நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 22)

பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் புதன்கிழமை
யோவான் 3: 16-21
உலகின்மேல் பேரன்புகூர்ந்த கடவுள்
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த பங்குத்தந்தை, தன்னுடைய பங்கு மக்களிடம், “அடுத்த வாரம் மாலையில், கடவுளின் அன்பைப் பற்றிப் போதிக்க இருக்கின்றேன். அதனால் எல்லாரும் கட்டாயம் கோயிலுக்கு வாருங்கள்” என்றார். பங்குத் தந்தையின் அழைப்பை ஏற்று, எல்லாரும் கோயிலுக்கு வந்தார்கள்.
கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்ததும், பங்குத்தந்தை, கோயிலில் இருந்த விளக்குகளை எல்லாம் அணைத்தார். எல்லாரும், ‘இவர் என்ன செய்யப்போகிறார்?’ என்று தங்களுக்குள்ளே பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது பங்குத்தந்தை தன்னுடைய கையில் ஒரு மெழுகுதிரியை ஏந்தி, திருச்சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த முள்முடி தரித்த இயேசுவின் தலைக்கு அருகில் கொண்டுசென்றார். பின்னர் அப்படியே மெழுகுதிரியைக் கீழே இறக்கி, ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் விலாவிற்கு அருகில் கொண்டு சென்றார். அதன்பின் ஆணிகளால் அடிக்கப்பட்டிருந்த இயேசுவின் கைகளுக்கும் கால்களுக்கும் அருகில் கொண்டு சென்றார்.
இவற்றையெல்லாம் காட்டிய பின்பு, மெழுகுதிரியை அணைத்துவிட்டு, கோயிலில் இருந்த விளக்குகளை எல்லாம் எரியவிட்டார் பங்குத்தந்தை. கோயிலில் இருந்த விளக்குகளெல்லாம் எரியத்தொடங்கியதும், வியப்பு மேலிட தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து, பங்குத்தந்தை யோவான் 3:16 ஐ மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்கினார்: “தன்னுடைய ஒரே மகனையே சிலுவையில் கையளிக்கக் கடவுள் முன்வந்தார் எனில், அவர் இந்த உலகின்மீது எந்தளவுக்கு அன்புகூர்ந்திருப்பார்…?” பங்குத்தந்தை சொன்ன இவ்வார்த்தையின் பொருளை உணர்ந்தவர்களாய், மக்கள் கடவுளின் அன்பை எண்ணி வியந்துகொண்டே வீட்டிற்குச் சென்றார்கள்.
ஆம், கடவுள் இவ்வுலகின்மீது கொண்ட அன்பு மிகப்பெரியது. அதை விளக்கிச் சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் பேரன்பையும் அவர்மகன் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வதனால் கிடைக்கும் நிலைவாழ்வையும் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உலகின்மீது பேரன்பு கொண்ட கடவுள்
இன்றைய நற்செய்தியில், யூதத் தலைவர்களுள் ஒருவராகிய நிக்கதேமுடனான இயேசுவின் உரையாடல் தொடர்கின்றது. தூய ஆவியாரால் வரும் மறுவாழ்வைக் குறித்து அவரோடு பேசிய இயேசு, அடுத்ததாகக் கடவுளின் பேரன்பைக் குறித்துப் பேசுகின்றார்.
ஒருவருக்கு இன்னொருவர்மீது அன்பிருந்தால், அவருக்காக எதையாவது செய்யவேண்டும் அல்லது கொடுக்கவேண்டும். கொடுக்காமல் அல்லது எதுவும் செய்யாமல், ஒருவர்மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்த முடியாது; சாத்தியமும் கிடையாது. கடவுள் இந்த உலகின்மீது சாதாரண அன்பு கொள்ளவில்லை; பேரன்பு கொண்டிருந்தார். அந்தப் பேரன்பினை வெளிப்படுத்தும் விதமாகத் தன்னுடைய ஒரே மகனையே சிலுவையில் கையளித்தார். இவ்வாறு கடவுள் இவ்வுலகின்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தினார்.
இச்செய்தியை நிக்கதேமிடம் எடுத்துச் சொல்லும் இயேசு, இதையொட்டி இன்னொரு முக்கியமான செய்தியையும் சொல்கின்றார். அது குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மகன்மீது நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வு அளிக்கும் கடவுள்
ஆண்டவராகிய கடவுள் இவ்வுலகின்மீது பேரன்பு கொண்டார் என்றால், மக்கள் தன் மகன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்றும் அந்த நம்பிக்கையின்மூலம் அவர்கள் நிலைவாழ்வு பெற வேண்டும் என்றும் அவர் விரும்பினார்; ஆனால், மக்களோ அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. காரணம், கடவுளின் திருமகனாகிய இயேசு இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் (யோவா 1: 10). இருளை விரும்பியவர் அல்லது இருளில் இருந்தவர்கள் ஒளியாம் இயேசுவிடம் வரவும் அவர்மீது நம்பிக்கை கொள்ளவுமில்லை.
ஒளியாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு என்ன நேரும் என்பதையும் இயேசு நிக்கதேமிடம் தெளிவுபடுத்துகின்றார். ஒளியாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளானார்கள் (யோவா 16:9). ஏனென்றால், இவ்வுலககம் தீர்ப்புக்குள்ளாகி இருக்கின்றது. மட்டுமல்லாமல், அவர்கள் கடவுள் அளிக்கும் நிலைவாழ்வினையும் இழப்பார்கள். காரணம், கடவுளின் திருமகன்மீது நம்பிக்கை கொள்வோருக்கே நிலைவாழ்வு உண்டு என்பதை இயேசு மிக அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார்.
அப்படியானால், நம்மீது பேரன்புகொண்ட கடவுள், நமக்கு நிலைவாழ்வினை அளிக்க விரும்புகின்றார் எனில், அதற்கு நாம் அவருடைய திருமகனாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். மெசியாவாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே கடவுள் ஏற்புடையவராக்குகிறார்’ (உரோ 3:22) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளின் திருமகனாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.