தேவமாதாவின் வணக்கமாதம் மே 20

தேவமாதாவுக்கு வியாகுலம் உண்டாக்கின மூன்று முகாந்திரங்களின் பேரில்!
சேசுநாதர் படாத பாடுபட்டு மரிப்பாரென்று தேவமாதா அறிந்து மன வேதனைப்பட்டது.
தேவமாதா தமது குமாரனுக்குச் சம்பவிக்கப் போகும் அனைத்தையும் தூரதிருஷ்டியினால் முன் அறிந்திருந்தார்கள். ஆனதால் அவருடைய திருமுகத்தைப் பார்க்கும்பொழுது அந்தத் திருமுகம் இரத்தத்தினாலும் அசுத்தமான உமிழ்நீரினாலும் அவலட்சணமாகுமென்றும் அவருடைய திருக் கைகளைப் பார்க்கும்பொழுது அவைகள் இரும்பாணிகளினால் ஊடுருவப்படுமென்றும் அவருடைய திருச்சரீரம் காயம்பட்டுச் சிலுவையில் அறையப்படுமென்றும் அறிந்திருந்தார்கள். மீண்டும் தேவாலயத்துக்குப்போய் அதில் வேத முறைமையின்படி சர்வேசுரனுக்கு யாதோர் பலியை ஒப்புக்கொடுக்கிறதை பார்க்கும்போது, தம்முடைய குமாரனாகிய சேசுநாதர் தமது இரத்தமெல்லாம் சிந்தி மனிதர்களை மீட்க பிதாவாகிய சர்வேசுரனுக்குத் தம்மை ஒப்புக் கொடுப்பாரென்றும் நினைத்துக் கொண்டு வருவார்கள். இந்த வர்த்தமானங்கள் எல்லாம் தேவமாதா முன்னறிந்து மனதில் இடைவிடாமல் தியானித்ததினால் அன்னை சொல்லொண்ணா மனோ வியாகுலம் அனுபவித்தார்கள். ஆனால் நரகத்தினின்று நம்முடைய ஆத்துமங்களை மீட்பதற்கு இவையெல்லாம் வேண்டியிருப்பதால் தேவமாதா பட்ட கிலேசம் எவ்வளவாக இருந்தாலும் அதைப் பொறுமையோடு அனுபவித்து ஒருபோதும் முறைப்படாமல் இருந்தார்கள். அன்னை நமக்காக பட்ட கிலேசமானது வீணாகாதபடிக்கும் நமது ஆத்துமம் கெட்டுபோகாதபடிக்கும் அன்னையை நோக்கி வேண்டிக்கொள்ளுவோமாக.
சேசுநாதர் வேதம் போதிக்கிற வேளையில் மிகுந்த துன்பத்துயரங்கள் அனுபவிப்பாரென்று தேவமாதா அறிந்து மன வேதனைப் பட்டது.
தேவமாதா வியாகுலம் அனுபவித்ததற்கு இரண்டாம் முகாந்தரம் என்னவென்றால் தமது குமாரனாகிய சேசுநாதர் படுகிற வருத்தங்களையும் எளிமைத்தனத்தையும் அவருடைய விரோதிகள் அவர் போரில் வைத்த வர்மம் காய்மகாரத்தையும் அவருக்கு வருவித்த நிந்தை அவமானங்களையும், அவர் மீது சொன்ன அபாண்டம், பொய்சாட்சி முதலான துன்பங்களையும் கண்டு தேவமாதாவின் ஆத்துமத்தில் அதிக கஸ்தியுண்டானதுமல்லாமல், அதெல்லாவற்றையும் தமக்கு செய்தாற்போல் அனுபவித்தார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. ஆனால் இவை தேவ சித்தத்தின்படியே நடக்கிறதென்றும், சேசுநாதர் அந்த துன்பங்களுக்கு மனப்பூர்வமாய் உட்படுகிறாரென்றும் அறிந்து, தேவ சித்தத்துக்கு கீழ்ப்படிந்து தமக்கு வந்த துன்பத்தை வெகு பொறுமையோடு சகித்து வந்தார்கள். நாமும் தேவமாதாவைப்போல் நமக்கு துன்பம் சலிப்பு வருத்தம் நோவு வியாதி வேதனை முதலியன வரும் வேளைகளில் அவையெல்லாம் சர்வேசுரனுடைய உத்தரவின்படியே சம்பவிக்குமென்று நினைத்து பொறுமையோடு சகித்து முறைப்படாது இருக்கக்கடவோம்.
