சிறப்பிக்கும் இளையோர், இயேசுவுடன் துணிச்சலாக நடப்பதற்குரிய ஆவலை வளர்ப்பதுடன், ஒப்புரவு, ஒன்றிப்பு, மற்றும், படைப்பின் அடையாளங்களாக மாறி,  இன்றைய உலகைத் தொடர்ந்து கட்டியெழுப்ப உதவட்டும் என இச்செய்தியின் இறுதியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், தனக்காக செபிக்கும்படி விண்ணப்பித்து, அக்காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

Comments are closed.