மார்ச் 12 : வியாழக்கிழமை. நற்செய்தி வாசகம்.
இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31
அக்காலத்தில்
இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.
அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.
அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார். அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார். அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார். ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்’ என்றார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச்சிந்தனை.
“உலகப்பற்றும் இறைப்பற்றும்”
ஆற்றங்கரையோரமாய் துறவி ஒருவர் வசித்து வந்தார். அவர் தன்னிடம் வருவோருக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லி உதவி செய்து வந்தார். ஒருநாள் அவரிடம் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் வந்தார். அவர் துறவியிடம், “சுவாமி! எனக்கோர் ஐயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஐயத்தைத் தீர்த்து வைக்க முடியுமா?” என்றார். உடனே துறவி, “உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயம் என்னவென்று சொல்லுங்கள்… நான் அதை என்னால் முடிந்த மட்டும் தீர்த்து வைக்கின்றேன்” என்றார்.
“கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே எவ்வளவு…?’ இதுதான் என்னுடைய உள்ளத்தில் ஏற்பட்டுள்ள ஐயம்” என்றார் வந்திருந்தவர். உடனே துறவி அவரிடம், “ஒரு காகிதத்தைக் கையில் எடுத்துக்கொள். அதில் உன்னுடையவை என்று எவற்றையெல்லாம் நீ நினைக்கின்றாயோ, அவற்றை அந்தக் காகிதத்தில் எழுது. அந்தப் பட்டியல் எவ்வளவு தூரம் செல்கின்றதோ, அவ்வளவு தூரம்தான் உனக்கும் கடவுளுக்கும் இடையே தூரம்” என்று நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் பதில்கூறினார் துறவி.
ஆம், நாம் எவற்றையெல்லாம் நம்முடையவை என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோமோ, அவைதான் நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்து வைப்பவையாக இருக்கின்றன. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ‘செல்வந்தர், ஏழை இலாசர்’ உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு இந்த உவமையைச் சொல்வதன் நோக்கமென்ன…? இந்த உவமையின் வழியாக அவர் நமக்குச் சொல்லவருகின்ற செய்தி என்ன…? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உலக செல்வத்தின்மீது பற்றுக் கொண்டிருந்த செல்வர்
லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெறும் செல்வர், ஏழை இலாசர் உவமையை இயேசு சொல்வதற்கு மிக முக்கியமான காரணம், பரிசேயர்கள் பணத்தாசை பிடித்தவர்களாக இருந்தார்கள் என்பதாலும், செல்வம் கடவுள் கொடுத்த ஆசி, ஏழ்மை கடவுள் கொடுத்த சாபம் என்ற எண்ணத்தோடும் இருந்ததால்தான். இதனால்தான் இயேசு செல்வர், ஏழை இலாசர் உவமையைச் சொல்கின்றார்.
உவமையில் வருகின்ற செல்வர், விலையுயர்ந்த, மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார் என்று வாசிக்கின்றோம். இதில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. செல்வர் தன்னிடமிருந்த செல்வத்தில் மிதந்தார். இதனால் அவர் தன்னைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்கவில்லை. முடிவு, அவர் இறந்தபிறகு பாதாளத்தில் வதைக்கப்படும் சூழல் உருவாகின்றது. புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்; “பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்” (1 திமொ 6:10). உவமையில் வரும் செல்வர் பொருளின்மீதும் உலக செல்வத்தின்மீது பற்றுக்கொண்டிருந்தார். அந்தப் பற்றே அவரைச் சக மனிதரைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் செய்தது; கடவுளைப் பற்றியும் சிந்திக்கவிடாமல் செய்தது.
ஆண்டவர்மீது பற்றுக்கொண்டிருந்த ஏழை இலாசர்
செல்வர் உலகத்தின்மீது பற்றுக்கொண்டிருக்க, ஏழை இலாசரோ தன்னுடைய பெயருக்கு ஏற்றாற்போல் ‘ஆண்டவரே என் உதவி’ என்பதுபோல் வாழ்ந்துவந்தார். இதனால் அவர் இறந்தபிறகு ஆபிரகாமின் மடியில் இருக்கின்றார்.
பொதுவாக இயேசு சொல்லக்கூடிய உவமைகளில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு பெயர் இருக்காது; ஆனால் இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் ‘செல்வர், ஏழை இலாசர்’ உவமையிலோ இலாசருக்குப் பெயர் இடமிருக்கின்றது. இதுவே ஏழை இலாசர் கதாப்பாத்திரம் உயிரோட்டமானது என்பதையும் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டிருந்தது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கின்றது
இங்கு நமக்கு முன் ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், ஒருவர் ஏழையாகப் பிறந்துவிட்டாலே போதும், அவர் விண்ணகம் சென்றுவிடமுடியுமா? அல்லது ஒருவர் பணக்காரராகப் பிறந்தால், அவர் பாதாளத்திற்குத்தான் செல்ல வேண்டுமா? என்பதாகும். ஒருவர் ஏழையோ அல்லது பணக்காரரோ, அவர் ஆண்டவர்மீது பற்றிக்கொண்டிருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவரால் விண்ணகத்திற்குள் நுழைய முடியும். இல்லையென்றால் பாதாளம்தான் செல்லவேண்டும். உவமையில் வரும் செல்வர் செல்வத்தின்மீது மட்டுமே பற்றுக்கொண்டிருந்தார். அதனால் பாதாளம் சென்றார்; ஆனால் ஏழை இலாசர் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டிருந்தார், அதனால் அவர் விண்ணகம் சென்றார். அப்படியானால் ஒருவர் விண்ணகம் செல்வதும் செல்லாததும் அவர் ஆண்டவர்மீது கொண்டிருக்கின்ற பற்றைப் பொருத்தது என்றால் அது மிகையில்லை.
சிந்தனை.
‘மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில், அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ (மத் 16: 25) என்பார் இயேசு. ஆகையால், நாம் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டு வாழ்வைத் தொலைப்பதற்குப் பதில், இயேசுவின்மீது பற்றுக்கொண்டு, அவரை ஆதாயமாக்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.