தேவமாதாவின் வணக்கமாதம் மே 10

கர்த்தர் மனித அவதாரம் எடுக்கும்போது தேவமாதா அனுசரித்த சுகிர்த புண்ணியங்களின் பேரில்
இந்தத் தேவ இரகசியம் நிறைவேறுமுன்னர் தேவமாதா செய்த நற்கிரிகைகள்
1.சகல பாக்கியம் நிறைந்தவர்களும் பரம நாயகியுமான கன்னிகை தனது இளம் வயதில் தன்னை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து சுகிர்த புண்ணியங்களின்படி அனுசரித்து வந்தார்கள். சர்வேசுரன் அன்னையை நாளுக்கு நாள் புண்ணிய வழியில் அதிகரிக்கிறதைக் கண்டு மகிழ்ச்சியுற்று தம்முடைய திருக்குமாரனுக்கு ஏற்ற தாயாவதற்கு மென்மேலும் அன்னைக்கு தேவ வரங்களை அளித்துக்கொண்டு வந்தார். அந்தப் பரமநாயகி உலக இரட்சகர் இந்த உலகில் வருங்காலம் கிட்டினதென்று அறிந்து எத்தகைய மகிழ்ச்சி அடைந்தார்களென்று எவராலும் சொல்ல முடியாது. அந்த இன்ப சாகரமான சரித்திரத்தில் சர்வ ஜீவ தயாபர சர்வேசுரனுக்கு முடிவில்லாத தோத்திரம் வருமென்றும், நீண்டநாள் பசாசின் அடிமைத்தனத்திலிருந்த மனிதர் மீட்கப்படுவார்கள் என்றும் அறிந்து, வரப்போகிற பரம இரகசியம் எப்போது நிறைவேறுமோ என்று தமது செபத்திலேயும், தியானத்திலேயும் மிகுந்த ஆசையுடன் சிந்தித்து வந்தார்கள். நாமும் தேவமாதா தம்முடைய பரிசுத்த உதரத்தில் தரித்த தேவனைத் தேவநற்கருணை வழியாக உட்கொள்ளுகிறோம்.
ஆனால் அன்னை செய்ததுபோல் எவ்வித புண்ணியங்களானாலும் நம்முடைய இருதயத்தைச் சர்வேசுரனுக்குத் தக்க சிம்மாசனமாக இருக்கும்படி அலங்கரித்து வருகிறோமோ? இல்லையே தமது செபத் தியானம் முதலிய நற்கிரிகைகளில் தேவமாதா நமக்குக் காண்பித்த தேவபக்தியும், சிநேகமும் நம்பிக்கையும் நம்மிடத்தில் விளங்குகிறதோ? அதுவும் இல்லையே. தேவ நற்கருணை வாங்குகிறதில் முதலாய்த் தேவ சிநேக அக்கினியின்றி கல் நெஞ்சராய் இருக்கிறோம்.
2.சம்மனசு தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன போது அவர்கள் காண்பித்த சுகிர்த மாதிரிகை.
வானதூதர் மங்களவார்த்தை சொன்ன பொழுது தேவமாதா காண்பித்த சுகிர்த புண்ணியங்களை தியானிக்கிறது. மிகுந்த கற்புடையவர்களாய் இருந்ததால் மனிதவுருவாய் காண்பித்த வானதூதரைப் பார்த்து அன்னை அஞ்சினார்கள். குன்றாத விசுவாசமுள்ளவர்களாய் இருந்ததால் தனக்கு அறிவித்த தேவ இரகசியத்தை உறுதியாக நம்பி மகா மனத்தாழ்ச்சியுள்ளவர்களாய் தான் ஆண்டவருடைய அடிமையென்று சொன்னார்கள். குறையற்ற கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருந்ததால் தேவ கட்டளையென்று அறிந்தவுடன், இதோ, ஆண்டவருடைய அடிமையானவள், உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றார்கள். நாமும் தேவதாயின் சுகிர்த மாதிரிகையைக்கண்டு பாவிக்கக்கடவோம். அப்போது விசேஷமாய் நம்முடைய தேவதாயாருக்குப் பிரியமுள்ளவர்களாய் அன்னையுடைய அடைக்கலத்தை அடைவதற்குப் பாத்திரவான்களாய் இருப்போம்.
