மார்ச் 4 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்

இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32
அக்காலத்தில்
மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.
தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச்சிந்தனை.
“நல்லதைப் பார்க்கத் தவறும் மக்கள்”
ஒருமுறை ஒரு தனியார் தொலைகாட்சியைச் சார்ந்த நிருபர் ஒருவர், கூட்டமாக ஓரிடத்தில் கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்களிடம் சென்று, “இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிமிடங்கள் கொடுக்கப்படும். இந்த இரண்டு நிமிடங்களில் உங்கள் மனத்தில் தோன்றும் கருத்துகளைச் சொல்லலாம். நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகள் எங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும்” என்றார்.
உடனே அங்கே நின்றுகொண்டிருந்த ஒவ்வொருவரும், தாங்கள் சொல்லக்கூடிய கருத்துகளை எல்லாரும் கேட்பார்கள் என்ற எண்ணத்தில், சமூகத்திலும் நாட்டிலும் நடக்கக்கூடிய தீமைகளைப் புட்டுப்புட்டு வைத்தார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் பொறுமையாகப் பதிவுசெய்துகொண்டிருந்த நிருபரோ, நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களிடம், “உங்களில் யாராவது ஒருவர் உங்களைச் சுற்றிலும் இந்த சமூகத்திலும் நாட்டிலும் நடக்கக்கூடிய நல்ல செயல்களைப் பற்றிச் சொல்வீர்கள் என்று நினைத்தேன்… யாருமே அவற்றைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை நினைக்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மனிதர்களைப் போன்றுதான் நாம் நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய நல்ல செயல்களை, நல்ல மனிதர்களைப் பற்றிப் பேசுவதே இல்லை; குறைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டே இருக்கின்றோம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எவ்வளவோ வல்ல செயல்களைச் செய்திருக்கும்பொழுது, அவற்றையெல்லாம் பார்த்து, அவர் இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளாத மக்கள்கூட்டம், அவரிடம் மீண்டுமாக அடையாளம் ஒன்று கேட்கின்றது. இதற்கு இயேசுவின் பதில் என்னவாக இருந்தது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவிடம் சிலர் அடையாளம் கேட்டல்
ஆண்டவராகிய இயேசு தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்றவராய் சென்ற இடங்களில் எல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10: 38). குறிப்பாக அவர் பார்வையற்றவர்களுக்குப் பார்வையும் கால் ஊனமுற்றவர்களுக்கு நடக்கக்கூடிய வலுவினையும் தொழுநோயாளர்களுக்கு நலமும் அளித்து வந்தார். இவையெல்லாம் மெசியா இப்பூவுலகிற்கு வந்துவிட்டார் என்பதற்கான அடையாளங்கள் (எசா 35: 6). இப்படியிருந்தபொழுதும் சிலர் இயேசுவிடம், நீர் இறைமகன்தானா என்பதை நிரூபிக்கும் வகையில் அடையாளம் ஒன்றைத் தாரும் (லூக் 11: 16) என்று கேட்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களுக்குத் தக்க பதிலளிக்கின்றார்.
யோனாவை விடப் பெரியவர் இயேசு
தன்னிடம் அடையாளம் கேட்டவர்களிடம் இயேசு உடனே அடையாளத்தை நிகழ்த்திக் காட்டவில்லை. மாறாக, யோனாவின் அடையாளத்தைத் தருகின்றார். யோனா பெரிய மீனின் வயிற்றில் மூன்று இரவும் மூன்று பகலும் இருந்தார். அதுபோன்று தானும் பூமியின் வயிற்றில் இருந்துவிட்டு, மூன்றாம் நாள் உயர்த்தெழுவேன் என்று இயேசு யோனாவை அடையாளமாகத் தருகின்றார். மேலும் இறைவாக்கினர் யோனா அசிரியர்களின் தலைநகரான நினிவேவில் வாழ்ந்து வந்த பிற இனத்து மக்களுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்தார். அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனே சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனம்மாறினார்கள்; ஆனால், இயேசுவோ இறைவாக்கினர் யோனாவை விடப் பெரியவர். அப்படியிருந்தும் மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்டு மனம்மாறாததும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாதது மிகவும் வருத்தமாக இருக்கின்றது.
சாலமோனை விடப் பெரியவர் இயேசு
ஆண்டவர் இயேசு தன்னிடம் அடையாளம் கேட்டவர்களிடம் இறைவாக்கினர் யோனாவின் அடையாளத்தைத் தந்ததோடு நின்றுவிடாமல், இன்னொருவருவரையும் எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். அவர்தான் சேபா நாட்டு அரசி. செபா நாடாது தெற்கு அரேபியாவில் உள்ள சிறிய நாடு. இந்நாட்டைச் சார்ந்த அரசி சாலமோன் மன்னரின் ஞானத்தைக் கேட்டு, அவரைத் தேடி வருகின்றார் (1 அர 10: 1-10) ஆனால், ஆண்டவர் இயேசுவோ சாலமோன் மன்னரைவிடப் பெரியவர். அப்படியிருந்தபொழுதும் மக்கள் அவரைத் தேடி வராததும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாததும் மிகவும் வியப்பாக இருக்கின்றது.
இன்றைக்குகூட ஒருசிலர் கண்முன்னால் இருக்கக்கூடிய அல்லது உள்ளூரில் இருக்கக்கூடிய கோயிலுக்குப் போகாமல், எங்கோ இருக்கின்ற கோயிலுக்கு அல்லது திருத்தலங்களுக்குப் போவது மிகவும் வியப்பாக இருக்கின்றது. அவர்கள் திருத்தலங்களுக்குப் போகிறார்கள் என்று சொல்வதை விடவும் ஏதாவது ஒரு பெரிய அதிசயத்தைக் கண்டுவிடலமா என்பதாகத்தான் இருக்கின்றது அவர்களுடைய எண்ணமெல்லாம். இப்படிப்பட்டோர் அதிசயத்தைத் தேடி அலைபவர்களாக இல்லாமல், இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்கள் இருக்கக்கூடிய இடத்தில் வாழ்வது நல்லது.
சிந்தனை.
‘உலகை வெல்வது நமது நம்பிக்கையே’ (1 யோவா 5: 4) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கக்கூடிய அவநம்பிக்கையையும் எப்பொழுதும் தவற்றை மட்டுமே பார்க்கக்கூடிய போக்கையும் அப்புறப்படுத்திவிட்டு, இறைவனிடம் நம்பிக்கையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.