ஆண்டவர் எப்போதும் நம்பிக்கைக்குரியவர்

திருப்பலியின் வாசகங்கள், ஆண்டவர் எப்போதும் நம்பிக்கைக்குரியவர் என்பதை கூறுகின்றன என்பதை, தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் நூலில் குணமடைந்த கால் ஊனமுற்றவர், எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற சீடர்கள் மற்றும், புனித பேதுரு ஆகியோரை எடுத்துக்காட்டுகளாக கூறினார்.

சலிப்பின்றி உழைப்பது இறைவனின் குணம்

சிறிதும் சலிப்பின்றி உழைப்பது இறைவனின் குணம் என்று வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, இல்லம் திரும்பிய இடையர், ஓர் ஆடு கிடைக்கு வரவில்லை என்பதை அறிந்து, அதைத் தேடிச் செல்வதையும், காணாமல் போன மகன் திரும்பி வருவதைக் காண, வீட்டின் மேல்தளத்திற்கு இடைவிடாமல் சென்று தேடிய தந்தையையும், கடவுளின் நம்பிக்கைத்தனத்திற்கு உருவங்களாக வழங்கினார்.

பிறவியிலேயே கால் ஊனமுற்றவரை மீண்டும் புதுப்படைப்பாக இறைவன் மாற்றினார் என்றும், அதற்கு, அந்த மனிதர், துள்ளி நடந்து கடவுளைப் போற்றியது அவர் தந்த பதிலிறுப்பு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

சீடர்களை தொடர்ந்து சென்ற இயேசு

எருசலேமில் நடந்தவற்றைக் கண்டு உள்ளம் தளர்ந்து, அந்நகரைவிட்டு, எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற இரு சீடர்களை இயேசு தொடர்ந்து சென்று, அவர்கள் உள்ளத்தில் மீண்டும் அன்பையும், ஆர்வத்தையும் பற்றியெரியச் செய்தார் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, உயிர்த்த இயேசு பேதுருவையும் சந்தித்தார் என்று நற்செய்தி குறிப்பிட்டுள்ளதை எடுத்துரைத்து, அந்த உரையாடலில் இயேசு கட்டாயம் மன்னிப்பையும், அருளையும் வழங்கியிருப்பார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஏனைய நாள்களைப் போலவே, இப்புதனன்று நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், ஆன்மீக அளவில், திருவிருந்தில் மக்கள் கலந்துகொள்வதற்கு உதவியாக, ஒரு செபத்தைக் கூறியபின், திருநற்கருணை ஆராதனையை, சில நிமிடங்கள் மௌனமாக மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், திருநற்கருணை ஆசீரையும் வழங்கினார்.

ஒவ்வொரு நாளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலை ஏழு மணிக்கு நிறைவேற்றும் திருப்பலி, ஊடகங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பாகிறது என்பதும், அதனை தொலைக்காட்சியிலும், வலைத்தளத்திலும் காணும் பக்தர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன

Comments are closed.