3.இந்தத் தேவ இரகசியம் நிறைவேறிய பின்னர் தேவதாய் அனுசரித்த புண்ணியங்கள்.
அந்தப் பரம இரகசியம் நிறைவேறவே, பரிசுத்தாவியின் அற்புதக் கிருபையால் கர்த்தர் அன்னையின் திரு உதரத்தில் அவதாரம் பண்ணின சமயத்தில் திருக் கன்னிகையின் மனதிலிருந்த உணர்ச்சிகளைப் பக்தியுடன் தியானிக்கக்கடவோம். தன்னுடைய குமாரன் அண்டையில் தன்னைத் தாழ்த்தி அவரை மிகுந்த வணக்கத்துடன் ஆராதித்து அவரைத் தன்னுடைய தேவனாகவும் மகனாகவும் நேசித்துத் தன்னை அவருக்கு முழுமையும் ஒப்புக் கொடுத்தார்கள். நாமும் திவ்விய நற்கருணையை வாங்கும்போதும், வாங்கின பின்பும், தேவமாதா நமக்குக் காண்பித்த சுகிர்த மாதிரிகையை அனுசரித்து வருமோமாகில் நமக்கு எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டமாகும்! அவ்வாறு தகுந்த விதமாக திவ்விய நற்கருணையை வாங்குவோமாகில் பரிசுத்தவான்களாய் சீவிப்போம்.
செபம்
சேசுக்கிறிஸ்துவின் இனிய அன்னையே! ஆண்டவருடைய வார்த்தையானது உமது திரு உதரத்தில் அவதாரம் எடுக்கும் பொழுது நீர் கொண்டிருந்த சுகிர்த உணர்ச்சிகள் சொல்ல முடியாது. சகல நன்மையும் நிறைந்த சர்வேசுரன் உமது திருமைந்தனானார் என்பதை பார்த்து அவரை எவ்வளவான ஆசை பக்தி சிநேகத்துடன் அரவணைத்தீர்! அவரோவென்றால் உமது திருஇருதயம் எவ்வித சுகிர்த புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததினால் அதில் பிரியமாய் வாசம் பண்ணிக் கொண்டிருந்தார். என் பரிசுத்த அன்னையே! நான் என் அன்புக்குரிய சேசுவை என் இருதயத்தில் அடிக்கடி வாங்கினாலும் உமக்கும் எனக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்! என் இதயம் எவ்வித துர்க்குணமும் நிறைந்தது. அப்படியிருக்க அந்தப் பரிசுத்தமான சர்வேசுரன் என்னிடத்தில் வருகிறதெப்படி? மாசற்ற கன்னிகையே! உம்முடைய திருக்குமாரனை நினைத்து உம்மை மன்றாடுகிறேன். நான் திவ்விய நற்கருணையைத் தக்க ஆயத்தத்தோடு வாங்கும்படியாகச் செய்தருளும். என்னுடைய இருதயம் உமது திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கும்படிக்கு அதில் தேவ சிநேகமும், மனத்தாழ்ச்சியும், பரிசுத்த கற்பும், திவ்விய பக்தியும் உம்மிடத்தில் இருந்ததுபோல் விளங்கச் செய்தருளும்.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
ஓ! மரியாயே! தயையுள்ள கன்னிகையே, கிருபாகரியே, கருணாகரியே, அருணோதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
ஒன்பதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :
ஒவ்வொருவரும் தன்னைச் சர்வேசுரனுக்கும் தேவ மாதாவுக்கும் முழுதும் ஒப்புக்கொடுக்கிறது.

Comments are closed.