நற்செய்தி வாசக மறையுரை (மே 04)
பாஸ்கா காலம் நான்காம் வாரம் திங்கட்கிழமை
யோவான் 10: 11-18
ஆடுகளுக்காக உயிரைத்தரும் நல்ல ஆயன் இயேசு
நிகழ்வு
இளைஞன் ஒருவன் தாபோர் மலையடிவாரத்தில் தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வழியாக நாடோடிக் கூட்டம் (Bedouins) வந்தது. அந்தக் கூட்டத்தின் தலைவன், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இளைஞனிடம், “உன்னுடைய ஆடுகளில் ஒருசிலவற்றை எங்களுக்குத் தா” என்று மிரட்டினான். அவனுடைய மிரட்டலுக்கு அஞ்சாமல், அந்த இளைஞன், “அதெல்லாம் தரமுடியாது; நீங்கள் என்ன வேண்டுமாலும் செய்துகொள்ளங்கள்” என்று உறுதியாகச் சொன்னான்.
உடனே அந்த நாடோடிக் கூட்டத்தின் தலைவன், தன்னுடைய இடையில் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி, அவன்மீது பாய்ச்சி, அவனைக் கொன்றுபோட்டான். இவ்வாறு அந்த இளைஞன், தன்னுடைய ஆடுகளுக்காக உயிரையும் தந்தான்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஆடுமேய்க்கும் இளைஞன் எப்படித் தன்னுடைய ஆடுகளுக்காக உயிரையும் தந்தானோ, அப்படி நம் ஆண்டவர் இயேசு தன் ஆடுகளாகிய நமக்காக உயிரையும் தருபவராக… நல்ல ஆயனாக விளங்குகின்றார். இயேசு எப்படி நல்ல ஆயனாக இருக்கின்றார் என்பதை இப்பொழுது நாம் சிந்தித்து பார்ப்போம்.
ஆடுகளை அறிந்தவர்
யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, ‘நல்ல ஆயன் நானே’ என்கின்றார். இயேசு எப்படி நல்ல ஆயனாக இருக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தியை அடிப்படையாக வைத்தே நாம் அறிந்துகொள்வோம்.
இயேசு தன்னைக் குறித்துச் சொல்கின்றபொழுது, “தந்தை என்னை அறிந்திருக்கின்றார். நானும் தந்தையை அறிந்திருக்கின்றேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்” என்கிறார். ஒரு நல்ல ஆயனுக்கு இருக்கவேண்டிய மிக முக்கியமான கடமை, ஆடுகளை அறிந்திருப்பது. கூலிக்கு மேய்ப்பவர் ஆடுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை; அவற்றை முழுமையாக அறியவேண்டிய தேவையும் அவருகு இல்லை. இஸ்ரயேல் சமூகத்தில் ஆயர்களாக இருந்தவர்கள், ஆடுகளை அறியவும் இல்லை; அவற்றைச் சரியாகப் பேணவும் இல்லை (எசே 34: 1-8) இதனால் ஆண்டவரின் சினம் அவர்களுக்கு எதிராக எழுகின்றது. நல்ல ஆயன் இயேசுவோ ஆடுகளை நன்கு அறிந்திருந்தார். அவர்களுடைய தேவையைத் தன் வார்த்தையாலும் செயலாலும் நிறைவேற்றித் தந்தார்.
வேறு ஆடுகளையும் வழிநடத்திச் செல்பவர்
இயேசு எப்படி நல்ல ஆயனாக இருக்கின்றார் என்பதற்கு இரண்டாவது சான்றாக இருப்பது, அவர் தன்னுடைய கொட்டிலைச் சேராத வேறு ஆடுகளையும் வழி நடத்துகின்றார் என்பதுதான். இயேசு தன்னுடைய பணிவாழ்வில் யூதர்களுக்கு மட்டுமல்ல, பிற இனத்து மக்களுக்கும் கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்தார் (யோவா 12: 20-22). இதன்மூலம் ஒரே ஆயன், ஒரே மந்தை என்ற நிலையை உருவாக்கினார். ஒரே ஆயன், ஒரே மந்தை என்ற நிலை பற்றி, இறைவாக்கினர் எசேக்கியேல் நூல் சொல்லப்பட்டிருக்கின்றது (எசே 34: 11-14, 23). அவ்வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறுகின்றன.
ஆடுகளுக்காக உயிரையும் தருபவர்
இயேசு நல்ல ஆயனாய் இருக்கின்றார் என்பதற்கு மூன்றாவது சான்றாக இருப்பது, அவர் ஆடுகளுக்காகத் தன் உயிரையும் தந்ததுதான். நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தன் உயிரையும் தருவார் என்பதை இயேசு, இன்றைய நற்செய்தியில் நான்கு இடங்களில் (10: 11,15,17,18) குறிப்பிடுக்கின்றார். அப்படியென்றால், ஓர் ஆயரின் தலையாய கடமை, தன்னுடைய ஆடுகளுக்காக எதையும்; ஏன் தன்னுடைய உயிரையும் தருவதுதான் என்பது நிரூபணமாகின்றது.
இயேசுவின் காலத்திற்கு முன்பாக இருந்த ஆயர்கள், மந்தையைப் பராமரிக்காமல், தங்களைப் பராமரித்துக்கொண்டார்கள். மேலும் அவர்கள் கூலிக்கு மேய்ப்பவர்கள் போன்று, ஆண்டுகளைப் பற்றி எந்தவோர் அக்கறையும் இல்லாமல், தங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால், நல்ல ஆயனாம் ஆண்டவர் இயேசு, தன்னுடைய கொட்டிலைச் சேர்ந்த ஆடுகளை மட்டுமல்ல, வேறு கொட்டிலைச் சேர்ந்த ஆடுகளையும் அறிந்து, அவற்றை நல்ல முறையில் வழிநடத்தி, அவற்றுக்காக உயிரையும் தந்தார். இவ்வாறு இயேசு நல்ல ஆயனாக இருக்கின்றார்.
ஆகையால், நல்ல ஆயனாக இருக்கும் இயேசுவின் மந்தையாகிய நாம், அவருடைய குரல் கேட்டு, அவரை அறிந்து, அவர் வழி நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘தாம் தூயவர்களாக்கியவர்களை ஒரே பலியினால் (இயேசு) என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்’ (எபி 10: 14) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். நாம் நிறைவுள்ளவர்களாகுவதற்குத் தன்னையே பலியாகக் கொடுத்த நல்லாயன் இயேசுவின் மந்தையாகி நாம், அவருடைய குரலைக் கேட்டு, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.