இறைவேண்டல், தாழ்ச்சியுடன் துவங்கப்பட வேண்டும்

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கும் குடும்பங்களை, இத்திருப்பலியில் நினைக்க விரும்புகிறேன் என்று, மார்ச் 21, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இந்நாள்களில், ஒவ்வொரு நாள் காலை ஏழு மணிக்குத் திருப்பலி நிறைவேற்றி, கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் துன்புறும் எல்லாருக்காகவும் இறைவனை மன்றாடிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலையில் குடும்பங்களுக்காக திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

வீடுகளிலேயே தங்க வேண்டிய சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்கள், அதிகபட்சம் அவர்களின் மேல்மாடங்களுக்கு மட்டுமே செல்ல முடிகின்றது, குடும்பத்திற்குள் எவ்வாறு அன்பின் உறவுகளைக் கட்டியெழுப்புவது, ஒருவருக்கொருவர் எவ்வாறு நன்றாக வெளிப்படுத்துவது போன்ற வழிகளை அவர்கள் அறிந்து கொள்வார்களாக என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வேதனை நிறைந்த இந்த நேரத்தை, குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து எவ்வாறு வாழ்வதென்பது குறித்து அவர்கள் அறியவும், இந்நெருக்கடிவேளையில் குடும்பங்களில் அமைதியும், படைப்பாற்றல் திறனும் வளரவும் செபிப்போம் என்றும், திருப்பலியின் ஆரம்பத்தில் திருத்தந்தை கூறினார்.

மறையுரை

இத்திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், இரு வெவ்வேறு முறைகளில் கடவுளை அணுகுவது பற்றிக் கூறும் இன்றைய நற்செய்திப் பகுதியை (லூக்.18:9-14) மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவரிடம் திரும்புவோம்

“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார், நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது  (ஓசே.6:1-6) என்ற இன்றைய முதல் வாசகப் பகுதியைக் குறிப்பிட்டு மறையுரையைத் தொடங்கினார், திருத்தந்தை.

இந்த ஒரு நம்பிக்கையில், மக்கள் ஆண்டவரிடம் திரும்பும் தங்களது பயணத்தைத் தொடங்கினர், ஆண்டவரைக் கண்டுகொள்ளும் வழிகளில் ஒன்று இறைவேண்டல் என்று கூறியத் திருத்தந்தை, ஆண்டவரிடம் மன்றாடுவோம், அவரிடம் திரும்புவோம் என்றும் கூறினார்.

ஆண்டவரை அணுகும் இரு வெவ்வேறு விதமான முறைகள் பற்றியும் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மூத்த மகனும், காணாமல் மகனும்”, “செல்வரும் ஏழை இலாசரும்”, “பரிசேயரும் வரிதண்டுபவரும்” ஆகிய மூன்று நற்செய்தி பகுதிகளை எடுத்துக்காட்டாக எடுத்துரைத்தார்.

இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பரிசேயரின் இறைவேண்டல், தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவதாகவும், வரிதண்டுபவர் பீடத்தைக்கூட நெருங்காமல், தொலைவில் நின்றுகொண்டே, கடவுளே, நான் பாவி, என் மீது இரங்கும் என்று செபிப்பதாகவும் உள்ளது என்ற திருத்தந்தை, இவ்வாறு, தன்னிடம் நெருங்கி வருவது எவ்வாறு என்பது பற்றி, ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.

Comments are closed.