துன்பங்களில் பிரிவினைகளை மேற்கொள்ள ஒன்றிப்பு அவசியம்
துன்பம் நிறைந்த இந்த நேரங்களில் நம் எல்லாரையும் பிணைக்கும் கூட்டுப்பண்பையும், எந்தவிதப் பிரிவினைகளையும்விட, எப்போதுமே பெரியதாகவுள்ள ஒன்றிப்பையும் கண்டுணர்வதற்கு, ஆண்டவர் நம்மை அனுமதிப்பாராக என்று, இச்செவ்வாய் காலை திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 14, இச்செவ்வாய் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலியைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நமக்கு ஒன்றிப்பின் அருளை வழங்குவாராக என்று செபித்தார்.
மாயையிலிருந்து மனம் மாறுங்கள்
பெந்தக்கோஸ்து என்னும் நாளில், எருசலேமில் கூடியிருந்த மக்களிடம், மனம் மாறி, கடவுளிடம் திரும்புங்கள் என்று, புனித பேதுரு விடுத்த அழைப்பு பற்றி விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தின் (தி.பணி2:36-41) அடிப்படையில், மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மனம் வருந்துதல் என்பது, பிரமாணிக்கத்துடன் வாழ்வதற்குத் திரும்புவதாகும் என்றும், நம் கவனத்தை ஈர்க்கும் பொய்த்தோற்றங்கள் எப்போதும் உள்ளன என்றும், இவற்றையே நாம் பல நேரங்களில் பின்பற்றுகிறோம் என்றும் கூறிய திருத்தந்தை, இன்ப மற்றும், துன்ப நேரங்களில் நாம் கடவுளுக்கு விசுவாசமாக இருப்பதற்கு அழைக்கப்படுகிறோம் என்று கூறினார்.
தனது சக்தியை நம்புகையில்
குறிப்பேடு 2ம் நூல், 12ம் பிரிவின் முதல் வசனத்தை (2 குறி.12:1) மேற்கோள் காட்டி விளக்கிய திருத்தந்தை, யூதேயாவின் முதல் அரசனான ரெகபெயாம், தனது அரசு பாதுகாப்பாக உள்ளது என்று உணர்ந்து, ஆண்டவரின் திருச்சட்டத்தைப் புறக்கணிக்கத் தொடங்கியவேளை, இஸ்ரயேலர் எல்லாருமே அவனைப் போலவே நடந்தனர் என்று கூறினார்.
இந்த வரலாற்று நிகழ்வு, உலகளாவிய மதிப்பீட்டையும் கொண்டிருக்கின்றது என்றும், நாம் பாதுகாப்பாக உணரும்போது, பல நேரங்களில், திட்டங்கள் தீட்டத் துவங்குகிறோம் மற்றும், மெல்ல மெல்ல ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்கிறோம் என்றும் மறையுரையாற்றிய திருத்தந்தை, அந்நேரங்களில் நாம் ஆண்டவருக்குப் பிரமாணிக்கமாக இருப்பதில்லை என்று எடுத்துரைத்தார்.
இந்நிலையில், நமது பாதுகாப்பு ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் பாதுகாப்பாக ஒருபோதும் மாறாது, இது ஒரு சிலை என்றும், இவ்வாறே அரசன் ரெகபெயாம் மற்றும் இஸ்ரயேலருக்கு நிகழ்ந்தது, ரெகபெயாம் தனது அரசை உறுதியுடன் நிலைநாட்டியபோது, பாதுகாப்பை உணர்ந்தான், அதேநேரம், ஆண்டவரின் திருச்சட்டத்தைப் புறக்கணித்து, சிலைகளை வழிபடத் தொடங்கினான் என்று திருத்தந்தை கூறினார்.
சிலைகளை வழிபடுதல்
சிலைகளின் முன்பாக நம்மையே நிறுத்துவதில்லை என்பதை நாம் புறக்கணிக்கலாம், நீங்கள் அவற்றின்முன் மண்டியிடாமல் இருக்கலாம், ஆனால், பல நேரங்களில் அவற்றைத் தேடி, உங்கள் இதயத்தில் வணங்கலாம் என்பது உண்மையே என்று திருத்தந்தை கூறினார்.
ஒருவர், தனது வல்லமையை மையப்படுத்துவது, சிலைகளுக்குக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எச்சரித்த திருத்தந்தை, பாதுகாப்பாக உணர்வது, மோசமானது அல்ல, ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்ற அறிவில், பாதுகாப்பாக வாழ்வது கடவுளின் அருள் என்று கூறினார்.
Comments are closed.