ஆன்மீக மேய்ப்பர்களுக்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம்

மக்களுக்கு உதவுவதற்கு, சிறப்பான வழியைத் தேர்ந்துகொள்ளும் ஆற்றலையும், மனபலத்தையும் ஆன்மீக மேய்ப்பர்களுக்கு வழங்குமாறு, ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று, மார்ச் 13, இவ்வெள்ளி காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் கூறினார்.

மார்ச் 13, இவ்வெள்ளியன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியில் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்வும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், நோயாளிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களோடு நாம் ஒன்றித்திருக்கிறோம் என்று எல்லாருக்கும் நினைவுபடுத்தினார்.

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியால், இத்தாலியில் அருள்பணியாளர்களின் தடுமாற்றமான சூழலைப் புரிந்துகொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறைமக்களுக்குத் தோள்கொடுக்க வேண்டிய மேய்ப்பர்களுக்காக, தான் செபிக்க விரும்புவதாக, இத்திருப்பலியின் தொடக்கத்தில் கூறினார்.

தீவிரமான நடவடிக்கைகள் எப்போதும் நல்லதல்ல என்றும், இதனால் மேய்ப்பர்கள், மேய்ப்புப்பணியில் தெளிந்துதேர்வு பெறுவதற்கு தூய ஆவியாரிடம் மன்றாடுவோம் என்றும், இதன்வழியாக அவர்கள், புனித மற்றும், விசுவாசமான இறைமக்கள் தனித்துவிடாதபடிக்கு, நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும், மேய்ப்பர்கள் தங்களுடன் இருக்கின்றனர் என்ற உணர்வை இறைமக்கள் பெறுவர் என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுள், அவர் தம் மக்கள்

மேலும், கொடிய குத்தகைக்காரர் உவமை பற்றிய இத்திருப்பலியின் நற்செய்தி வாசகத்தின் (மத்.21:33-46). அடிப்படையில், மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் தம் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை இந்த உவமை எடுத்துரைக்கின்றது என்று கூறினார்.

திராட்சைத் தோட்டம், தேர்ந்தெடுத்த மக்களையும், குத்தகைக்கார்கள், சட்ட அறிஞர்களையும், பணியாளர்கள், இறைவாக்கினர்களையும் குறிக்கின்றனர் என்றும், கடவுள், திராட்சைத் தோட்டத்தில் தன் பணியை நன்றாகச் செய்தார் என்றும் கூறியத் திருத்தந்தை, மதுவைப் பிழியும்குழி மற்றும், காவல் மாடத்தை, கடவுளின் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களோடு ஒப்பிடலாம் என்றும் கூறினார்.

தாங்கள், தேர்ந்துகொண்ட மக்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும், கடவுளின் வாக்குறுதி, நம்பிக்கையில் எப்போதும் எதிர்நோக்கவும், கடவுள் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை, ஒவ்வொருநாளும் பிரமாணிக்கத்தோடு வாழவும் உதவுகின்றது என்று திருத்தந்தை கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைத்தோட்டத்தின் கனிகளைப் பெறுவதற்கு கடவுள் தம் பணியாளர்களை அனுப்புகையில், அவர்கள் அடிக்கப்பட்டனர், கொலைசெய்யப்பட்டனர் மற்றும், கல்லால் எறியப்பட்டனர், தம் சொந்த திருமகனை மதிப்பதற்குப் பதிலாக, அவரின் சொத்தை அபகரிப்பதற்காக, அவரைக் கொலைசெய்தனர், இது, கடவுளின் அழைப்புக்கு பிரமாணிக்கமற்று இருப்பதை எடுத்துரைக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

கடவுளின் கொடை

இது, தேர்ந்துகொள்ளப்பட்டது, வாக்குறுதி மற்றும், உடன்படிக்கை ஆகிய கடவுளின் கொடைகளுக்குப் பிரமாணிக்கமற்று இருப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் தம்மையே நமக்குக் கொடையாக்கினார், அதைப் பெறுவதை விடுத்து, அதை உடமையாக்கிக்கொள்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

அருள்பணியாளர்கள், தங்களையே முன்னிலைப்படுத்தும் பண்பு பற்றியும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இப்பண்பு, தெரிவுசெய்யப்படுவது மற்றும், வாக்குறுதி ஆகியவை,  இலவசமாக வழங்கப்படுவதை, எப்போதும் புறக்கணிப்பதாக உள்ளது என்றும் உரையாற்றினார்.

எனவே இந்தக் கொடையை, கொடையாக நாம் பெறவும், அதை, உரிமைச் சொத்தாக அல்லாமல், ஒரு கொடையாக வழங்கவும் ஆண்டவரிடம் வரம் வேண்டுவோம் என்று,  இத்திருப்பலியின் மறையுரையில் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

Comments are closed.