தபசு காலத்தின் முதல் ஞாயிற்றுக்குப் பின்வரும் செவ்வாய்க்கிழமை 7-ம் நாள் தியானம்

இயேசுநாதர் தமது செபத்தை முடித்து அப்போஸ்தலர்களுக்குத் திடன் சொல்லுகிறார்.
1-ம் ஆயத்த சிந்தனை
இயேசுநாதர் தமது அப்போஸ்தலர்களை நோக்கி “நீங்கள் இப்போது நித்திரை செய்து இளைப்பாறுங்கள்” என்று சொல்லுகிறதைக் கேட்பதாகப் பாவித்துக்கொள்.
2-ம் ஆயத்த சிந்தனை
இவ்வுலக சந்தோஷ பாக்கியங்களை நாம் நாடாமல் அவைகளை வெறுத்துத் தள்ளும்படிக்கான நல்ல மனதை நமக்கு அளிக்கும்படி மன்றாடுவோமாக.
தியானம்
“நீங்கள் இப்போது நித்திரை செய்து இளைப்பாறினது போதும், நேரம் வந்திருக்கின்றது. இதோ மனுமகன் பாவிகளுக்குக் கையளிக்கப்படப் போகிறார்” என்றார்.
இயேசுநாதர் தமது சீஷர்களுக்கு இளைப் பாறும்படி சுற்றுநேரம் விடைகொடுத்த போதிலும், உடனே அவர்களைப் பார்த்து “போதும் எழுந்திருங்கள்” என்று கட்டளையிடுகிறார். ஓ! இவ்வுலகத்தின் சுகபோகம் முதலிய சகலவித சந்தோஷ பாக்கியங்கள் எவ்வளவு சொற்பம்! இப்பிரபஞ்சத்திலுள்ள செல்வபாக்கிய மகிமை அதிகாரம், சுகபோகம் முதலிய சகலவித சந்தோஷங்களை அநேக காலமாகச் சுகித்து வந்த போதிலும், இவையெல்லாம் நித்திய பேரின்பத்துக்கு முன் ஒன்றுமில்லாமை என்பது நிச்சயம்.
ஆகையால் நீ உன் உயிர் பிழைப்பதற்கு அவசரமான காரியங்களைத் தவிர வேறே சுய பிரியத்தைத் தேட வேண்டாம். இப்பூலோகமானது சகல மனிதருக்கும் விசேஷமாய்த் துறவறத்தாருக்கும் போர்க்களமாய் இருப்பதினால், நமது சுபாவமானது சந்தோஷத்தையும் உலக ஆறுதலையும் அல்லது மகிமை அதிகார முதலியவைகளையும் நாடும்போது அதற்கு இடங்கொடாமல் நமக்குச் சர்வேசுரன் கொடுத்திருப்பதே போதுமென்று திருப்தியடைந்திருப்போமாக.
நாம் நமது சுபாவத்துக்குப் பலவந்தம் செய்யாமல் அது போகிறபடி விட்டுவிடுவோமாகில் கடிவாளமற்ற துஷ்ட மிருகமானது தன்மேல் ஏறி இருப்பவனைக் கீழே விழத்தாட்டுவது போல, நமது கெட்டுப்போன சுபாவமும் அவ்விதமே நமது ஆத்துமத்தை நரக நெருப்பில் விழத்தாட்டும். ஆகையால் நமது சரீரம் கிரமமற்ற காரியங்களுக்குப் பிரியப்படும்போது, கடிவாளமாகிய ஒறுத்தலினால் அதைக் கீழ்ப்படுத்தப் பிரயாசைப்படுவோமாக. நாம் இவ்விதமாய் நமது சரீரத்தை நாள்தோறும் அடக்கி ஒடுக்கப் பழகுவோமாகில், “ஆ! என் சரீரமே, இத்தனை வருஷகாலமாய் நீ உனக்குப் பலவந்தம் செய்து உன் ஆத்துமத்துக்குக் கீழ்ப்படிந்து வந்தபடியால், இதோ உன் சம்பாவனை காலம் நெருங்கி வந்தது” என்று சொன்ன ஒர் மகாத்துமாவைப்போல் மரண சமயத்தில் அவ்வாக்கியத்தை உச்சரிக்கும்படியான பாக்கியம் நமக்கும் கிடைக்கும்படி வறுத்தலென்கிற கடிவாளத்தால் நமது சரீரத்தை அடக்குவோமாக.
