மார்ச் 13 : நற்செய்தி வாசகம்

இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43, 45-46
அக்காலத்தில், இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக் குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.
அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள். இயேசு அவர்களிடம், “ ‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
மத்தேயு 21: 33-43, 45-46
பலன் தருவோம்; பயன்பெறுவோம்
நிகழ்வு
இந்தி மொழியில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம்சந்த். ஒருமுறை இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்படியிருந்தும் இவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். இதைப் பார்த்துவிட்டு இவருடைய மனைவி இவரிடம், “ உங்களுக்குத்தான் உடல்நிலை சரியில்லையே…! பிறகு எதற்கு இப்படித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்…? கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளலாமே…!” என்றார்.
இதற்கு இவர், “ஒரு விளக்கின் கடமை எல்லாருக்கும் ஒளிகொடுப்பது. அந்த விளக்கு தன்னிடத்தில் எண்ணெயும் திரியும் இருக்கும் வரைக்கும் ஒளி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதுபோன்றுதான் நானும். நான் என்னுடைய உடலில் உயிர் இருக்கும் வரை நல்ல கருத்துகளை இந்தச் சமூகத்திற்குச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்” என்றார்.
ஆம். ஒரு விளக்கின் கடமை ஒளிகொடுப்பது… ஓர் எழுத்தாளின் கடமை எழுதிக்கொண்டிருப்பது. இதுபோன்று இந்த மண்ணுலகத்தில் பிறந்த ஒவ்வொருவரின் கடமை பயனுள்ள வாழ்க்கை வாழ்வது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இயேசு சொல்லும் இந்த உவமை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பலன்தராமல் போன இஸ்ரயேல் மக்கள்
இயேசு சொல்லும் கொடிய குத்தகைக்காரர் உவமையில் பல கதாப்பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. இதில் இடம்பெறும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் யாரைக் குறிப்பிடுகின்றது என்பதை முதலில் தெரிந்துகொள்வது நல்லது. உவமையில் வருகின்ற நிலக்கிழார் – கடவுள்; திராட்சைத் தோட்டமோ – இஸ்ரயேல் மக்கள்; கொடிய குத்தகைக்காரர்கள் –இஸ்ரயேலில் இருந்த சமயத் தலைவர்கள்; நிலக்கிழார் அனுப்பி வைக்கும் பணியாளர்கள் – இறைவாக்கினர்கள் மற்றும் குருக்கள்; நிலக்கிழாரின் மகன் – இயேசு; வேறு தோட்டத் தொழிலளர்கள் – பிற இனத்தார். இவைதான் இயேசு சொல்லும் உவமையில் இடம்பெறுகின்ற கதாப்பாத்திரங்கள் ஆகும்.
ஒரு நிலக்கிழாரிடமிருந்து நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர் அறுவடையின்போது, அதற்குரிய தொகையைக் கொடுக்கவேண்டும். அதுதான் முறை. இங்கு நிலக்கிழார் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தவர்களிடம் குத்தகைப் பணத்தை வாங்கிவருமாறு பணியாளர்களை அனுப்பி வைக்கின்றார். அவ்வாறு அனுப்பப்பட்ட சிலரை குத்தகைக்காரர்கள் நையப்புடைத்தார்கள் (எரே 26: 7-11, 38: 1-28); சிலரைக் கல்லால் எறிகிறார்கள் (2 குறி 24: 21). சிலரைக் கொலை செய்கிறார்கள் (மத் 14: 1-12). ‘பணியாளர்களைத் தான் இப்படிச் செய்துவிட்டார்கள்… மகனை அவர்களிடம் அனுப்பிப் பார்ப்போம்’ என்று நிலக்கிழார் அவர்களிடம் தன் மகனை அனுப்பி வைக்கின்றபொழுது, ‘இவன்தான் சொத்துக்குரியவன்; இவைக் கொன்றுவிட்டால் சொத்து நமக்குரியதாகிவிடும்’ என்று அவரை அவர்கள் வெளியே தள்ளிக் போடுகின்றார்கள். இதனால் சினம்கொள்கின்ற நிலக்கிழார் அந்தக் கொடிய குத்தகைக்காரர்களை அகற்றிவிட்டு, அவர்களிடமிருந்து திராட்சைத் தோட்டத்தைப் பிடுங்கி, உரிய பலன்கொடுக்கும் வோறொரு மக்களினத்திடத்தில் தருகின்றார்.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தனிப்பட்ட விதமாய்த் தேர்ந்துதெடுத்து, அவர்கள் வளமான வாழ்க்கை வாழ எவ்வளவோ நன்மைகளைச் செய்தார். அப்படியிருந்தும் அவர்கள் உரிய பலன்தராமல் போனதால், இறையாட்சி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதற்குரிய பலன் கொடுக்கும் மக்களிடம் கொடுக்கப்பட்டது.
பிற இனத்தார் இறையாட்சிக்கு உட்படுதல்
உவமையின் இறுதியில் இயேசு சொல்லக்கூடிய, ‘உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிளார்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்’ என்ற வார்த்தைகள், யோவான் நற்செய்தியில் வரும் ‘கனிகொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார்’ (யோவா 15: 2) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துபவனாக இருக்கின்றன.
ஆம், மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கனிதரக்கூடிய வாழ்க்கை வாழவேண்டும். அதுதான் கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கும். யூதர்கள் கனிதரும் வாழ்க்கை வாழவில்லை. அதனால்தான் அவர்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்பட்டு, பிற இனத்து மக்கள் அதில் உட்படும் நிலை ஏற்பட்டது. நாம் கனிதரும் வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம். அப்படி நாம் வாழாத பட்சத்தில், நம்மிடமிருந்தும் வாழ்வு பறிக்கப்படும் என்பது உறுதி.
சிந்தனை
‘நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்களுகாக வழக்காடுங்கள்’ (எசா 1: 17) என்பார் எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம் யாருக்கும் பயனில்லாத வாழ்க்கை வாழ்வதை விடுத்து, பிறருக்குப் பயன்தரும் அல்லது கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.