அநேகம் பாவிகளுக்கும் சேசுநாதர் பட்ட பாடுகள் வீணாகப் போகுமென்றும் தேவமாதா அறிந்து மன வேதனைப் பட்டது.
ஆனால் தேவமாதா மீளாத் துன்பங்கள் அனுபவித்ததற்கு விசேஷமான முகாந்தரமானது: சர்வேசுரன் அனுப்பின மீட்பரை மனிதர்கள் அறியாமல் அவருடைய திவ்விய போதனை முதலான உபகாரங்களை நிந்தித்து வருகிறதையும், தங்களை மீட்க வந்த சேசுநாதருக்கு அவர்கள் காண்பித்த, நன்றிகெட்ட தனத்தையும். செய்த கொடூரத்தையும் கண்டு தேவமாதா பிரலாபித்து அதிக கஸ்திபட்டதுமன்றி தமது தேவக்குமாரனின் திருப்பாடுகள் பாவிகளில் அநேகருக்கு வீணாய்ப்போகும் என்றும், தமது சனங்களாகிய யூதர்கள் மூர்க்கத்தினாலும் பாதகங்களினாலும் சர்வேசுரனுடைய கோபத்தை தங்கள் பேரில் வருவித்து கொண்டு மெய்யான வேதத்தை இழந்து, சபிக்கப்பட்டு தள்ளப்படுவார்களென்றும், மோட்ச வழியை புறக்கணித்து கண்களை மூடிக்கொண்டு ஞானகுருடராய் திரிவார்களென்றும் தேவமாதா கண்டு சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்தார்கள்.
கிறிஸ்தவர்களே! நீங்கள் பாவம் செய்யும்போது சேசுநாதர் சுவாமி பட்ட பாடுகள் உங்கள் மட்டில் வீணாய் போவதற்கு பாவமானது காரணமானதினால் தேவமாதாவுக்கு மறுபடியும் கஸ்தி வருவிக்கிறீர்கள். ஆதலால் யூதர்களுக்கு இடப்பட்ட ஆக்கினையை சர்வேசுரன் உங்களுக்கும் இடுவாரென்று பயப்பட்டு அவருடைய கோபத்தை அமர்த்த வேண்டுமென்று தேவமாதாவை நோக்கி ஜெபமாலை தியானித்து மன்றாடுவீர்களாக.
செபம்
சேசுநாதருடைய பரிசுத்த தாயாரே ! ஆண்டவர் எனக்கு செய்தருளிய எண்ணிறந்த, உபகாரங்களையும் நான் அவருக்கு காண்பித்த நன்றிகெட்டதனத்தையும் நினைக்கும்போது கொடூரமான தீர்வைக்குள்ளாவேனென்று பயப்படுகிறேன். ஆனால் பாவிகளுக்கு அடைக்கலமாகச் சர்வேசுரன் உம்மை வைத்திருக்கிறாரென்று நினைவுகூர்ந்து எனக்காக வேண்டிக்கொள்ளுவீரென்றும் நான் உமது திருக்குமாரனிடத்தில் கணக்கு ( தனித்தீர்வை) சொல்லப்போகிற நாளில் எனக்காக மனுப்பேசுவீரென்றும் நம்பிக்கையாய் இருக்கிறேன். ஆகையால் முன் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்து இனிமேல் நான் அந்த பாவங்களை செய்யாதிருக்க எனக்கு உதவி செய்தருளும்.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
கிறிஸ்தவர்களுக்கு சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
பத்தொன்பதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
சர்வேசுரன் உங்களுக்கு செய்த எண்ணிக்கையில்லாத உபகாரங்களை நினைத்து அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகிறது.

Comments are closed.