கோவிட்-19 சூழலில் வயது முதிர்ந்தோரின் உரிமைகள், மாண்பு

உலகில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களில் அதிகமானோர் வயது முதிர்ந்தோர் என்றும், இந்நிலை, வயதுமுதிர்ந்தோர் மத்தியில் விவிரிக்க முடியாத அச்சத்தையும் துன்பத்தையும் உருவாக்கியுள்ளது என்றும், ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், மே 01, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

இந்தக் கொள்ளைநோயால் இறப்பவர்களில், மற்ற வயதினரைக் காட்டிலும், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து மடங்காக உள்ளனர் என்றும், இந்த நெருக்கடி காலத்தில், வயது முதிர்ந்தோர் நலவாழ்வு பிரச்சனையை எதிர்கொள்வது தவிர, கடுமையான வறுமையையும் எதிர்கொள்கின்றனர்  என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் களைவதற்கென, ஐ.நா. வகுத்துள்ள 16 பக்க கொள்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், கோவிட்-19 நெருக்கடி காலத்தில், வயது முதிர்ந்தோரின் உரிமைகளும், மாண்பும் பாதுகாக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

வயதின் காரணமாக, இவர்களுக்கு வழங்கப்படும் சமுதாயப் பாதுகாப்பு மற்றும், நலவாழ்வு பராமரிப்பில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன என்றும் கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், தானும் வயதானவர் என்பதையும், வயது முதிர்ந்த அன்னையைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பை தான் கொண்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

வயது முதிர்ந்தோருக்கெதிரான முற்சார்பு எண்ணங்களையும், பாகுபாடுகளையும் வளர்த்து வருவது, அவர்களின் மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இளம் வயதினரோ, வயது முதிர்ந்தவரோ யாராய் இருந்தாலும், எவருமே முக்கியத்துவம் குறைந்தவர் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பராமரிப்பு குறித்த கடினமானத் தீர்மானங்கள், அனைவரின் மனித உரிமைகளையும், மாண்பையும் மதிப்பதாய் அமையவேண்டும் என்றும், எல்லாரையும் போலவே, வயது முதிர்ந்தோரும், வாழ்வு மற்றும், உடல்நலத்தைக் கொண்டிருப்பதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்

Comments are closed.