படைப்புக்களில் கடவுள் பிரதிபலிப்பு

பளிங்கு போன்று ஆண்டவர்முன் நாம் ஒளிவுமறைவன்றி இருந்தோமானால், அவரின் இரக்கத்தின் ஒளி நம்மிலும், நம் வழியாக இந்த உலகிலும் சுடர்விடும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 19, இச்செவ்வாயன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மேலும், மே 17 இஞ்ஞாயிறு முதல், மே 24 வருகிற ஞாயிறுவரை திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் Laudato Si வாரத்தை மையப்படுத்தி, திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், படைப்புக்கள் அனைத்திலும் கடவுள் பிரதிபலிப்பதைக் காண்பதற்கு நம்மால் இயலும்போது, அவரின் படைப்புக்கள் அனைத்திற்காகவும், அவரோடு ஒன்றித்து அவரை வணங்கவும், அவரைப் புகழவும் நம் இதயங்கள் விரும்புகின்றன என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.

2015ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி, இறைவா உமக்கே புகழ் என்று பொருள்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க Laudato Si திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு, #LaudatoSi5 என்ற ஹாஷ்டாக்குடன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் Laudato Si வாரம்

மேலும், இந்தோனேசியாவில், மே 17 இஞ்ஞாயிறன்று, Laudato Si’ வாரத்தை ஆரம்பித்து வைத்த, ஜகார்த்தா பேராயர்  கர்தினால்  Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள், இந்தப் பூமியைப் பாதுகாப்பதற்கு கத்தோலிக்கருக்கு நல்மனம் அவசியம் என்று கூறினார்.

சிறந்ததொரு வருங்காலத்தை அமைப்பதற்கு, நாம் ஒன்றிணைந்து சிந்திப்போம், செபிப்போம் மற்றும் செயல்படுவோம் என்று, இஞ்ஞாயிறன்று காணொளிச் செய்தி வழியாக இந்தோனேசிய கத்தோலிக்கரிடம் பேசிய கர்தினால் Suharyo அவர்கள், திருத்தந்தையின் அழைப்பிற்குச் செவிமடுப்போம் என்று கூறினார்.

வறியவர்களும், பசியாய் இருப்பவர்களும் இன்னும் பலர் உள்ளனர் என்பதால், உணவை வீணாக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்ட கர்தினால், குடும்பங்களோடு சேர்ந்து மரங்களை நடுங்கள் என்றும், நகரங்களில் தெருக்களில் வாழ்வோருக்கு உணவு அளிப்பதோடு, தற்போது துன்புறும் உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவளியுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

Comments are closed.