“எழுந்திருங்கள், போவோமாக. இதோ என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்திருக்கிறான்” என்றார். கொஞ்ச நேரத்துக்குமுன் சொல்லி முடியாத கஸ்தி வியாகுலங்களுக்கு உள்ளாகி மரண அவஸ்தைப்பட்டு இரத்த வேர்வை வேர்த்து அங்குமிங்கும் அசைய முதலாய்ச் சத்துவமின்றிக் தரையில் விழுந்திருந்த நமதாண்டவர் இதோ தமது சீஷர்களுக்கும் தைரியம் சொல்லி “எழுந்து போவோம்” என்கிறார். நமது பாவம்களுக்கு உத்தரிக்கும் பொருட்டு அவர் ஒருவரே தமது இரத்தத்தைச் சிந்தப் போகிறார். அப்படியிருக்க ஏன் அவர் அப்போஸ்தலர்களைப் பார்த்து எழுந்து போவோம் என்கிறார்? நமது பேரில் அவருக்குள்ள நிகரில்லாத அன்பின் நிமித்தம் நிர்ப்பந்தம் உபாதை முதலியவைகளை அனுபவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோமென்று காட்ட அல்லவா?
ஆகையால் என் ஆத்துமமே, உனது நித்திரை முதலிய அசமந்தத்தையும், அகங்கார சிலாக்கியத்தையும், தான் என்கிற கர்வத்தையும் விட்டெழுந்து உன் ஆண்டவரைப் பின்பற்றும் நேரம் சமீபித்தது, ஆகையால் எழுந்து போவாயாக. நாம் அனுபவிக்கும் துன்ப வருத்தங்களும் சிறுமை அவமான முதலிய சோதனைகளும் சர்வேசுரனால் நமக்கு அனுப்பப்படுகிறதென்றும், அவைகளைப் பொறுமையோடு அநுபவிப்பதற்கான சகாயம் செய்யும்படி நம்மோடு கூடச் சர்வேசுரன் இருக்கிறாரென்றும் காட்டும் பொருட்டு “எழுந்து போவோம்” என்கிறார்.
ஆகையால், என் பிரிய நேசனே, உன் ஞானக் கிருத்தியங்களைச் செய்வதற்கு மணிச்சத்தம் கேட்கும் போதும், உனக்கு மனமில்லாத இடத்துக்கு உன் பெரியோர்கள் உன்னை அனுப்பும்போதும், இழிவான அல்லது வருத்தமான தொழில் உனக்குக் கொடுக்கும் போதும், இப்படியே உன் சுபாவத்துக்கு விரோதமான யாதோர் காரியம் சம்பவிக்கும் பாதும் எழுந்து போவோமென்கிற இந்தத் தேவ வாக்கியத்தை உன் ஞாபகத்தில் வைக்கக் கடவாய்.
ஜெபம்
ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவே, உமது கசப்பான திருப்பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம். ஆமென்.
பரிசுத்த திருக்குடும்பமே எங்களை புண்ணிய வாழ்வு வாழ வழிநடத்துங்கள்
ஆமென்
இயேசு கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே தொடர்ந்து இந்த தவக்கால நாட்கள் தியானம் ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும் இந்த தியானங்களை பக்தியோடு தியானித்து நம் வாழ்வை மாற்றுவோம் – ஆமென்

Comments are closed.